sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரைக் கேளுங்கள்

/

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : நவ 16, 2025

Google News

PUBLISHED ON : நவ 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவிந்தன், மதுரை: புகை அதிகம் உள்ள இடம், அதிகமாக காற்று வீசும் இடத்திற்கு செல்லும் போது சில வினாடிகள் மூச்சு திணறல் வருவது போல் இருக்கிறது. பின்பு சரியாகிறது. இதற்கு காரணம் என்ன?

புகை மற்றும் வேகமாக காற்று வீசும் போது காற்றினில் புகை, துாசி, மாசு, வேதிப் பொருட்கள் போன்றவை கலந்து நுரையீரலுக்குள் செல்லும். நுரையீரலினுள் உள்ள காற்றுக்குழாய், காற்றுப்பைகளை பாதித்து அழற்சி ஏற்படுத்தி சுவாசக் குழாய்களை சுருக்கும். சில நேரங்களில் சளி உற்பத்தியை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தை பாதித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னை பெரிதாகும் போது சில நேரங்களில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை குறைத்து, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு அளவை அதிகரித்து சுவாச செயல்பாட்டை குறைத்து மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிக்க வாய்ப்புகள் உண்டு.

புகையினில் செல்லும் போது தற்காலிகமாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்றால் உங்களுக்கு ஆரம்பகட்ட சுவாச நோய் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. மார்பக எக்ஸ்ரே மற்றும் நுரையீரல் செயல்பாட்டு திறன் (ஸ்பைரோமெட்ரி) மூலம் நுரையீரல் செயல்திறனை அறிந்து கொள்ளலாம். புகை உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணியும் போது ஓரளவு பாதிப்பை குறைக்க இயலும்.

- டாக்டர் பி.பிரேம் ஆனந்த், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை

சி.முருகன், சின்னாளபட்டி: டாக்டரால் சில மாதங்களுக்கு முன் பரிந்துரைத்த மருந்து சீட்டுகள் அடிப்படையில், ஆன்ட்டிபயாட்டிக், காய்ச்சல், சளி மருந்துகளை தற்போது எடுத்துக் கொள்வது சரியா?

பழைய மருந்து சீட்டுகளை பயன்படுத்தி சிகிச்சை பெறுவது தவறான செயல். ஆபத்தான பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தற்போதைய உடல் நல பிரச்னை முந்தைய நோயிலிருந்து முற்றிலும் மாறுபடலாம். முந்தைய தொற்றுக்கு காரணமான கிருமிகள், தற்போதைய பிரச்னைக்கு காரணமாக இருக்க வாய்ப்பு குறைவு. ஆன்ட்டிபயாட்டிக், பாக்டீரியா தொற்றுகளுக்கு மட்டுமே வேலை செய்யும். காய்ச்சல், சளி பெரும்பாலும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படலாம்; ஆன்டிபயாட்டிக் பயனளிக்காது. காலாவதியான, நீண்ட நாட்களாக வைத்திருந்த மருந்துகள், அவற்றின் வீரியத்தை இழந்து பலனளிக்காமல் சிகிச்சை தோல்வி அடையலாம்.

தேவையற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதால், பாக்டீரியா கிருமிகள் மருந்துக்கான எதிர்ப்பு சக்தியை பெற்று விடும். எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட கிருமி, தொற்றின்போது மருந்து பலனளிக்காமல் கல்லீரல் பாதிப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். நல்ல பாக்டீரியாக்களையும் இவை அழிப்பதால் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, தோல் அரிப்பு, முகம், நாக்கு, தொண்டை வீக்கம், மூச்சுத்திணறல் போன்ற சிரமங்களை ஏற்படுத்தும். காலாவதி மருந்துகள் நச்சுக்களாக மாறி, சிறுநீரகத்தை பாதிக்கலாம். பாராசிட்டமால் போன்ற மருந்துகள் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, கல்லீரல் பாதிப்பு, தலை சுற்றல், வாந்தி, துாக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம். சளி மருந்துகளில் உள்ள சில பொருட்கள், ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் மற்ற மருந்துகளுடன் வினை புரிந்து சிக்கலை ஏற்படுத்தலாம்.

