PUBLISHED ON : ஜூலை 12, 2026

மாயாண்டி, மதுரை: என் பேத்திக்கு 3 வயதாகிறது. ப்ரீ கேஜி படிக்கிறாள். பள்ளியில் சத்தான சிற்றுண்டி வழங்கினாலும் சரியாக சாப்பிடுவதில்லை. வீட்டிலும் அவளுக்குப் பிடித்த உணவு கொடுத்தால் சாப்பிடாமல் அழுகிறாள். சிறிதளவே சாப்பிடுகிறாள். ஆனால் நன்கு விளையாடுகிறாள். பசி எடுக்கவில்லையா அல்லது உணவு பிடிக்காமல் போகிறதா என்ன காரணம் டாக்டர்?
3 வயது குழந்தைகளில் இந்த மாதிரியான உணவுப் பழக்கம் மிகவும் பொதுவானது. குழந்தை சுறுசுறுப்பாக விளையாடுகிறாள், உயரமும் எடையும் வயதிற்கு ஏற்றபடி வளர்ந்து கொண்டிருக்கிறாள் என்றால், உடனடியாக கவலைப்பட வேண்டியது இல்லை.
காலை உணவை தவிர்ப்பது பல குழந்தைகள் செய்வது தான். எழுந்தவுடனே பசிக்காமல் இருக்கலாம். பள்ளி செல்லும் முன் கட்டாயப்படுத்தாமல் இட்லி, தோசை, முட்டை, பழம், பால் ஏதாவது ஒரு சத்தான உணவை கொடுக்கலாம்.
மதிய உணவை கட்டாயப்படுத்தி ஊட்டுவதற்கு பதிலாக, குழந்தை தானாக சாப்பிட பழக்குங்கள். ஒருவேளை குறைவாக சாப்பிட்டாலும் அடுத்த வேளை பசி எடுத்தால் சாப்பிடுவாள். குழந்தையை துரத்தி அல்லது வற்புறுத்தி ஊட்டுவது பல நேரங்களில் எதிர்மறையான விளைவுகளைத் தரும்.
தினமும் ஒரே நேரத்தில் உணவு கொடுங்கள். உணவுக்கு இடையில் பிஸ்கட், ஜூஸ், இனிப்பு அல்லது அதிக பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். 'டிவி', அலைபேசி இல்லாமல் உணவு கொடுங்கள். புதிய உணவுகளை பல முறை சிறிய அளவில் அறிமுகப்படுத்துங்கள்.
எடை அல்லது உயரம் சரியாக அதிகரிக்காமல் இருந்தாலோ அடிக்கடி வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுவலி, விழுங்குவதில் சிரமம், சோர்வாக இருந்தாலும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் குழந்தைகள் நல டாக்டரை அணுகுவது அவசியம்.
- டாக்டர் முருகன் ஜெயராமன், குழந்தைகள் நல நிபுணர், மதுரை.
சித்ரா, திண்டுக்கல்: பிரசவத்துக்கு பின் உடல் எடை அதிகரித்து சீரற்ற முறையில் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இரண்டுக்கும் தொடர்பு உண்டா?
பிரசவத்திற்கு பின் உடல் எடை அதிகரிப்பதற்கும், முறையற்ற மாதவிடாய் சுழற்சிக்கும் சம்பந்தம் இல்லை. பிரசவத்துக்கு பின் ஏற்படும் முறையற்ற மாதவிடாய் சுழற்சி வழக்கமானது. சில மாதங்களில் இப்பிரச்னை தானாகவே சீராகி விடும்.
கர்ப்பமாக இருக்கும் போதும் குழந்தை பிறந்த பின் பாலுாட்டவும் தானியங்கள், முளைகட்டிய பயிர்கள், சத்தான உணவுகள் என தாய் பாலுாற துாண்டும் உணவுகள் நிறைய எடுக்க வேண்டியிருக்கும்.
பாலுாட்டும் தாய்மார்களுக்கு பசியும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இயற்கையாகவே உடல் எடை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அந்த காலக்கட்டங்களில் சின்ன சின்ன உடற்பயிற்சிகள், நடைபயிற்சி செய்வதால் உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.
கார்போ ஹைட்ரேட் உணவுகள் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம். நிறைய தண்ணீர் பருக வேண்டும். பிரசவத்திற்கு பின் தாய்மார்கள் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என டாக்டர்கள் நிச்சயம் பரிந்துரைப்பார். அதை தவறாமல் கடைபிடியுங்கள்.
