PUBLISHED ON : ஜூலை 05, 2026

வித்யா, மதுரை: எனக்கு 50 வயது. நீர்க்கடுப்பு நோயால் அவதிப்படுகிறேன். இது எதனால் ஏற்படுகிறது. ஆண்களை விட பெண்களுக்கு இப்பிரச்னை அதிகமாக ஏற்படுவது ஏன்?
நீர்க்கடுப்பு என்பது சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றால் உருவாகும். ரத்தத்தை வடிகட்டி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் தேவையற்ற விஷயங்களை வெளியேற்றும் வேலையை சிறுநீரகங்கள் ஓய்வின்றி செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் வீதம் மொத்தம் 20 லட்சம் நெப்ரான் எனப்படும் நுண்ணிய ரத்த வடிகட்டிகள் இருக்கின்றன. அதிலிருந்து உருவாகும் சிறுநீர், யூரிடர் எனப்படும் இரண்டு சிறுநீர்க் குழாய்கள் மூலம் சிறுநீர்ப்பையை வந்தடைகின்றன. அங்கு சிறுநீர் சிறிது சிறிதாக சேகரிக்கப்படும். இதை சுருக்குப் பை போல கற்பனை செய்து கொள்ளலாம்.
சிறுநீர்ப் பையின் கொள்ளளவை எட்டியதும் 'கழிப்பறைக்கு செல்ல வேண்டும்' என மூளையில் இருந்து அலாரம் சமிக்ஞை செய்யும். கழிப்பறை சென்றதும் அந்த சுருக்குப் பை போன்ற தசை அமைப்பு லேசாக சுருக்கை அவிழ்க்கும் போது மடை திறந்த வெள்ளம் போல சிறுநீர்ப்பையில் இருக்கும் சிறுநீர், யூரித்ரா எனும் குழாய் வழியே வெளியேறும். இதை சிறுநீர்ப்பாதை என்கிறோம்.
இதில் வெளியேற்றக் குழாயும் சிறுநீர்ப்பையும் தொற்று கண்டால் அது கீழ் சிறுநீர்ப்பாதை தொற்று எனவும் சிறுநீர்க் குழாய், சிறுநீரகங்களில் தொற்று ஏற்பட்டால் மேல் சிறுநீர்ப்பாதை தொற்று எனப்படும். கீழ் சிறுநீர்ப்பாதையில் தொடங்கும் தொற்றை கவனிக்காமல் விட்டால் அது மேலேறி சிறுநீரகங்கள் வரை செல்லும்.
நமது உடலில் வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சரியான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது குறைந்தால் சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து கிருமித்தொற்று ஏற்படும். சிறுநீர் கழிக்கும் போது லேசான வலி, எரிச்சல் தோன்றுவது, சிறுநீர் கழித்து முடிக்கும் தருவாயில் அடிவயிற்றில் கனமாக கவ்வுவது போன்ற வலி ஏற்படுவதை நீர்க்கடுப்பு என்கிறோம். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்க தண்ணீர், இளநீர், பழச்சாறு, எலுமிச்சை சாறு அருந்தினால் சரியாகும்.
பெரும்பாலானோர் பயணங்களின் போது சிறுநீர் கழிக்கும் அளவுக்கு அவசரம் இருந்தாலும் அடக்கி கொள்வர். கழிப்பறை வசதி, தண்ணீரில்லை போன்ற காரணங்களால் சரியான நேரத்தில் சிறுநீர் கழிக்க மாட்டார்கள். சிறுநீரை அடக்குவதோடு சரியாக தண்ணீரும் அருந்தாததால் சிறுநீர்த் தொற்றுக்கு அதிகமாக ஆளாவார்கள். பெண்களின் சிறுநீர்ப்பாதை வெளியே சென்று முடியும் இடத்தின் அருகிலேயே இனப்பெருக்க உறுப்பான யோனியும் முடியும். அதற்கு அருகில் ஆசன வாயும் உள்ளது. பெண்களின் சிறுநீர்ப்பாதை வெளியேற்றக் குழாயின் நீளம் சிறிதாக இருப்பதால் ஆண்களை விட சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- டாக்டர் அ.ப. பரூக் அப்துல்லா, பொது மருத்துவ நிபுணர், மதுரை.
எஸ்.மகாலிங்கம், ஆண்டிபட்டி எனது 8 வயது ஆண் குழந்தைக்கு காது மடலுக்கு கீழ் பகுதியில் வீக்கம் வலியால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பொன்னுக்கு வீங்கி தொற்று என்கின்றனர். இது ஏன் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனை கூறுங்கள்?
பொன்னுக்கு வீங்கி என்பது மம்ப்ஸ் வைரசால் ஏற்படும் தொற்று. பொதுவாக 2 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளை தாக்கக்கூடியது. தொற்று ஏற்பட்ட பின் 14 முதல் 25 நாட்களுக்குள் அறிகுறிகள் தெரியும். உடலில் அறிகுறிகளாக காது மடலுக்கு கீழ் உள்ள உமிழ்நீர் சுரப்பியில் வீக்கம், வலி, காய்ச்சல், உடல் சோர்வு, பசியின்மை ஏற்படலாம். மூளை காய்ச்சல் பாதிப்புகூட வரலாம். காற்று, உமிழ் நீர் வழியாக மற்றவருக்கு எளிதில் பரவும். ரத்தம், உமிழ்நீர் பரிசோதனை செய்து தொற்றை கண்டறியலாம். முறையான முக கவசம், கை கழுவுதல், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் ஆகியவை தொற்று பரவாமல் தடுக்கும். பாதிக்கப்பட்டவர்கள் மென்மையான உணவுகள், வெந்நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். வீக்கத்திற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசியினை இரு தவணைகளில் செலுத்த வேண்டும். அனைத்தையும் மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்ற வேண்டும்.
