PUBLISHED ON : ஏப் 19, 2026

பல மூலிகைகள் சேர்ந்த கூட்டு ஆயுர்வேத மருந்தான 'காஞ்சனார குக்குலு'வில், துவர்ப்பு சுவையுள்ள, கட்டிகளை கரைக்கும் தன்மை கொண்ட மந்தாரை மரத்தின் பட்டை, வறட்சி, குளிர்ச்சி ஆகிய இரு குணங்களையும் கொண்டது
சுக்கு, மிளகு, திப்பிலி சேர்ந்த திரிகடுகம் இது. காரத் தன்மை உடையதால், உடலுக்கு நல்ல சூட்டை தரும். எனவே, கழிவுகளை வெளியேற்றும். பொதுவாக சளி, இருமல், நாள்பட்ட காய்ச்சல், கிருமி தொற்று போன்ற நோய்களுக்கு, திரிகடுகத்தை உபயோகிப்போம்.
உடலின் திசுக்கள் நலிவடையும் போது, அதை புதுப்பித்து, உடலை சீராக்கும் ஆன்டி 'ஆக்சிடன்ட்'டான திரிபலா, உடல் பருமனை குறைக்கக் கூடியது.
அடுத்தது, வருணம் எனப்படும் கபத்தை வெளியேற்றும் மாவிலங்க மரப்பட்டை, செரிமானத்தை மேம்படுத்தும் வாசனை பொருட்களான பட்டை, ஏலம், பத்திரம் போன்ற மூலிகைகளுடன், உடல் பருமன், வலியைப் போக்கும் தாவரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய குக்குலு என்ற பிசினும் சேர்ந்தது தான் காஞ்சனார குக்குலு என்ற ஆயுர்வேத மருந்து.
எந்தெந்த நோய்களுக்கு பயன்படுத்தலாம்?
உடல் பருமனோடு கூடிய ஹைப்போதைராடிசம், பைப்ராய்டு எனப்படும் சதைக் கட்டிகள், கருக்குழாய் அடைப்பு, கேன்சர் அல்லாத மார்பக கட்டிகள் இருந்தால், ஆரம்ப நிலையில், உணவு கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
இது தவிர, மாதவிடாய் சிக்கல்கள், நீண்ட நாட்கள் சர்க்கரை கோளாறு உள்ளவர்கள், சிறுநீர் பாதையில் தொற்று இருப்பவர்கள், கேன்சர் நோயாளிகள் தங்கள் சிகிச்சையுடன் சேர்த்து, காஞ்சனார குக்குலுவை பயன்படுத்துவது சிறந்த துணை மருந்தாக அமைகிறது.
அவரவர் உடல் தன்மை, தேவைக்கு ஏற்ப ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே இதை உபயோகிக்க வேண்டும்.
டாக்டர் கு.சுடர்கொடி, ஆயுர்வேத மருத்துவர், உதவி மருத்துவ அதிகாரி, அரசு ஆரம்ப சுகாதார மையம், திருப்பூர்.94448 54993sudarkkodi78@gmail.com

