தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : ஆக 16, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 16, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்த்தியாயினி, மதுரை: நாக்கில் அடிக்கடி புண் வருகிறது. இது எதனால். சளித் தொந்தரவு இருக்கிறது. இதனை தவிர்ப்பது எப்படி?



தினமும் பற்கள், நாக்கை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது, சாப்பிடும் போதோ அல்லது பல் துலக்கும் போதோ நாக்கை கடித்து காயப்படுத்துவதால் புண் ஏற்படலாம். பூஞ்சை தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு (இரும்பு, பி12, போலேட், துத்தநாகம்), மன அழுத்தம், மாதவிடாய், சிட்ரஸ், சாக்லேட், காபி போன்ற உணவு வகைகள் எடுத்துக்கொண்டாலும் புண் உருவாகலாம். பெஹ்செட்ஸ் நோய், ஐ.பி.டி., செலியாக் நோய், எச்.ஐ.வி. பாதிப்பும் காரணமாக இருக்கலாம். உணவு ஒவ்வாமை, புற்றுநோய் உட்பட பல வாய்ப்புகள் இருக்கின்றன. டாக்டரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.

வைரஸ் தொற்றால் சளி, இருமல் ஏற்படுகிறது. பாக்டீரியா தொற்றுகளால் மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், நிமோனியா பாதிப்பும் ஏற்படலாம். பூஞ்சைத் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் பருவகால மாற்றம், சுற்றுச்சூழல் துாசு, புகை, மாசுபாடு காரணிகளாலும் சளி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம். ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள், நாசில் ஸ்ப்ரே, இன்ஹேலர், மூச்சுக்குழாய் விரிவிகளால் சரிசெய்யலாம். இதை சுவாச செயல்பாட்டு சோதனை மூலம் கண்டுபிடித்து தவிர்க்கலாம்.

- டாக்டர் பி மீனா பிரியதர்ஷினி, காது, மூக்கு, தொண்டை நிபுணர், மதுரை.

லட்சுமி, நாகல் நகர் திண்டுக்கல்: எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யவில்லை. சமீபமாக மாதவிடாய் சுழற்சி மாறுபட்ட தேதிகளில் வருகிறது. அதிகம் வெள்ளைப்படுகிறது. மூட்டு, அடிவயிறு, இடுப்பு வலி போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இது ஏதேனும் பெரிய பாதிப்பின் அறிகுறியா?



சிறுநீர் பரிசோதனை செய்து கர்ப்பமாக இருக்கிறீர்களா என உறுதிப்படுத்துங்கள். கர்ப்பமாக இல்லை என்ற பட்சத்தில் மாதவிடாய் தள்ளிப்போவதற்கு ரத்த சோகை அல்லது தைராய்டு பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். ஹீமோகுளோபின், தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். உடல் பருமன் அதிகமாக இருந்தாலோ, உடற்பயிற்சி, உடல் உழைப்பு குறைவாக இருந்தாலோ சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருக்கலாம். இதற்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பார்க்க வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்னும் பின்னும், மாதாந்திர கருமுட்டை வெளியாகும் நாட்களிலும் இயல்பாகவே வெள்ளைப்படுதல் இருக்கும். ஆனால், அரிப்பு, துர்நாற்றம் இருந்தால் தொற்றுநோய் காரணமாக இருக்கலாம். மருத்துவரை அணுகி ஆன்டிபயாடிக் மாத்திரை எடுத்து சிகிச்சை பெற வேண்டும். வெள்ளைப்படுதல் தொடர்ந்து அதிகளவில் இருந்தால் கர்ப்பப்பை வாய் பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் அது சாதாரண புண்ணா அல்லது கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியா என்பதை கண்டறியலாம். அரசு மருத்துவமனைகளில் இப்பரிசோதனையை இலவசமாக செய்யலாம்.

- டாக்டர் ரதிபிரியா, மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம், திண்டுக்கல்

வி.செல்லத்துரை ஆண்டிபட்டி: குழந்தை முதல் பெரியவர்கள் வரை கைகளை சரியான முறையில் கழுவ அறிவுறுத்துகின்றனர். கைகளை கழுவும் முறை, அதன் நன்மைகள் குறித்து கூறுங்கள்?

உணவு சாப்பிடும் முன்பும் பின்பும், உணவு தயாரிப்புக்கு முன்பும், கழிப்பறையை பயன்படுத்திய பின்பும், இருமல் அல்லது தும்மிய பின், குழந்தையை தொட்ட பிறகு, டயப்பர் மாற்றிய பின், நோயாளியை பராமரிக்கும் முன்பும் அதற்கு பின்பும், குப்பை, அழுக்கு பொருட்களை தொட்ட பின்,வெயிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் கைகளை கழுவ வேண்டும்.

