
சாதனா, மதுரை: எனது மூன்றரை வயது குழந்தைக்கு அடிக்கடி சளி, இருமல் ஏற்படுகிறது. இதை எப்படி தவிர்ப்பது?
இந்த வயதில் சராசரியாக ஆண்டிற்கு 6 முதல் 8 முறை இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படும், அவை மூக்கடைப்பு, ஜலதோஷம், தொண்டை எரிச்சல், இருமல், சளியாக வெளிப்படும். நோய் எதிர்ப்புத் தன்மை முழுமையாக இல்லாததால் குளிர்காலங்களிலும், பருவ மாற்றங்களிலும் இந்த பிரச்னைகள் தீவிரமாகும். குழந்தைகளுக்கு கைகளை சுத்தமாக கழுவ கற்றுக் கொடுக்க வேண்டும். முகக்கவசம் பயன்படுத்த கற்றுக் கொடுக்கலாம். அசுத்தமான இடங்களில் குழந்தைகளை அதிக நேரம் விளையாட விட வேண்டாம்.
உடல் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த பச்சை காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட பழக்க வேண்டும். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தையின் விளையாட்டு பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். உரிய காலத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவினை சரிபார்த்து இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை டாக்டர் பரிந்துரைப்படி கொடுக்க வேண்டும். மீண்டும் மீண்டும் காய்ச்சல் அல்லது இருமல், மூச்சு கோளாறு இருந்தால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.
- டாக்டர் முருகன் ஜெயராமன், குழந்தைகள் நல சிறப்பு நிபுணர், மதுரை
என்.நாகபிரியதர்ஷினி கொடுவிலார்பட்டி: எனக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. அதிகாலை தண்ணீர் பிடிக்கவும், மார்கழி பூஜை களுக்கு செல்லும் போதும் அதீத பனி கொட்டுகிறது. இதில் இருந்து குழந்தை யையும், என்னையும் தற்காத்து கொள்ள ஆலோசனை கூறுங்கள்?
அதிக பனியால் உடல் குளிர்ச்சி அடையும். நமது உடல் சுற்றுச்சூழலின் வெப்பநிலையைச் சமன் செய்வதற்காக முயற்சிக்கும். அப்போது உடலில் உள்ள வெப்பம் வெளியேறி, வெப்பத்தை தக்க வைக்க ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் கை, கால்கள் குளிர்ச்சி அடைகின்றன. காய்ச்சல், சளி போன்ற தொற்று நோய்கள் நேரத்தில் உடல் தன்னை தற்காத்துக் கொள்ள வெப்பநிலையை உயர்த்தும்போதுதான் நடுக்கம் உள்ளிட்ட எதிர்வினைகள் ஏற்படுகின்றன.
குழந்தைகளை காலை, மாலை, இரவில் வெளியில் துாக்கிச் செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நேரங்களில் குழந்தையின் கால்களில் சாக்ஸ், உடலில் ஸ்வட்டர், தலை, காது மறைத்து குல்லா அணிந்து கொள்ளலாம். வெதுவெதுப்பான நீரை காய்ச்சி பருக வேண்டும்.
பெண்கள் தலை, கை, கால்களில் காட்டன் துணிகளால் ஆன கையுறைகளை, கால்களுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். குளிர்ந்த காற்று, குளிர்ந்த நீரில் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படும் என்பதால் பாதுகாப்பு அவசியம். இதனை உணர்ந்து இளம் தாய்மார்கள் மார்கழி, தை மாத பனி காலங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
- டாக்டர் செல்வக்குமார், தலைவர், குழந்தைகள் சிகிச்சைத்துறை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தேனி
ச.கருணாகரன், ராமநாதபுரம்: அடிக்கடி வயிற்று வலி ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கவும் சிரமமாக உள்ளது. சிறுநீரகம் செயலிழந்திருக்கும் என சிலர் அச்சுறுத்துகின்றனர். எதனால் இதுபோன்ற பிரச்னை வருகிறது?
இன்றைய அவசர உலகில் பலர் தண்ணீர் குடிப்பதை கூட மறந்து விடுகின்றனர். இதனால் சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட்டு வயிறு வலி ஏற்படும். வெப்பமான இடத்தில் பணிபுரிபவர்களுக்கும், தண்ணீர் அதிகம் குடிக்காதவர்களுக்கும் தான் பெரும்பாலும் பிரச்னை வருகிறது. நார்ச்சத்து அதிகமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கல் பெரிதாக இருந்தால் கிருமி தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாள் கவனிக்காமல் இருந்தால் சீறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்பு உள்ளது. 8 மி.மீ., அளவு வரை கல் இருந்தால் மருந்து மூலம் குணப்படுத்த முடியும். அதுவே 10 மி.மீ., அளவை தாண்டினால் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும். தற்போது லேசர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
- டாக்டர் முல்லைவேந்தன், உதவி பேராசிரியர், அறுவை சிகிச்சைப் பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
ஆர்.மீனலோச்சனி, சிவகங்கை: பனிக்காலமாக இருப்பதால் குழந்தைகளுக்கு எவ்விதமான பாதிப்பு ஏற்படும், எப்படி அவர்களை பாதுகாப்பது?
குழந்தைகளுக்கு இக்கால கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் சளி, இருமல், வைரஸ் காய்ச்சல், கொசு மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா, வயிற்று போக்கு, மூச்சு தொற்று ஏற்படும். இவை பெரும்பாலும் வைரஸ், பாக்டீரியா தொற்று மூலம் பரவக்கூடியது. தொடர் காய்ச்சல், சாப்பிடமறுத்தல், அதிக சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, வயிற்றுபோக்கு அதிகம் இருந்தால் காலதாமதமின்றி சிகிச்சை பெற வேண்டும்.
குழந்தைகளின் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். பழம், காய்கறி, கீரை, முட்டை, பால் போன்றவற்றை தினமும் கொடுக்க வேண்டும். நன்கு காய்ச்சிய நீரை சூடு குறைந்ததும் பருக கொடுக்க வேண்டும். உரிய நேரங்களில் 'இன்ப்ளூயன்சா' தடுப்பூசி போடுவதே குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும்.
- டாக்டர் ராஜா, குழந்தைகள் நல சிறப்பு நிபுணர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
கி.கமலா, ராஜபாளையம்: எனக்கு 41 வயதாகிறது. கடந்த ஐந்து மாதங்களாக மாதவிடாயின் போது தொடர்ந்து அதிக ரத்தப்போக்கு இருந்து வருகிறது. அன்றாட வாழ்க்கை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்வது?
பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு இதுபோன்ற அறிகுறி என நினைக்கின்றனர். இதனால் சிகிச்சைக்கு வராமல் ரத்த சோகை ஏற்பட்டு தாமதமாக வருகின்றனர். இயல்பை விட வலி, ரத்தப்போக்கு ஏற்பட்டாலும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை அவசியம். இதனால் நடைமுறை வாழ்க்கை பாதிப்பதுடன், ரத்த சோகை, சோர்வு, பதட்டம் ஏற்படும்.
கர்ப்பப்பை சதை வளர்ச்சி, வீக்கம், சினை முட்டை உருவாகும் இடத்தில் பிரச்னை, இது எதுவுமே இன்றி ஹார்மோன் மாறுபாடு இவற்றில் எது என கண்டறிய வேண்டும். அப்போதுதான் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள முடியும். இதற்கு சாதாரண ரத்த சோதனை, ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
- டாக்டர் உமா ஜெய பாஸ்கர், மகப்பேறு மருத்துவர், பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவமனை, ராஜபாளையம்

