sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

டாக்டரைக் கேளுங்கள்

/

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : மார் 15, 2026

Google News

PUBLISHED ON : மார் 15, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்கையர்க்கரசி, மதுரை: திடீர் வயிற்று வலிக்கு என்ன காரணம். சில நேரங்களில் வலி தானாகவே சரியாகிறது?

திடீர் வயிற்று வலிக்குக் காரணங்கள் அதிகம். அல்சர் துளை ஏற்பட்டால் நெஞ்சுக்குழியில் கடுமையான வலி தொடங்கி வயிறு முழுவதும் பரவும். வாந்தி ஏற்படும். வயிறு உப்பும். ஓபன் சர்ஜரிதான் இதற்கு தீர்வு. குழந்தை முதல் நடுவயது வரை உள்ளவர்களுக்கு குடல்வால் அழற்சி (அப்பெண்டிசிட்டிஸ்) பாதிப்பு அதிகம். வயிற்றுவலி தொப்புளை சுற்றி ஆரம்பித்து வலது அடிவயிற்றில் நிலைகொள்ளும். மிதமான காய்ச்சலும் வாந்தியும் வரலாம். லேப்ராஸ்கோப்பி சிகிச்சையில் எளிதாக குடல்வாலை நீக்கமுடியும்.

குடலில் துளை விழுந்தாலோ, அடைப்பு ஏற்பட்டாலோ தொப்புளைச் சுற்றி கயிறு கட்டி இறுக்குவது போல் வலிக்கும். அடிவயிறு முழுவதிலும் மந்தமான வலி இருக்கும். வாந்தி கடுமையாகும். வயிறு இறுகிவிடும். அறுவை சிகிச்சை அவசியம். குழந்தைகளுக்கு, குடலுக்குள் குடல் செருகும் போது வயிற்றுவலி, வாந்தி, கருஞ்சிவப்பு நிறத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படும். சர்ஜரி தான் தீர்வு.

மதுவின் பாதிப்பே கணைய அழற்சி. நெஞ்சுக்குழியில் வலி ஆரம்பித்து முதுகுக்குப் பரவும். குனிந்தால் வலி குறையும்; படுத்தால் வலி அதிகரிக்கும். வாந்தி வரும், வயிறு உப்பும். மருந்து சிகிச்சைக்குக் கட்டுப்படும். பித்தப்பை அழற்சி, கற்கள் இருந்தால் வலதுபக்க மேல் வயிற்றில் வலி ஆரம்பித்து முதுகு வரைக்கும் சென்று தோள்பட்டையில் நிலைகொள்ளும். ஓபன் சர்ஜரியிலும் லேப்ராஸ்கோப்பி முறையிலும் பித்தப்பையை நீக்கலாம்.

சிறுநீரகக் கற்கள் இருந்தால் முதுகில் வலி உண்டாகி முன் வயிற்றுக்குப் பரவும். சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால் அடிவயிற்றில் வலி தோன்றி பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால் தொப்புளுக்குக் கீழ் வலி துவங்கி சிறுநீர் வெளித் துவாரம் வரை பரவும். நீர்க்கடுப்பு, வாந்தி இருக்கும். இ.எஸ்.டபிள்யூ.எல்., சிகிச்சையில் கற்களை உடைக்கலாம். வயிற்றைப் பிளக்காமல் சர்ஜரி செய்தும், யூரெட்டிரோஸ்கோப் மூலமும் கற்களை அகற்றலாம்.

கருக்குழாய், சினைப்பை நீர்க்கட்டி வெடிப்பு இருந்தால் அடிவயிற்றில் திடீரென வலி தொடங்கும். அடிவயிறு முழுவதும் மந்தமான வலி இருக்கும். வாந்தி வரும். கருக்குழாய் வெடிப்பின்போது பெண் பிறப்புறுப்பில் ரத்தம் வெளியேறும். உடனே சர்ஜரி செய்ய வேண்டும்.

- டாக்டர் கு. கணேசன், பொது மருத்துவ நிபுணர், ராஜபாளையம்.

ராதா, மன்னவனுார்: ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்த நிலையில் இடுப்பு வலி அடிக்கடி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன?

பொதுவாக பெண்களுக்கு பிரசவம் இயல்பாக நடக்காத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்துவது வழக்கம். இருந்த போதும் இதனால் இடுப்பு வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. இதை தவிர்க்க பிரவசத்திற்கு பின் பெண்கள் சுண்ணாம்பு சத்து,இரும்பு சத்து மாத்திரைகளை இரு ஆண்டுகள் இடைவிடாமல் உட்கொள்ள வேண்டும்.முதுகுத்தண்டு தசையை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை டாக்டர் அறிவுரையின் படி மேற்கொள்வதன் மூலம் இதை தவிர்க்கலாம்.

- பொன்ரதி, தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, கொடைக்கானல்

செல்வராணி, சின்னமனுார்: எனது தாயாருக்கு 'ஹார்ட் அட்டாக்' வந்தது. எனக்கு வருமா. இது பரம்பரை நோயா?

'ஹார்ட் அட்டாக்' எப்போது ஏற்படும் என யாராலும் கணிக்க முடியாது. அதிகாலையில் பலருக்கு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், படபடப்பு, பயம், கோபம் ஆகியவற்றால் வரும். படபடப்பு, இடது பக்க மார்பு வலி, தலை சுற்றல் இருந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி என உறுதியாக கூற முடியாது. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் பயப்படாமல் டாக்டரை அணுகி இதய நோய் சிறப்பு பரிசோதனை செய்வது அவசியம். குறிப்பாக 'எக்கோ' பரிசோதனை செய்யலாம்.

