sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரைக் கேளுங்கள்

/

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : பிப் 01, 2026

Google News

PUBLISHED ON : பிப் 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்தமிழ்ச்செல்வி, மதுரை: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என்ன வகையான காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும்?

புரதம் நிறைந்த உணவுகள், இரும்புச்சத்து, கால்சியம், போலிக் அமில மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். சோயா, பால், பட்டாணி, இறைச்சி, பருப்பு, முழுதானியங்கள், காய்கறி, பழங்கள் போன்ற உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயம், கீரை, கசகசா, ஆரஞ்சு, பூண்டு, எள்ளு, முட்டை, பனீர், மீன், பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டால் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும். குளிர்பானங்கள், துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தாய்ப்பாலுடைய கலவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆரம்பத்தில் சுரக்கும் தாய்ப்பாலில் (சீம்பால்) புரதம், நோய் எதிர்ப்புச் சத்துகள் நிறைந்திருக்கும். 2 முதல் 5 நாட்கள் வரை இதுபோன்று பால் சுரக்கும். அதன் பின் 3 வாரங்கள் சுரக்கும் இடைநிலை பாலில் லாக்டோஸ் கொழுப்பு அதிகமாக இருக்கும். 3 வாரம் முதல் 6 மாதம் வரை தாய்ப்பாலின் தன்மை சீராக இருக்கும். ஒவ்வொரு முறை பால் கொடுக்கும்போதும் அதன் தன்மை மாறுபடும். ஆரம்பத்தில் சுரக்கும் பாலில் லாக்டோஸ் நிறைந்துள்ளதால் குழந்தையின் தாகம் தணியும். இறுதியில் சுரக்கும் பாலில் கொழுப்பு நிறைந்துள்ளதால் குழந்தையின் பசியை போக்கி எடை அதிகரிக்க உதவும்.

- டாக்டர் முருகன் ஜெயராமன், குழந்தை நல சிறப்பு நிபுணர், மதுரை.



பிரபா, ஒட்டன்சத்திரம்: எனக்கு வயது 32. பிரசவம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறது. தற்போது அதிகமாக முடி உதிர்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன?


பிரசவத்திற்கு பின்னர் வரக்கூடிய முடி உதிர்வு, 90 சதவீத பெண்களுக்கு நிகழ்வது. பிரசவத்திற்கு பின்பு 2 முதல் 4 மாதங்களில் ஆரம்பித்து ஒரு வருடம் வரை நீடிக்கும். இதற்கு முக்கிய காரணம் கர்ப்பமாக இருக்கும் போதும் அதற்கு பின்னரும் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் தான். இந்த ஹார்மோன் மாற்றத்தால் கர்ப்பத்தின் போது ஆனஜென் (வளர்ச்சி அடையும்) கட்டத்தில் இருக்கும் முடிகள் பிரசவத்திற்கு பின்பு டெலோஜன் (முடி உதிரும்) கட்டத்திற்கு மாறுகிறது. பெரும்பாலும் ஒரு வருடத்திற்குள் முடி உதிர்தல் குறைந்து முடி வளர்ச்சியும் பழைய நிலைமைக்கு திரும்பும்.

ஒருவேளை அளவு கடந்து முடி உதிர்வு, வழுக்கை ஏற்படும் அளவுக்கு இருந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம். சத்து குறைபாடு, உடல் , மனச்சோர்வு, துாக்கம் உள்ளிட்டவைகளை சரி செய்தாலே இயல்பு நிலைக்கு திரும்பும்.

வேதிப்பொருட்கள் குறைந்த ஷாம்பு பயன்படுத்த வேண்டும். முடிக்கு ஹீட்டர் போடுவது, முடியை அழுத்தம் கொடுத்து இழுத்துச் சீவுவதை கைவிட வேண்டும். சத்தான காய்கறிகள், உலர்ந்த பழங்கள், கீரை வகைகள், புரதச் சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். தோல் மருத்துவரை அணுகினால் சத்து மாத்திரை , முடி உதிர்வை கட்டுப்படுத்தும் எண்ணெய்யை பரிந்துரை செய்வார்.

- டாக்டர் ராஜராஜன் தங்கராஜ், தோல், முடி, லேசர் சிறப்பு சிகிச்சை நிபுணர், ஒட்டன்சத்திரம்.

எஸ்.மீனாகுமாரி, சின்னமனூர்: எனது மகளுக்கு அடிக்கடி தலைவலி வருகிறது. எண்ணெய் தேய்த்து குளித்தால் தலைவலி தீருமா...?

