தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/பசி எடுக்காதது கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்

பசி எடுக்காதது கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்

பசி எடுக்காதது கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்


PUBLISHED ON : ஜன 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று புற்றுநோய் பலரையும் பாதித்து வருகிறது. காரணம், வாழ்க்கை முறை மாற்றங்கள் என்கின்றனர் டாக்டர்கள். குறிப்பாக, உட்கொள்ளும் உணவே அனைத்துக்கும் காரணம் என்கிறார் ஜெம் கேன்சர் சென்டர் டாக்டர் சிவக்குமார் குப்புசாமி. புற்றுநோய் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார் இவர்.

இந்தியாவில் செரிமான மண்டல புற்றுநோய்களின் தற்போதைய நிலை என்ன?

இந்தியாவில் கல்லீரல், கணையம் மற்றும் குடலைப் பாதிக்கும் புற்றுநோய்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. துரித உணவு, மதுபானம், புகையிலை பயன்பாடு அதிகரிப்பு மற்றும் பாரம்பரிய காய்கறி, நார்ச்சத்து உணவு குறைதல் போன்றவை முக்கிய காரணங்கள்.

கல்லீரல் பித்த உற்பத்தி, நச்சுக்களை வடிகட்டுதல் போன்ற, 500க்கும் மேற்பட்ட முக்கிய செயல்களை செய்கிறது. கணையம், இன்சுலின் மற்றும் செரிமான நொதிகளை உற்பத்தி செய்கிறது. இந்த உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஆரம்பத்தில் கண்டறிவது அவசியம்.

புற்றுநோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?

பெரும்பாலான மக்கள் ஆரம்ப அறிகுறிகளை தவறவிடுகின்றனர். அமைதியான எச்சரிக்கை என்பதால் தெரிவதில்லை. பசியின்மை மிகவும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஓர் அறிகுறி. தவிர, நீண்ட நாள் வயிறு வீக்கம், காரணமில்லாத அதிக எடை இழப்பு, அடிக்கடி வயிறு வலி, திடீர் நீரிழிவு, வெளிறிய அல்லது வெள்ளை மலம், மலத்தில் ரத்தம் போகுதல், மஞ்சள் காமாலை இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் அலட்சியம் கூடாது.

யாருக்கு இந்நோய் பாதிப்பு அதிகம்?

குடும்பத்தில் புற்றுநோய் யாருக்காவது ஏற்பட்டு இருந்தால், 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள், புகைப்பிடித்தல், மது போன்ற பழக் கங்கள், உடல் பருமன் உள்ளவர்கள் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு அதிகம் உண்பவர்களுக்கும் ஆபத்து அதிகரிக்கிறது.

மஞ்சள் காமாலைக்கு பாரம்பரிய மருந்துகள் எடுக்கலாமா?

மஞ்சள் காமாலையில் இரண்டு வகை உள்ளன. கல்லீரல் சேதத்தால் ஏற்படும் ஹெபாட்டிக் காமாலை மற்றும் பித்த நாள அடைப்பால் ஏற்படும் தடுப்புக் காமாலை. தடுப்புக் காமாலைக்குக் கீழாநெல்லி போன்ற பாரம்பரிய மருந்துகளை எடுப்பது ஆபத்தானது, ஏனெனில் அது உடல்ரீதியான அடைப்புகளை அகற்றாது. புற்றுநோய் பாதிப்பை கண்டறிவதை தாமதப்படுத்திவிடும்.

ஆரம்பத்தில் கண்டறிந்தால் முழுமையாக குணமடையலாமா?

ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், 90 சதவீதம் உயிர்வாழும் வாய்பை அளிக்கிறது. ஒரு சில மாதங்கள் தாமதிப்பது பாதிப்பை இறுதி நிலைக்கு விரைவில் கொண்டு சென்றுவிடும்.

புற்றுநோய் பாதிப்பை தடுக்க என்னதான் செய்யவேண்டும்?

புற்றுநோய் பாதிப்பு என்பது திடீரென்று வருவதல்ல. நம் வாழ்வியல் முறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். உணவு, உடற்பயிற்சி, துாக்கம், போன்றவற்றில் கவனமுடன் இருக்க வேண்டும். 40 வயதுக்கு பின்னர் பாதிப்புகள் இல்லை என்றாலும் பரிசோதனைகளை டாக்டர்கள் வழிகாட்டுதல் படி செய்துகொள்வது நல்லது. வாழ்வியல் மாற்றமே பல நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

தீவிர நோய் பாதிப்புகளுடன் பலர் வர காரணம் என்ன?

உடலில் ஏதேனும் வலி, புண் போன்ற சின்ன அறிகுறிகள் இருக்கும்போதே டாக்டர்களை அணுக வேண்டும். மருத்துவ உதவியை தாமதமாக நாடுவதும், ஏதோ புண் என நினைத்து மாதக்கணக்கில் சுயமருந்து எடுத்துக்கொள்வதும் தவறானது. மஞ்சள் காமாலை போன்ற பெரிய பாதிப்புகள் வந்து மருத்துவமனை செல்ல கட்டாயப் படுத்தும் வரை தள்ளிப்போடுகின்றனர். மருத்துவ பரிசோதனைகளை ஒருபோதும் தள்ளிப்போடக்கூடாது.

- skumar_mch@yahoo.co.in

98441 27862.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us