இதயநோய் ஏற்படாமல் தவிர்க்க சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு, புகைப் பிடிப்பது, மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. ரத்த கொதிப்பை கட்டுக்குள் வைத்திருந்தால் இதய நோயிலிருந்து தப்பிக்கலாம். இது பரம்பரை நோய் என்பதற்கான அறிவியல் பூர்வமாக உறுதி செய்யவில்லை. ஆனால் குடும்பத்தில் தாய் அல்லது தந்தைக்கு இருந்தால், பிள்ளைகள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உணவில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். இறைச்சி உணவை தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு அவசியமாகும். பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.

- டாக்டர் சையது சுல்தான் இப்ராகிம், சர்க்கரை மற்றும் இதய நோய் சிறப்பு நிபுணர், கம்பம்.



ராகேஷ்வர்மா, ராமநாதபுரம்: எனக்கு வயது 45. கம்ப்யூட்டர் டிசைனிங் பணி செய்கிறேன். இரவில் சரியாக துாங்க முடியல்லை. நன்றாக துாங்க என்ன செய்ய வேண்டும்?


கம்ப்யூட்டர், டிவி., அலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துவது துாக்கம் வராமல் இருப்பதற்கு முக்கிய காரணம். நன்றாக துாங்க வேண்டுமானால் வாரத்தில் ஒரு நாளில் உடலில் எண்ணெய் தேய்த்து அரைமணி நேரம் வெயில் படும்படி இருக்க வேண்டும். மேலும் விட்டமின் 'டி' பெற வாழை இலை குளியல் எடுத்தால் நன்றாக துாக்கம் வரும்.

ஒரு டம்பளர் தண்ணீர் குடித்து விட்டு லேசான ஆடை அணிந்து உடலை நனைத்து வீட்டின் மாடியில் வாழை இலையில் படுத்துவிட வேண்டும். இரு வாழை இலையை உடலில் கட்டி விட வேண்டும். ஒரு மணி நேரம் வரை வெயிலில் இருக்க வேண்டும். வாழையின் குளிர்ச்சியில் வெப்பம் தெரியாது. இவ்வாறு செய்தால் அன்று இரவு அடித்துப் போட்ட மாதிரி துாக்கம் வரும்.

தினமும் குளிர்ந்த தண்ணீரில் இருவேளை குளிக்க வேண்டும். உணவில் கண்டிப்பாக உப்பு தேவையான அளவு சேர்க்க வேண்டும். மோர், எலுமிச்சை பானங்களில் உப்பு சேர்க்க வேண்டும். நன்றாக துாங்கினால் நோய் நம்மை நெருங்காது.

- டாக்டர் எல்.டி.ஷர்மிளா, யோகா இயற்கை வாழ்வியல் மையம், ஆரம்ப சுகாதார நிலையம், புதுமடம், ராமநாதபுரம்.



அ.கண்ணன்,சிவகங்கை: துாசியுள்ள இடத்திற்கு செல்ல முடியவில்லை. ஒவ்வாமையால் தலைவலி, எவ்வாறு சரி செய்வது?


ஒவ்வாமை காரணமாக ஏற்படும் நாசி அழற்சி துாசி, உணவு பொருட்கள், வாசனை திரவியங்களால் மூக்கின் உட்பகுதி வீக்கம் அடைந்து தும்மல், மூக்கு நீர் வடிதல், மூக்கு அடைப்பு ஏற்படுகிறது. பின்னர் அடிக்கடி தும்மல், மூக்கில் அல்லது கண்களில் அரிப்பு, கண்களில் நீர் வருதல், சிலருக்கு தலைவலி அல்லது முகத்தில் அழுத்தம் ஏற்படும். இவ்வாறு இருந்தால் துாசி உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது, குளிர்ந்த காற்று உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். செல்லப்பிராணி வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். படுக்கை விரிப்பு, தலையணையில் துாசி படராமல் கவனிக்க வேண்டும். இந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மூக்கு நீர் மஞ்சள் அல்லது பச்சை நிறமாக இருந்தால், காய்ச்சல் அல்லது கடுமையான தலைவலி இருந்தால் சிகிச்சை பெறவேண்டும்.

- டாக்டர் கிஷன்குமார், உதவி பேராசிரியர், காது மூக்கு தொண்டை பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.

சந்திரா, விருதுநகர்: எனது குழந்தை எடை குறைவாக இருப்பது குறித்து கவலையாக உள்ளது. என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும்?

குழந்தை எடை குறைவாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று சாப்பாடு குறைவாக எடுத்துக் கொள்வது, மற்றொன்று குடலில் கீரிப்புழுக்கள் இருப்பதால் எடை கூடாது. 6 மாதத்திற்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் குடல் புழு நீக்க மாத்திரைகளை பயன்படுத்தலாம். தற்போது வெயில் காலம் துவங்கி உள்ளதால் நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும். தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் தயிர் சேர்க்க வேண்டும். இதனால் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி பசியை துாண்டும். காய்கறிகள் சேர்க்க வேண்டும். வாரத்தில் இரு முறை சிக்கன், மீன், மட்டன் கொடுக்க வேண்டும். காலை, மாலை பசும்பால் சேர்க்க வேண்டும்.

- டாக்டர் தேன்முருகன், குழந்தைகள் நல மருத்துவர், காரியாபட்டி.






      Dinamalar
      Follow us