முறையற்ற மாதவிடாய் ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது என்றால் நிச்சயம் மகளிர் நோய் டாக்டரிடம் ஒருமுறை கலந்தாலோசிப்பது தீர்வை தரும்.
- டாக்டர் கீதா, மகளிர் நோய், மகப்பேறு சிகிச்சை நிபுணர், திண்டுக்கல்
வைதேகி, பெரியகுளம்: எனது மகன் கல்லுாரி மாணவர்; இரவில் மூக்கடைப்பினால் சிரமப்படுகிறார். தீர்வு என்ன?
இரவில் துாங்கும் போது புவியீர்ப்பு விசையின் காரணமாக தலையில் ரத்தம் ஓட்டம் அதிகரிப்பதாலும், படுக்கை அறை துாசி, அதிகளவில் ஐஸ் கிரீம், குளிர்பானங்கள் குடிப்பதாலும், ஏசி மற்றும் மின்விசிறியை முகத்திற்கு நேராக வைத்து தூங்குவதால் மூக்கடைப்பு வருகிறது. இதனை தவிர்க்க வாரம் ஒருமுறை நொச்சி இலை, வேப்பிலை, மஞ்சள் மூன்றையும் ஒன்றாக கொதிக்க வைத்து, ஆவி பிடிக்க வேண்டும். இதனால் மூக்கு துவாரத்தில் பாக்டீரியாக்கள், தொற்றுகள் ஆவிபிடிப்பதால் நீங்கி, மூக்கடைப்புக்கு நிவாரணம் கிடைக்கும்.
மூக்கின் துாவாரம் சென்சிடிவ் பகுதியாகும். டாக்டர் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்பட்டால் மூக்கடைப்பு தொந்தரவு அதிகரித்து துாங்கவிடாது. தும்மல், இருமல் வரும்போது 'கைக்குட்டையை' பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியில் தும்மினால் மற்றவர்களுக்கும் பரவும்.
- டாக்டர் சி.கார்த்திக், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்
கே.கலையரசி, ராமநாதபுரம்: எனது குழந்தைக்கு 1 வயதாகிறது. அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதற்கு ஏதேனும் தீர்வு கூறவும்?
குழந்தைகளுக்கு பாலுாட்டும் போதும், தண்ணீர் கொடுக்கும் போதும் புரையேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி புரையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்படும். வீடுகளில் வளர்க்கும் நாய், பூனையின் முடி, சுத்தம் செய்யாமல் உள்ள ஏ.சி.,யில் இருந்து வரும் துாசி காற்றால் ஒவ்வாமை ஏற்படும். குடும்பத்தில் பெற்றோர், தாத்தா, பாட்டிக்கு ஆஸ்துமா இருந்தால் குழந்தைகளுக்கும் ஆஸ்துமா வர வாய்ப்பு உள்ளது. ஆஸ்துமா அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு நெபுலைசேஷன் எனும் முறையில் ஆவி பிடிக்கும் முறை பரிந்துரைக்கப்படும். சிலர் வாழ்நாள் முழுவதும் இந்த முறை தொடரும் எனப் பயப்படுகின்றனர். இது தற்காலிகமானது தான். ஆரம்பத்தில் சரி செய்யவில்லை என்றால் வாழ்நாள் முழுவதும் ஆஸ்துமா சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு அதிக குளிர்ச்சி உள்ள குளிர்பானங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை கொடுக்க வேண்டும்.
- டாக்டர் எம். யாசர் அராபத், நுரையீரல் நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
எஸ்.சவுமியா, சிவகங்கை: 3 மாத கர்ப்பிணி. உடலை எவ்வாறு பராமரிப்பது?
கர்ப்பிணிகள் தான் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். வாழ்க்கை முறையிலும் கருவின் வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். ஒரு பெண் கருவுற்றது உறுதியானதில் இருந்து பிரசவ காலம் முழுக்க மிகவும் கவனமாக உடலை பராமரிக்க வேண்டும். கர்ப்பகாலம் முழுவதும் குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்க அனைத்து பரிசோதனையையும் செய்து கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், உலர் பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும்.
இறைச்சியில் ஆட்டு ஈரல், மீன் போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். கர்ப்ப காலத்தில் திடீர் காய்ச்சல், தலைவலி வந்தால் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
- டாக்டர் மு.தென்றல், மகப்பேறு மருத்துவர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