மூக்குத்தண்டு வளைந்திருத்தல், கண்பார்வை குறைபாடு, ரத்த அழுத்தம், மூளை நரம்பு நோய் என பல்வேறு காரணிகளால் தலைவலி ஏற்படலாம். எண்ணெய் தேய்த்து குளிப்பதால் தலைவலியை போக்கலாம். ஆண்கள் ஞாயிறு, பெண்கள் வெள்ளிக்கிழமையில் எண்ணெய் தேய்த்து குளிக்க சித்த மருத்துவத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உடல் சூடு உள்ளவர்கள் கீழாநெல்லி தைலம், சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் பீனிச தைலம், நாசி ரோக நாசத்தைலம், மைக்ரேன் தலைவலி உள்ளவர்கள் கொம்பரக்கு தைலம் போன்ற எண்ணெய்களை தேய்த்து குளிக்கலாம். இது போன்ற எண்ணெய் குளியல்களை முறைப்படி செய்தால் தலைவலி தீரும்.

- டாக்டர் எம். ஜமீல் பானு, சித்த மருத்துவர், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், கோம்பை.

கே.சதீஷ்குமார், ராமநாதபுரம்: எனக்கு 40 வயதாகிறது. ஓராண்டாக மூட்டு வலி உள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். சமீப காலமாக நீண்ட நேரம் நிற்க முடியாத அளவிற்கு வலி ஏற்படுகிறது. இதற்கு எப்படி நிரந்தர தீர்வு காண்பது?

மூட்டு வலி இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். சிலர் சுயமாக தைலம், மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர்.

தைலம் தற்காலிகமாக வலியை போக்குமே தவிர நிரந்தர தீர்வாகாது. வலி நிவாரணி மாத்திரை தொடர்ந்து எடுப்பதால் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புள்ளது. எலும்பு தேய்மானம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிய வேண்டும்.

தேய்மானத்தை பொறுத்து மாத்திரை அல்லது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். சிறுதானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள் அதிகம் உண்பது சிறந்தது. இதனால் இளம் வயதில் மூட்டு வலி பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

- டாக்டர் வ.து.ந.மதிவாணன், துணை பேராசிரியர், எலும்பு முறிவு சிகிச்சை, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்.



ராஜேஷ், சிங்கம்புணரி: நடை பயிற்சி எவ்வளவு நேரம் மேற்கொள்ள வேண்டும்?


தினசரி 40 நிமிடம் உடம்பில் வியர்வை வரும் அளவிற்கு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். மூன்று மாதத்திற்கு நடை பயிற்சி மேற்கொண்டால் உடலில் பல்வேறு மாற்றங்களை உணரலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும்.

தேவையில்லாத கலோரியை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நடை பயிற்சி அவசியமாக கருதப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடைபயிற்சி மிகுந்த பயன் தருவதோடு, அவர்கள் முடிந்த அளவிற்கு வெள்ளை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வெள்ளை சர்க்கரை, உப்பு, அரிசி உள்ளிட்டவற்றை உணவில் தவிர்த்து விட்டு சிறு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- டாக்டர் சிவக்குமார், எலும்பியல் நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை



கந்தசாமி, ராஜபாளையம்: எனக்கு 50 வயதாகிறது. கடந்த மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து தற்போது வீட்டில் இருந்தபடி மருத்துவ பரிசோதனைக்கு சென்று வருகிறேன். உடல் தளர்ந்துள்ளதாக உணர்கிறேன். இதனால் அன்றாட வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏற்படுகிறது. தீர்வு வேண்டும்?


பக்கவாதத்திற்கு கட்டுப் பாடற்ற ரத்த அழுத்த பாதிப்பால் மூளை நரம்பில் ஏற்படும் சிக்கல் காரணமாகும். 'கோல்டன் ஹவர்' காலத்தில் தாமதப்படுத்தாமல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்ந்ததால் தற்போது முழு பாதிப்பிலிருந்து தப்பி உள்ளீர்கள். தினசரி பிசியோ தெரபி, மருத்துவ தொடர் ஆலோசனை, உணவு கட்டுப்பாடு, நடை பயிற்சி பின்பற்ற வேண்டும்.

பொதுவாக ஒருமுறை பக்கவாதம் வந்த நபருக்கு மீண்டும் அடைப்பு போன்ற பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் தினசரி வாழ்க்கை முறையில் மாற்றம் மேற்கொள்வது அவசியம்.

ஆரோக்கிய மனநிலையுடன் தேவையான சோதனைகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மேற்கொண்டால் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

- டாக்டர் கு.கணேசன், பொது மருத்துவர், ராஜபாளையம்.






      Dinamalar
      Follow us