கழுவும் முறைகள்: கைகளை தண்ணீரில் நனைத்து சோப்பு பயன்படுத்த வேண்டும். உள்ளங்கை, புறங்கை, விரல்களுக்கு இடையில் நகங்களின் கீழ், பெருவிரலால் குறைந்தது 20 வினாடிகள் தேய்த்து கழுவ வேண்டும். சுத்தமான தண்ணீரில் கழுவி சுத்தமான துணி அல்லது காற்றில் உலர்த்த வேண்டும். கைகளை சரியான முறையில் கழுவுவதால் கிருமிகள், அழுக்குகள் நீக்கப் படுகிறது. வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் தொற்று நோய் பரவலை தடுக்கிறது. உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகளை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளிடையே கிருமி பரவலை தடுக்கிறது. தேவையற்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் பயன்பாட்டை குறைக்க உதவுகிறது. தனிநபர் சுகாதாரத்தையும் சமூக சுகாதாரத்தையும் மேம்படுத்துகிறது. சுத்தமான கைகள் ஆரோக்கியமான வாழ்வை தரும்.

- டாக்டர் ஏ.சந்திரிகா, தேசிய குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஓடைப்பட்டி, தேனிமாவட்டம்

கார்த்திகைசெல்வி ராமநாதபுரம்: எனது மகனுக்கு 6 வயதாகிறது. அடிக்கடி உதட்டின் உள் பகுதியில் புண் வருகிறது. இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது?



குழந்தைகளுக்கு உதட்டின் உள் பகுதியில் அடிக்கடி புண் வருவது இயல்பானது. கூர்மையான பற்கள் உரசுவது, உதட்டை கடிப்பது, கடினமான உணவுகளை எடுப்பதால் புண்கள் வரும். உணவு வழங்கும் போது பெற்றோர் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். வெயில் காரணமாகவும், வைட்டமின் டி12 குறைபாடு காரணமாகவும் சிலருக்கு புண் வரும். இதனை குளிர்ச்சி மிகுந்த உணவுகள் எடுப்பதன் மூலம் சரிசெய்ய முடியும். சில நாட்களுக்கு காரம், புளிப்பு, அதிக உப்பு மற்றும் சூடான உணவுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும். ஒரே புண் 2 வாரத்துக்கு மேல் நீடித்தால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். மணத்தக்காளி கீரை, பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்து குழந்தைகளுக்கு வழங்குவது புண்களை விரைவில் ஆற்ற உதவும்.

- டாக்டர் சுஜாதா, சித்த மருத்துவர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை

தங்கம், கிருங்காகோட்டை: தலையில் பொடுகு, முடி உதிர்வதை எவ்வாறு சரி செய்வது?

தலை முடி உதிர்வதை தடுக்க மருந்து மட்டுமன்றி பராமரிப்பும் மிகவும் அவசியம். வாரம் இருமுறை எண்ணெய் வைத்து தலைக்கு மசாஜ் செய்து குளிக்க வேண்டும். தலைமுடியின் தன்மைக்கு ஏற்ப எண்ணெய் பயன்படுத்த வேண்டும். தேங்காய், ஆலிவ், எள்ளு, அருகம்புல் எண்ணெய் இவற்றில் ஒரு எண்ணெய்யை தினமும் தேய்த்து கொள்ளலாம். ஷாம்பு தவிர்த்து சீயக்காய் பொடியை பயன்படுத்தலாம். கருஞ்சீரக தைலம், நீலிபிருங்காதி தைலம், பயன் படுத்தினால் பொடுகு, முடி உதிர்வதை தடுக்கலாம். மாதுளை மணப்பாகு, கரிசாலை லேகியம் போன்ற மருந்துகளை உள் மருந்தாகவும் உட்கொள்ளலாம். உணவில் பீட்ரூட், வெந்தயம், மாதுளை, பேரீச்சை, அத்தி, கருவேப்பிலை, கீரை வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

- டாக்டர் முத்துவிக்னேஷ், சித்த மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்

ரம்யா, விருதுநகர்: தைராய்டு பாதிப்பினால் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு ஏற்படுமா?

பெரியவர்களுக்கு தைராய்டு அளவு 0.3 முதல் 4.5 வரை இருக்க வேண்டும். 4.5 அளவுக்கு மேல் இருந்தால் ஹைப்போ தைராய்டிசம், 0.3 அளவுக்கு கீழ் இருந்தால் ஹைப்பர் தைராய்டிசம்.

கர்ப்பகாலத்தின் முதல் 3 மாதங்களில் தைராய்டு அளவு 0.1 முதல் 2.5 ஆக இருக்க வேண்டும். 2.5 அளவுக்கு மேல் இருந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி, நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

4வது முதல் 6வது மாதத்தில் தைராய்டு அளவு 0.2 முதல் 3.0 ஆக இருக்க வேண்டும். 7வது முதல் 9வது மாதத்தில் தைராய்டு அளவு 0.3 முதல் 3.0 ஆக இருக்க வேண்டும். தைராய்டு பாதிப்பு இருந்தும் சரியான மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ளவில்லை என்றாலும், அளவு கட்டுக்குள் இல்லை என்றாலும் கருக்கலைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. கர்ப்பத்திற்கு தயாராகும் பெண்கள் முன்னதாகவே தைராய்டு பரிசோதனை செய்து கொண்டு தயாராவது சிறந்தது.



--
டாக்டர் சு.வைஷ்ணவி, மகப்பேறு சிகிச்சை பிரிவு, நிலைய மருத்துவ அலுவலர், அரசு மருத்துவமனை, விருதுநகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us