- டாக்டர் ஜெ.காமராஜ், பேராசிரியர், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி

ஆர்.நிரஞ்சனாதேவி சின்னமனுார்: எனக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. தாய்ப்பால் வழங்கி வருகிறேன். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குழந்தைக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்கிறது. மேலும் குழந்தைக்கு மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் ஏற்படுவதால் குழந்தை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறது. என்னைப்போன்ற இளம் தாய்மார்கள் இதில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு சளி பாதிப்பு ஏற்படுவது இயல்புதான் என்றாலும், இன்புளுயன்ஷா தடுப்பூசியை குழந்தைக்கு செலுத்த வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும். பெற்றோர் கவனமாக ஆட்கள் அதிகம் உள்ள இடங்களுக்கு குழந்தையை துாக்கி செல்வதை தவிர்க்க வேண்டும். மழை காலங்களில் பிறர் தும்மும் போதும், குழந்தையை பிறர் முத்தமிடும் போதும் கூட எதிர்ப்பு சக்தி குறைவால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பாகிவிடும். குறிப்பாக தொட்டில், படுக்கையில் சிறுநீரால் ஏற்பட்ட ஈரப்பதம் இருந்தாலும் காற்றில் கிருமி தொற்று குழந்தையை பாதிக்கும்.

அதனால் சிறுநீர் கழித்தவுடன் துணிகளை மாற்றிட வேண்டும். தடுப்பூசி செலுத்திய பின்பும் தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், சளி தொந்தரவு இருந்தால் டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம்.

- டாக்டர்.பிரபாகரன், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர், அரசு மருத்துவமனை, போடி

கே.சரண்யா, ராமநாதபுரம்: எனது 4 வயது குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறுவை சிகிச்சை இல்லாமல் சரிசெய்ய முடியுமா?

இயற்கையாக எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தை கட்டி வைத்தால் 6 வாரத்தில் எலும்பு சேர்ந்து விடும். இதை சாதகமாக எடுத்துக் கொண்டு பலர் நாட்டுக்கட்டு முறையை செய்து வருகின்றனர். அவ்வாறு சேரும் எலும்பு ஏற்கனவே இருப்பதை போல் சேராமல் சிறிது விலகினாலும், அதன் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

குழந்தைகளுக்கு 12 வயது வரை எலும்பு முறிவு ஏற் பட்டால் வேகமாக சேர்ந்து விடும். அதனால் டாக்டரின் அறிவுரை இல்லாமல் நாட்டு வைத்தியம் முறையில் கட்டுவதால் எலும்பின் இணைப்பு பாதிக்க வாய்ப்பு உள்ளது. எலும்பு முறிந்து அதிகமாக விலகியிருந்தால் மட்டும் தான் அறுவை சிகிச்சை செய்யப்படும். இல்லையென்றால் மாவு கட்டு முறையில் சரி செய்ய முடியும்.

கைக்குழந்தைகளை ஒரு கையில் துாக்குவது, கால்களை பிடித்து இழுப்பது போன்றவற்றை செய்யக் கூடாது. இதனால் குழந்தைகளின் எலும்பு பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

-டாக்டர் வ.து.ந.மதிவாணன், துணை பேராசிரியர், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்



ம.சக்திவேல், சிவகங்கை: வைரஸ் காய்ச்சல் ஏன் பரவுகிறது?



தட்ப வெப்பநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதன் தாக்கத்தால் தான் சளித்தொல்லையுடன் கூடிய காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்டோரில் 10 சதவீதம் பேருக்கு வயிற்று போக்கு உள்ளது. எனவே லேசான காய்ச்சல் வந்தாலும் டாக்டர்களின் ஆலோசனை பெற வேண்டும். அலட்சியம் காட்டினால் சிக்கலாகி விடும். பொதுவாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பனிக் காலத்தால் பாதிப்பு வரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். அதிகாலை, மாலை நேரங்களில் வெளியே விட வேண்டாம். 60 வயதுக்கு மேற்பட்டோர் பனிக்காலத்தில் அதிகாலை நடைபயிற்சியை கைவிடுவது நல்லது. தலையில் மப்ளர் கட்டிக்கொள்வது, ஸ்வெட்டர் அணிவது அவசியம். அலட்சியம் காட்ட வேண்டாம். மார்புச்சளி உருவாகி, மூச்சுத் திணறும் நிலை வரும்.

பூச்சிகளால் பாதிப்பு வரலாம் என்பதால் ஜன்னலில் தடுப்பு வலை அமைப்பது நல்லது. லேசான காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

சிவக்குமார், சிவகாசி: எனக்கு 37 வயதாகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளேன். வைரஸ் காய்ச்சலாக இருக்குமோ என அச்சமாக உள்ளது. தொற்றுநோய் போல பரவுமா?

காலநிலை மாற்றத்தில் காய்ச்சல் வருவது இயல்பு. தற்போது வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. சிறிய காய்ச்சல் வந்த உடனேயே துவக்கத்திலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும். எப்போதும் சுட வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். தொடர்ந்து இருமல் வரும்போது காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

- டாக்டர் அய்யனார், தலைமை டாக்டர், சிவகாசி அரசு மருத்துவமனை






      Dinamalar
      Follow us