
வினோதினி, மதுரை: சிறு வயதில் இருந்தே கடவாய் பல் அருகே சிறிய சதை உள்ளது. வலியில்லை, வளரவும் இல்லை. அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டுமா?
ஞானபற்கள் முளைக்கும் போது சிலருக்கு வரும் 'பெரிகொரோனைடிஸ்' என்னும் பிரச்னை தான் இது. இப்பற்கள் முழுவதுமாக முளைக்க தாடை எலும்பில் இடம் இல்லாத நிலையில், இதுபோல பாதி முளைத்ததோடு நின்று விடும். ஆரம்பநிலையில் அந்த பல்லை சுற்றியுள்ள ஈறுகளில் அழுத்தம் ஏற்படும். இதனால் அவை சிவந்து வீங்கி இருக்கும். அதனோடு சேர்த்து இந்த வீங்கிய ஈறுகளின் அடியில் நாம் சாப்பிடும் உணவும் தங்கி விடும். இதனால் அந்த இடத்தில் வீக்கத்தோடு வலியும் வரும். உடனடியாக பல்லை எடுக்க வேண்டியதில்லை.
முதலில் உங்கள் வயதிற்கேற்ப ஞான பல் முளைத்துள்ளதா என்பதை எக்ஸ்ரே பரிசோதனையில் பார்க்க வேண்டும். சரியான அளவு முளைத்திருப்பதோடு, தாடை எலும்பில் பல்லிற்கான இடமும் இருந்தால் அந்த இடத்தை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இருமுறை கிருமிநாசினி கலந்த 'மவுத்வாஷ்' பயன்படுத்த வேண்டும். இதிலும் ஈறுகளின் வலி சரியாகவில்லையென்றால் அந்த பல்லின் மேல் உள்ள ஈறுகளை மட்டும் நீக்கி விட வேண்டும். அப்போது பல் மெதுவாக முளைத்து வந்து விடும். அப்படியும் பல் முளைக்காதவர்களுக்கு இந்த பல் தொடர்ந்து பிரச்னை கொடுத்துக் கொண்டே இருந்தால் பற்களை அகற்ற வேண்டும்.
- டாக்டர் அனுஷா கண்ணபெருமான், பல் சீரமைப்பு நிபுணர், மதுரை
குப்புசாமி, ஒட்டன்சத்திரம்: எனக்கு வயது 45 ஆகிறது. கடந்த 20 ஆண்டுகளாக புகை பிடித்து வருகிறேன். இதனால் எனக்கு இதய நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டா?
புகையிலையில் உள்ள நிக்கோட்டின் ரத்த நாளங்களை சுருக்கி ரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் உயர்த்துகிறது. கார்பன் மோனாக்சைடு ஆக்ஸிஜன் சப்ளையை குறைக்கிறது. தார் மற்றும் ரசாயனங்கள் நாளங்களில் கொழுப்புத் தட்டு சேர்த்து அத்தெரோ ஸ்கிளிரோசிஸ் உண்டாக்குகின்றன. புகை பிடிக்காதவர்களும் பிறரின் புகையிலை புகையை சுவாசிப்பதால் இதயம், மூளை, நுரையீரல் நோய்களின் அபாயத்தில் சிக்குகிறார்கள்.
புகை பிடிப்பதினால் இதயத்திற்கு ரத்தம் தரும் நாளங்களின் சுவர் கிழிந்து மாரடைப்பு அல்லது திடீர் மரணம் ஏற்படும். இளம் வயதினரில்(45 வயதுக்குள்) புகை பிடிப்பவர்களுக்கு அத்தெரோ ஸ்கிளிரோசிஸ் இல்லாமல் கூட திடீர் இதய மாரடைப்பு அல்லது திடீர் மரணம் ஏற்படும். புகைப்பழக்கம் இதயம், மூளை, நுரையீரல் போன்ற அனைத்தையும் பாதிக்கிறது.
- டாக்டர் ரகுராமன், பொது மருத்துவம், இதயநோய் சிறப்பு நிபுணர், ஒட்டன்சத்திரம்
கோபி, அல்லிநகரம்: எனது 2 வயது குழந்தை சளி தொந்தரவால் பாதிக்கப்பட்டுஉள்ளது. சில நேரங்களில் சாப்பிட்டதையும் வாந்தி எடுக்கிறது. எதனால் வாந்தி எடுக்கிறது, எவ்வாறு தவிர்க்கலாம்?
குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் சளி, இருமல் தொந்தரவால் பாதிக்கப்படலாம். காய்ச்சல் உள்ளதா என பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம், டாக்டர் பரிந்துரை இன்றி மாத்திரை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்து டாக்டரிடம் செல்லாமல் மாத்திரை மட்டும் எடுத்து வந்தால் உடல்நிலை மோசமடையலாம். இதனை தவிர்க்க குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு வழங்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்கள் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தைகள் அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை சரியான நேரத்தில் போட வேண்டும். இரு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து சளி, இருமல், எடை குறைதல் இருந்தால் காசநோய் ஆரம்பமாக இருக்கலாம். சளி, இருமல், சுவாச பிரச்னை ஏற்படும் போது சில நேரம் சாப்பிட்ட உணவை வாந்தி எடுப்பார்கள்.
- டாக்டர் கவிப்பிரியா, நகர் நல அலுவலர், தேனி அல்லிநகரம் நகராட்சி, தேனி
சு.மாரியப்பன், ராமநாதபுரம்: எனக்கு கடந்த ஓராண்டாக மூட்டு வலி உள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். சமீப காலமாக நீண்ட நேரம் நிற்க முடியாத அளவுக்கு வலி உள்ளது. இதனை மருந்தில் சரிசெய்ய என்ன செய்வது?