- டாக்டர் சோ.கார்த்திக், தேசிய குழந்தைகள் நல மருத்துவக்குழு மருத்துவர், ஆரம்ப சுகாதார நிலையம், கோம்பை.
பாலமுருகன், ஆர்.எஸ்.மங்கலம்: உடல்நிலை சரியில்லாத நேரத்தில் ஊசி, மருந்து எடுத்துக் கொண்ட பின் வாயிலும், உதட்டிலும் புண் ஏற்படுவதற்கு டாக்டர்கள் வழங்கும் ஓவர் டோஸ் மருந்து மாத்திரைகள் காரணமா?
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, அவர்களின் வயது மற்றும் உடல் தன்மையை பொறுத்து ஊசி, மருந்து வழங்கப்படுகிறது. தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊசி மருந்து எடுத்துக் கொண்டவர்கள், டாக்டர்கள் அறிவுரையின் படி சாப்பிட்ட பின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலானோர், சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் வெறும் வயிற்றில் மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.
இதனால் வயிற்றில் வலி ஏற்பட்டு வாய் மற்றும் உதட்டில் புண் ஏற்படுகிறது. உதட்டில் ஏற்படும் புண்ணை பொதுவாக கிராமப் பகுதிகளில் பல்லி எச்சமிட்டதாகவும், ஊசி மருந்து அதிகம் எடுத்துக் கொண்டதாலும் ஏற்பட்டுள்ளதாக கூறுவார்கள். அது முற்றிலும் தவறான கருத்து. உதட்டில் ஏற்படும் புண் உதடு அக்கி ஆகும்.
இது, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் முறையாக உணவு ஆகாரம் எடுத்துக் கொள்ளாமல் மாத்திரைகள் போடுவதாலும், துாக்கமின்மை, மன அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளிட்ட காரணங்களாலும் ஏற்படுகிறது. டாக்டரின் பரிந்துரையின் படி உணவு உட்கொண்ட பின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் பிரச்னை இல்லை. பவரான டோஸ் மாத்திரை மருந்து என்பதே தவறான பார்வை.
- டாக்டர் அ. ராமநாதன், உதவி பேராசிரியர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.
க.சரவணன், சிவகங்கை: மூன்று வயது மகனுக்கு சரியாக பேச்சு வரவில்லை; இது ஆட்டிசம் குறைபாடா?
ஆட்டிசம் ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சி குறைபாடு. இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் சமூகத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன், பழகும் திறனில் பின் தங்கி இருப்பர். ஆட்டிசம் அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் பேசினால் தெளிவாக புரிந்து கொள்ளும்படி இருக்காது. கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் உணர்வுகளில் மாறுபாடு இருக்கும். அந்த புலன் சார்ந்த துாண்டல்களுக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிகாட்டுவார்கள். குழந்தைகளின் பேச்சு தாமதம் ஆவதற்கு காரணம் ஆட்டிசம் மட்டுமே இருக்க இயலாது. சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே பேச்சுத்திறன் வர தாமதம் ஆகலாம். சந்தேகம் தொடரும் பட்சத்தில் குழந்தைகள் நல மருத்துவரையோ, மனநல மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
- டாக்டர் முகமது ரபி, மனநல மருத்துவர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.
கோபிநாத், அருப்புக்கோட்டை: நான் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஹெட்போன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் காது கேட்கும் திறன் குறையுமா. என்னுடைய பணிக்கு ஹெட்போன் அவசியமாக தேவைப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை உண்டா?
ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமல்ல, இன்றைய இளைஞர்கள் அதிக நேரம் காதில் ஹெட்போனை பயன்படுத்துகின்றனர். பஸ் பயணங்களின் போது தொடர்ந்து பல மணி நேரம் ஹெட் போன் பயன்படுத்துவது சகஜமாகி விட்டது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் காது கேட்கும் திறன் குறைய நிறைய வாய்ப்பு உள்ளது. இதனைத் தவிர்க்க ஒலி அளவை குறைத்து வைத்து கேட்க வேண்டும். அதிக ஒலி காது ஜவ்வை பாதிக்கும்.
தொடர்ச்சியாக ஹெட் போனை பயன்படுத்தாமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி விட்டு பயன்படுத்த வேண்டும். நல்ல ஏர்பட்ஸ் உள்ள தரமான ஹெட்போனை உபயோகிக்க வேண்டும். ஹெட்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது. காதில் பிரச்னை என்றால், சுய வைத்தியம் பார்க்காமல் அதற்கான மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.
- டாக்டர் அண்ணாதுரை, காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர், அருப்புக்கோட்டை.
