PUBLISHED ON : ஜூன் 28, 2026

தமிழ்ச்செல்வன், மதுரை: எனக்கு 60 வயது, ரத்த அழுத்தம் சீராக உள்ளது. தினமும் 40 மி.கி. மாத்திரை சாப்பிடுகிறேன். 10 நாட்கள் தொடர்ந்து அளவீடு செய்ததில் 130/ 80 என வருகிறது. நான் மாத்திரையை பாதியாக (20 மி.கி.) குறைக்கலாமா. ரத்த அழுத்த மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்தால் சிறுநீரகப் பிரச்னை வரும் என்பது உண்மையா?
மாத்திரை அளவை நீங்களாக முடிவுசெய்து குறைக்கக்கூடாது. டாக்டர் பரிந்துரைத்த அளவு எடுப்பதே நல்லது. மருந்தின் அளவைக் குறைத்தால் ரத்த அழுத்தம் கூடிவிடும். தற்போதுள்ள மாத்திரைகளை பலர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சாப்பிட்டும் நன்றாக உள்ளனர். இந்த மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு வரும் என்பது பொய். டாக்டர்கள் பரிந்துரைக்காத மாத்திரைகளை எடுப்பதாலோ, கொடுத்த காலத்தைத் தாண்டி கூடுதலாக தொடர்ந்து எடுத்தாலோ, அவ்வப்போது கடைகளுக்குச் சென்று வலி மாத்திரைகள் வாங்கி போடுதாலோ தான் சிறுநீரகம் பாதிப்படைகிறது.
- டாக்டர் பி.ஆர்.ஜெ. கண்ணன், இதயநோய் சிறப்பு நிபுணர், மதுரை.
அறிவழகன், வத்தலக்குண்டு: விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால் முதலுதவி அளிப்பது எப்படி?
விபத்தில் காயம் ஏற்பட்டவுடன் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் நாட்டுக்கட்டு வைத்தியர்களிடம் காண்பிக்கின்றனர். எலும்பு சம்பந்தப்பட்ட அடிப்படை அறிவு இல்லாதவர்களிடம் சென்று கட்டு போடுவதை தவிர்ப்பதே நாம் செய்யும் முதலுதவியாக இருக்கும். எலும்புடன் தசைநார்கள், தோல் ஆகியவை சேர்ந்து இருக்கும். ஆகையால் இது மூன்றும் சம்பந்தப்பட்டவை. நாட்டுக்கட்டு மருத்துவர்களுக்கு தசைநரம்பு, தசைநார்கள் குறித்து தெரியாது.
எனவே நாட்டுக்கட்டு கட்டுவதை தவிர்த்து விபத்து ஏற்பட்டவுடன் கால், கையில் எலும்பு ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு அடிப்பகுதியில் கெட்டியான அட்டை, மரத்தப்பை கொண்டு துணியினால் கட்டி முதலுதவி அளிக்க வேண்டும். பின்னர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணரை பார்க்க வேண்டும்.
- டாக்டர் வணங்காமுடி, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர், வத்தலக்குண்டு
ஆர். திருப்பதிராயர், கூடலுார்: எனக்கு வயது 60. மலச்சிக்கலால் மிகவும் அவதிப்பட்டுள்ளேன். வராமல் தடுக்க, வந்தபின் ஏற்படும் வலிகளுக்கு தீர்வு என்ன?
சாப்பிடும் உணவுகள் ஜீரணம் சரியாக இருக்க வேண்டும். குடல் அசைவுகளும் சரியாக இருந்தால் மட்டுமே மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. குடல் அசைவு குறையும் போது மலச்சிக்கல் ஏற்படும். நரம்பு, குடல் பிரச்னை உள்ளவர்களுக்கு இப் பிரச்னை ஏற்படும். மேலும் சிக்கன், மட்டன், புரோட்டா அதிகம் சாப்பிடுபவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது மூல நோயாக மாறி தலைச்சுற்றலும் அதிகம் ஏற்படும். இதற்கு தீர்வு உணவு கட்டுப்பாடு அவசியம். காய்கறி, கீரை, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளான காய்கறி, கீரைகள், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். சிக்கன், மட்டன், புரோட்டா வகைகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தாலே மலச்சிக்கலை ஓரளவு தடுக்க முடியும்.
- டாக்டர் அனு பாக்கியா, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கூடலுார், தேனி
க.முனீஸ்வரி, ஆர்.எஸ்.மங்கலம்: எனக்கு 55 வயது ஆகிறது. இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு சில வாரங்கள் மட்டுமே ஆகிறது. தற்போது எனது பல் ஆடுகிறது, அதை எடுக்கலாமா?
இதய குழாயில் ரத்த அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளீர்கள். மேலும், ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் இருக்க, இதய அறுவை சிகிச்சை டாக்டரின் அறிவுரையின்படி, தற்போது தாங்கள் அதற்கான மாத்திரைகளை உட்கொண்டு வருவீர்கள். இந்நிலையில், பல்லை எடுப்பது உடல் நலத்தை பாதிக்கக்கூடும். எனவே தங்களது டாக்டரின் பரிந்துரையின்படி மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்திய பின்பு, பிரச்னைக்குரிய உங்கள் பல்லை எடுக்கலாம். பல்லை எடுத்து இரு நாட்களுக்கு பிறகு வழக்கம்போல், இதய பிரச்னைக்கான மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
- எம்.கனிமொழி, பல் மருத்துவர், ஆர்.எஸ்.மங்கலம் , ராமநாதபுரம்
க.அன்புச்செல்வி, சிவகங்கை: குழந்தைக்கு நாக்கு ஒட்டி இருப்பது போல் உள்ளது. தாய்ப்பால் அருந்த சிரமப் படுகிறான். எவ்வாறு சரிசெய்வது?
நாக்கு ஒட்டி இருப்பது என்பது பிறக்கும் போதே இருக்கும் ஒரு நிலை. இது குழந்தைகளுக்கு நாக்கை அசைக்கும் திறனைக் கட்டுப்படுத்துகிறது. நாக்கு ஒட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு நாக்கின் அடிப்பகுதியை வாயின் கீழ்ப்பகுதியுடன் இணைக்கும் லிங்குவால் ப்ரெனுலம் எனப்படும் திசுப் பட்டை அசாதாரணமாகக் குட்டையாக, தடினமாக, இறுக்கமாக இருக்கும்.
நாக்கு ஒட்டு குடும்பத்தில் பரம்பரையாக வரலாம். இது பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் காணப்படுகிறது. சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நாக்கு ஒட்டுக்கள் பற்களின் சீரற்ற அமைப்பு, மோசமான வாய் சுகாதாரம், பேச்சுத் திணறல், சாப்பிடுவதில் சிக்கல் ஏற்படுத்தக்கூடும்.
எனவே நாக்கு ஒட்டு இருப்பதை உணர்ந்தால் பல் மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்கு முறையான பரிசோதனை செய்து, அவரின் ஆலோசனை படி இவற்றை சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் எளிதில் சரிசெய்து விடலாம்.
- டாக்டர் விஜய்பாரத், பல் மருத்துவர், அரசு மருத்துவமனை காளையார்கோவில்
