PUBLISHED ON : ஜூன் 07, 2026

கயல்விழி, மதுரை: மார்பக புற்றுநோயால் பெண்கள் பாதிக்கப் படுகின்றனரே. மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க, என்னமாதிரியான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்?
பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் 28 சதவீதம் மார்பக புற்றுநோய்தான். உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்வது, முறையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது, புகைபிடித்தல், மது அருந்துவதை தவிர்ப்பது, ஹார்மோன் மாத்திரைகளை அளவோடு டாக்டர் ஆலோசனையுடன் எடுப்பது போன்றவை புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கும். தவிர 40 வயதிற்கு பிறகு மாதாமாதம் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் முடிந்த சில நாட்களிலேயே செய்து கொள்வது நல்லது. விரல் நுனியில் அல்லாமல் மார்பகத்தை உள்பக்கமாக அழுத்தி பார்த்து ஏதேனும் வித்தியாசமாகவோ, கட்டி மாதிரியோ தெரிந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே கண்டு பிடித்தால் முழுமையாக குணப்படுத்த முடியும். கர்ப்பப்பை வாய்புற்று நோய் போல் இதற்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- டாக்டர் ரேவதி ஜானகிராம், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர், மதுரை.
ஆனந்தன், ஒட்டன்சத்திரம்: எனக்கு 45 வயதாகிறது. குதிகால் வலி, அடி பாதம் வலி வருவதன் காரணம் என்ன?
குதிகால் வலி அடிப்பாத வலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம் பாதத்தின் அடிப்பகுதி நார்த் திசு தேய்மானம் ஆவதால் வருகிறது. இதற்கு காரணம் பாதத்தின் அடிப்பகுதி நார்த் திசு பகுதியில் காயங்கள் ஏற்படுதல், உடல் பருமன், வெகு நேரம் நிற்பது, மிகவும் அதிக நேரம் நடப்பது, அடிக்கடி மாடிப் படி ஏறுவது , மலைகள் ஏறுவது. காலை எழுந்தவுடன் முதல் சில அடிகள் வலி தரும். இதற்கு 95 சதவீதம் ஓய்வு, உடல் எடை குறைத்தல், உடற்பயிற்சி, ஐஸ் மசாஜ், வலி நிவாரணி, இயன்முறை வைத்தியம் ஆகியவற்றில் சரியாகிவிடும். ஐந்து சதவீதம் ஊசி, சிகிச்சை தேவைப்படும்.
- டாக்டர் வி.ஆர்.சரவணபிரியன், ஒட்டன்சத்திரம்.
வனிதா, பெரியகுளம்: எனது அக்கா மகளுக்கு கடந்தாண்டு திருமணம் நடந்தது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். முதுகு வலியால் அவதிப்பட்டவருக்கு நடந்த சோதனையில் முதுகுப் பகுதியில் புற்றுநோய் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை பிரசவிப்பு முறையை எவ்வாறுமேற்கொள்ளலாம்?
ஆரம்பகட்டத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதால் சிகிச்சை அளிப்பது எளிது. புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்க வேண்டும். குழந்தைக்கு எடை அதிகரிக்கும் வரை 'இன்குப்பெட்டர்' மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்க கூடாது. சம்பந்தப்பட்ட கர்ப்பிணி மன பதட்டத்தை தவிர்க்க வேண்டும். இதுவும் கடந்து போகும் என்ற நிலையில் சிகிச்சையை துவங்குங்கள். தாயும், சேயும் நலமுடன் சிகிச்சை பெறுவதற்கு உயர்தர மருத்துவ வசதிகள் உள்ளன.
- டாக்டர் பாரதி. புற்றுநோய் சிகிச்சை நிபுணர், மாவட்ட அரசு மருத்துவமனை பெரியகுளம்.
கலாராணி, சாயல்குடி: பருவநிலை மாறும் போது ஏற்படும் நோய்கள் எவை. அதற்கான தீர்வு என்ன?
பொதுவாக பருவநிலை மாறும் போது ஒவ்வொருவருக்கும் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. பருவக் காலங்களில் மக்கள் சந்திக்கக்கூடிய வைரஸ்கள் தாக்கத்தால் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல், தலைவலி, சளி, இருமல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும். இவற்றை தவிர்ப்பதற்கு சரியான வேளைக்கு உணவருந்த வேண்டும். இரவு 8 மணி நேரம் சீரான துாக்கம் வேண்டும். புரதச்சத்து மிக்க நுண்ணுாட்டமிக்க சரிவிகித உணவு உட்கொள்ள வேண்டும். அதிகாலையி ல் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது. எண்ணெயில் பொரித்த துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது உடல் அதற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும்.
- டாக்டர்.எம்.சி.பிரதீப், வட்டார மருத்துவ அலுவலர், உத்தரகோசமங்கை.
ச.செல்வம்,சிவகங்கை: சுவாசப்பாதை தொற்றை எப்படி சரிசெய்வது?
மூக்கு, தொண்டையை பாதிக்கும் தொற்று மேல் சுவாசப் பாதை தொற்று. இதனால் தும்மல், மூக்கு ஒழுகுதல் அல்லது அடைப்பு, தொண்டை வலி, இருமல், காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, குரல் கரகரப்பு, முகத்தில் வலி ஏற்படலாம். இதற்கு போதுமான ஓய்வு, நீராவி பிடித்தல், அதிக தண்ணீர் குடித்தல் போதுமானது. பெரும்பாலும் இவை வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதால் டாக்டரின் அனுமதியின்றி ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. காற்றுக் குழாய் நுரையீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கும் தொற்று கீழ் சுவாசப்பாதை தொற்று. இந்த தொற்றால் தொடர்ந்து இருமல் அதிக காய்ச்சல், சளியுடன் இருமல், சளியுடன் ரத்தம் கலந்து வருவது, மூச்சுதிணறல், மார்பு வலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இது பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களையும், குழந்தைகளையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களான நீரிழிவு நோய் உள்ளவர்கள், புற்றுநோய் சிகிச்சை எடுப்பவர்கள், ஸ்டீராய்டு மாத்திரை எடுப்பவர்களை தாக்ககூடும். குழந்தை பருவத்தில் முறையான தடுப்பூசிகள் செலுத்தினால் இவ்வாறான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
- டாக்டர் பிறைசூடன், பொது மருத்துவர், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை.
அருள் வேந்தன், சாத்துார்: எனது மகனுக்கு 17 வயது ஆகிறது. தினமும் மாலை 6:00 மணி ஆனால் உடலில் அரிப்பு ஏற்படுகிறது. அரிப்பு ஏற்படும் இடத்தில் சொரிவதால் தடிப்பு ஏற்படுகிறது. தடிப்பு ஏற்படுவதோடு காய்ச்சல் அடிப்பது போல் உடம்பு சூடாகிறது இதற்கான காரணம் என்ன?
உடலில் ஊறலும் அரிப்பும் ஏற்படுவது கோடைகாலத்தில் துாசி அலர்ஜியால் ஏற்படலாம். தடிப்பும் சூடும் இருந்தால் அந்த அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். வெளியில் விளையாடி விட்டு வந்தால் உடனடியாக கை, கால்களை கழுவ வேண்டும். கை நகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவால் கூட உடலில் தடிப்பு அலர்ஜி ஏற்படலாம். மருத்துவர் ஆலோசனைப்படி ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை பெற்றால் விரைவில் குணமாகும். அரிப்பு ஏற்படும் போது அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு சில காய்கறிகள் சாப்பிடுவதும் அலர்ஜியை ஏற்படுத்தும்.
- டாக்டர் சி.சுந்தர்ராஜ், சாத்துார்.