சமீப காலமாக 40 முதல் 50 வயதிலேயே மூட்டு வலி வருவது சாதாரணமாகி விட்டது. ஹோமியோபதியில் மூட்டு வலிக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் எளிதில் தீர்வு காணலாம். காயங்களால் ஏற்படும் வலிகளுக்கு ஆர்னிகா, கஸ்டிகம் மருந்துகளும், தேய்மானம் காரணமாக ஏற்படும் வலிகளுக்கு கவுல்தாரியா, மெடோரினம் மருந்து வழங்கப்படுகிறது. பெண்களை அதிகம் பாதிக்கும் முடக்குவாதம் போன்ற நோய்களுக்கு, ரஸ்டாக்ஸ், பிரையோனியா, பெல்லடோனா மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். ஹோமியோபதி மருந்துகள் ஒவ்வொருவரின் தனிதன்மை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதனால் மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகள் எடுத்துக்கொள்ள கூடாது. சரியான மருந்து எடுத்துக்கொண்டால் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி மூட்டு வலியில் இருந்து விடுதலை பெற முடியும்.
- டாக்டர் கீதாலெட்சுமி, ஹோமியோபதி மருத்துவ அலுவலர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
அ.சண்முகசுந்தரம், சிவகங்கை: தற்கொலை எண்ணம் மனநோயின் அறிகுறியா?
தற்கொலை எண்ணம் வருவதே மனநோயின் வெளிப்பாடு தான். மன அழுத்தம், பிரச்னைகளை எதிர் கொள்ளும் திறமை இல்லாதது, எதிர்பார்ப்புகளை மீறி நடக்கும் விஷயங்களை கண்டு பதட்டம், எதிர்காலம் குறித்த பயம், இதுபோன்ற எதிர்மறை எண்ணங்கள் தீவிரமாகும் போது மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை எண்ணம் வருகிறது. ஒருவர் 30 வயதிற்குள் வீடு, கார் போன்றவை வாங்கியே ஆக வேண்டும் என்பது அடிப்படை தேவைகளாகி விட்டன. மன நிம்மதி, மகிழ்ச்சி என்பது பொருட்கள் சார்ந்ததாக ஆகி, எல்லா விஷயத்திலும் மற்றவர்களை ஒப்பிட்டு பார்த்து, வசதி என்று நாம் நினைக்கும் விஷயங்களை அடைய முடியாவிட்டால் தோற்று விட்டோம் என்ற எண்ணம் வந்து விடுகிறது. இது தற்கொலையை துாண்டும் முக்கிய காரணி. மது பழக்கம் இருந்தால் தற்கொலை எண்ணம் ஏற்பட வாய்ப்புள்ளது.
நல்ல மதிப்பெண் பெற்றால் தான் எதிர்காலம் என மாணவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. மதிப்பெண் குறைந்தால் எதிர்காலமே போய்விட்டது என்ற அச்சத்திலும், தற்கொலை முடிவு எடுக்கின்றனர். தற்கொலை உட்பட எந்தவிதமான எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டாலும் உறவினர், நண்பர்களிடம் பிரச்னையை பேச தயங்கக் கூடாது. பெற்றோர், உறவினர், நண்பர் என்று யாரிடம் தயங்காமல் நம்மால் பேச முடிகிறதோ அவர்களிடம் முதலில் பேச வேண்டும். பெற்றோரின் பங்கு இதில் முக்கியமானது. குழந்தைகள் எந்த நிலையிலும் தங்கள் பிரச்னைகளை மறைக்காமல், தயங்காமல் பேசும் அளவிற்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கித்தர வேண்டும். இது முதலுதவி சிகிச்சை போல் தான். அடுத்தக்கட்டம் இந்த எண்ணம் இருப்பவரை மனநல டாக்டரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண வேண்டும்.
- டாக்டர் முகமது ரபி, மனநல மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி, சிவகங்கை
முத்துக்குமார், மல்லாங்கிணர்: எனக்கு 45 வயதாகிறது, கால்களில் நரம்பு சுருள் அதிகமாக இருப்பதால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. இதற்கான சிகிச்சைகள் முறைகள் என்ன?
வெரிகோஸ் வெயின்ஸ் என்ற நரம்பு சுருள் பாதிப்பு கால்களில் ரத்த நாளங்கள் வீங்கி, சுருண்டு கொள்வதால் ஏற்படுவது. நீண்ட நேரம் நின்று வேலை செய்பவர்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்களை அதிகமாக பாதிக்கிறது. கால்வலி ஏற்படுதல், கால் கனமான உணர்வு வருதல் அறிகுறிகளாகும். பாதிப்புகள் அதிகரித்தால் காலப்போக்கில் கால் தோலின் நிறம் கருப்பாக மாறி காலில் புண், ரத்தக்கசிவு பிரச்னைகள் வரும். நோய் பாதிப்பை தவிர்க்க தினசரி உடற்பயிற்சி, உடல் எடை குறைத்தல், நீண்ட நேரம் நின்று வேலை செய்வதை தவிர்த்தல் அவசியம். ஓய்வு எடுக்கும் போது கால்களை உயர்த்தி வைத்தல், காம்ப்ரஷன் ஸ்டாக்கிங்ஸ் என்ற சிறப்பு உள்ளாடைகள் அணிவது பயனளிக்கும்.
பாதிப்புகள் தீவிரமாகும் போது அறுவை சிகிச்சை செய்வது சிறந்தது. இந்த அறிகுறிகளுடன் கூடிய பாதிப்புகள் இருந்தால் மருத்துவரை அணுகி ரத்த ஓட்டத்திற்கான ஸ்கேன் பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும்.
- டாக்டர். தி. வரதீஸ்வரி, அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விருதுநகர்