
முத்துக்குமரன், மதுரை: வயதாகும் போது மூக்கின் நுகர்வு திறன் குறையுமா. 70 வயதான எனக்கு சிலவற்றின் மணத்தை நுகர முடியவில்லை?
70 வயதிற்குப் பிறகு வாசனை இழப்பு மிகவும் பொதுவானது. வாசனை நரம்பணுக்கள் படிப்படியாக குறைவது தான் காரணம். இது தவிர வேறு சில காரணங்களும் உண்டு. நரம்பு சிதைவு நோய்கள் என அறியப்படும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களுக்கு வாசனை இழப்பு ஒரு முக்கிய அறிகுறி. நீண்டகாலமாக சுவாச ஒவ்வாமையும் ஒரு காரணம். சைனசிடிஸ் அல்லது கோவிட் தொற்றுக்குப் பிந்தைய உடல்நிலை மாற்றத்தினால்கூட இது நிகழலாம். சில நேரங்களில் இது நாம் உட்கொள்ளும் மருந்துகளால் கூட ஏற்படலாம். குறிப்பாக மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் வாசனை இழப்பை ஏற்பட செய்யும். இதனை 'நாசல் எண்டோஸ்கோபி', எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன் அல்லது வாசனை பரிசோதனை மூலம் கண்டறியலாம்.
இது போன்ற பிரச்னைகளுக்கு எலுமிச்சை, ரோஜா மற்றும் யூகலிப்டஸ் போன்ற நறுமணங்களைப் பயன்படுத்தி வாசனை பயிற்சி அளித்து அதன் மூலம் சரிசெய்யலாம். இந்த பயிற்சியின் போது புகைப்பதை தவிர்க்க வேண்டும். உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். 'நாசல் அலர்ஜி', சைனஸ் தொந்தரவு இருந்தால் மருத்துவ முறையில் மற்றும் அறுவை சிகிச்சை முறையில் சரிசெய்யலாம்.
- டாக்டர் பி. மீனா பிரியதர்ஷினி, காது மூக்கு தொண்டை சிறப்பு நிபுணர், மதுரை
மாரிமுத்து, மேட்டுப்பட்டி: ஓராண்டுக்கு முன்பு மலச்சிக்கலுக்காக மருந்து சாப்பிட்டேன். உடல்நிலை சீராகிவிட்டதாக கருதி 4 நாட்களுக்கு பின் மருந்தை நிறுத்தியபோது மீண்டும் பிரச்னை தலைத்துாக்கியது. இதனால் அதற்கடுத்த ஒரு வாரம் இரவு மட்டும் மலச்சிக்கலுக்கு டானிக் குடித்தேன். ஆனால் இதுவே தொடர் கதையாகிவிட்டது. தற்போது டானிக் குடிக்கவில்லை என்றாலும் மீண்டும் மலச்சிக்கல் ஏற்படுவதாக உணர்கிறேன். தினமும் இரவு துாங்குவதற்கு முன்பு ஒரு மூடி டானிக் குடித்தால் மட்டுமே மறுநாள் காலையில் சிரமமின்றி கழிப்பறையை பயன்படுத்த முடிகிறது. ஓராண்டுக்கு மேலாக இப் பிரச்னையில் சிக்கி தவிக்கிறேன். இதற்கு தீர்வுதான் என்ன?
மாறுபட்ட உணவுப் பழக்கவழக்கத்தாலும் உடலில் நார்சத்து இல்லையென்றாலும் மலச்சிக்கல் உருவாகும். அன்றாட உணவில் மைதா சம்பந்தப்பட்ட புரோட்டா, பேக்கரி உணவுகள், ரொட்டி வகைகளை தவிர்க்க வேண்டும். கிழங்குகள், நார்சத்து மிக்க உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் சாப்பிடலாம். கருணைக்கிழங்கு சாப்பிடுவது மலச்சிக்கலை தீர்ப்பதற்கான எளிய வழி. ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து மலச்சிக்கல் மருந்து குடிப்பது வழக்கமாக உள்ளதென்றால் நிச்சயம் மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்வது நல்லது. அடிப்படையில் உணவுப்பழக்கம் மாறுவதால் உண்டாகும் மலச்சிக்கல் நாளடைவில் உடலில் பல்வேறு நோய்களுக்கும் வழிவகுக்கும்.
- டாக்டர் முத்துராஜ், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திண்டுக்கல்
ஏ.கார்த்திக், ராமநாதபுரம்: எனக்கு 20 வயதாகிறது. 4 மாதங்களுக்கு முன்பு ரத்த தானம் செய்தேன். தற்போது எனது குடும்பத்தில் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. மீண்டும் ரத்த தானம் செய்வதால் ஏதேனும் பாதிப்பு வருமா?
ரத்த தானம் வழங்குபவருக்கு 18 வயது முடிந்திருக்க வேண்டும். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்வது உடல் நலத்திற்கு நல்லது. அதனால் பாதிப்பு வராது. ரத்த தானம் செய்பவரின் உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டும் தான் ரத்தம் வழங்க முடியும்.
ஏதேனும் நோய் இருந்தாலோ, தொடர்ச்சியாக மருந்து எடுத்து வந்தாலோ ரத்தம் வழங்க முடியாது. ஒவ்வொரு முறையும் ரத்ததானம் செய்யும் போது உடல் நலம் நன்றாக உள்ளதா என சோதிக்கப்படும். ரத்தம் சுத்தகரிக்கப்படுவதால் தானம் வழங்குபவரின் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தொடர்ச்சியாக ரத்தம் கொடுக்கும் போது இதய நோய்கள், புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக அறிவியல் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டாக்டர் எம். மணிமொழி, உதவி பேராசிரியர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
க.சரவணக்குமார், சிவகங்கை: எனக்கு வயது 35. சில நேரங்களில் பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படுகிறது. தடுக்க என்ன செய்ய வேண்டும்?
ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு ஆரோக்கியமற்ற, நோயுற்ற ஈறுகளுக்கான அறிகுறி. இதற்கான காரணங்களை சரி செய்ய வேண்டும், பற்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். பொதுவாக பற்கள் துலக்கும் போதோ அல்லது பல் இடுக்கை சுத்தம் செய்யும் போதோ ரத்தக்கசிவு ஏற்படலாம். ஈறுகள் வீக்கம் கடுமையாகும் போதும் அது கீழ் தாடை எலும்பு வரை செல்லும்போது ரத்தக் கசிவு அதிகமாகும்.
ஈறுகள் மற்றும் பற்கள் சந்திக்கும் இடங்களில் பிளேக் உருவாவதினால் நோய்தொற்று ஏற்படுதல். பிரசவ காலத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கூட ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடு, நீரிழிவு நோயினாலும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். எதனால் ரத்தகசிவு ஏற்படுகிறது என்று தெரிந்த பின்பு அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- டாக்டர் ஜெ.விஜயபாரத், அரசு மருத்துவர், தாலுகா மருத்துவமனை, காளையார்கோவில்
கணேசன், ஸ்ரீவில்லிபுத்துார்: எனக்கு 53 வயதாகிறது. அடிக்கடி சளி, இருமல் ஏற்படுகிறது. இரவில் துாங்கும் போது தும்மல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
அலர்ஜி, சைனஸ் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். செயற்கை குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். ஒவ்வாத உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முத்துச்சிப்பி, பவளம், தாழிச்சாதி போன்ற சித்த மருந்துகளை டாக்டர்களின் அறிவுரைப்படி எடுக்க வேண்டும்.
- டாக்டர் சந்திரசேகரன், அரசு மருத்துவர், ஸ்ரீவில்லிபுத்துார்

