தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : ஆக 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்மணி, மதுரை: எனது மகள் 10 வயதில் பூப்படைந்தாள். அதனால் பிரச்னை வருமா. இளம்வயதில் மாதவிடாய் வருவதால் ரத்தசோகை ஏற்படுமா?

10 முதல் 16 வயதில் பூப்பெய்வது வழக்கமான நிகழ்வு தான். வாழ்க்கை முறை மாற்றம், மாறும் உணவுப்பழக்கம், ரசாயனங்களால் ஏற்படும் ஹார்மோன் வேறுபாடு போன்றவற்றால் முன்பை விட தற்போது பெண்கள் பூப்பெய்தும் வயது குறைந்து கொண்டே வருகிறது. பூப்பெய்திய முதல் இரண்டாண்டுகளுக்கு மாதவிடாய் ஒழுங்கில்லாமல் வரும். குறிப்பிட்ட வயதிற்கு மேல் சரியான சுழற்சியில் மாதவிடாய் வரும் என்பதால் பயப்பட வேண்டியதில்லை.

மாதவிடாய் ரத்தப்போக்கினால் ஹீமோகுளோபின் குறையும். இரும்புச்சத்துள்ள உணவு வகைகளுடன் பால், முட்டை, புரத உணவுகளும் கொடுப்பது நல்லது. 12 வயதில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம் இருக்க வேண்டும். உணவில் இரும்புச்சத்து குறைபாடுதான் ஹீமோகுளோபின் குறைவதற்கு காரணம். தவிர கொக்கிப்புழு தாக்கம், மலேரியா, மாதவிடாய் அதிகம் போவது போன்ற மற்ற காரணங்களும் உண்டு. பச்சை காய்கறிகள், கீரை, பேரீச்சம்பழம், அத்திப்பழம், அசைவத்தில் ஈரல், சுவரொட்டி, முட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். பூச்சி மாத்திரை சாப்பிடுவது நல்லது. தேவைப்பட்டால் இரும்புச்சத்து மாத்திரைகள் டாக்டர் பரிந்துரையின் பேரில் சாப்பிடலாம்.

- டாக்டர் ரேவதி ஜானகிராம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர், மதுரை

தயாபரமேஸ்வர், நிலக்கோட்டை: மறதி நோய் எந்த வயதில் எதனால் ஏற்படுகிறது; இதற்கு தீர்வு என்ன?

நம் நாட்டில் 90 லட்சத்துக்கும் அதிகமான முதியவர்கள் மறதி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மூளை சுருங்குதல், மூளையின் செயல் சிதைவு, நினைவாற்றல் குறைபாடு, நடுக்கம் உள்ளவர்களுக்கு இந்நோய் தென்படும். சரி செய்ய இயலாத 100க்கும் அதிகமான நோய்களின் பட்டியலில் இதுவும் ஒன்று. 50 வயதுக்கு மேல் தொடங்கி கூடுதலாக பாதிக்கப்பட்டவர் தன்னை, குடும்பத்தை மறந்து சுற்றித்திரியும் ஒரு ஜீவனாக மாறி விடுகிறார்கள். சிலருக்கு தன் இளமைக்கால நினைவுகளைத் தவிர மற்ற எல்லா நினைவுகளும் மறந்து போகும்.

எனது சில ஆய்வுகளின்படி வைரஸ்களின் தாக்கம் நீண்ட நெடுங்காலமாக இருப்பதால் மறதி நோய் வருவது தெரியவருகிறது. மது, புகையிலை, புகைப்பிடிப்பவர்கள், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, காய்கறிகள், பால், மீன் சாப்பிடுவது, கிழக்கு மேற்காக படுத்து உறங்குவது, தகுந்த மாத்திரைகளை உட்கொண்டு, சரிவிகித உணவை உண்டு வந்தால் மறதி, நடுக்க நோய் வராமல் தடுக்கலாம்.

- டாக்டர் கயிலைராஜன், நரம்பியல் நிபுணர், நிலக்கோட்டை.

செல்வி, பெரியகுளம்: எனது அக்கா மகளுக்கு மார்பில் ஏற்பட்ட கட்டியை பரிசோதனை செய்ததில் மார்பக புற்றுநோய் உள்ளதாக தெரிகிறது. எங்கள் குடும்ப உறவுகளின் நம்பிக்கையான ஆறுதலால் சிகிச்சைக்கு தயாராகியுள்ளார். சிகிச்சையின் போது மார்பகத்தை முழுவதுமாக எடுக்க வேண்டுமா?

சிகிச்சையில் மார்பகம் முழுவதும் அகற்றப்படாமல், தற்போதைய உயர்தர சிகிச்சையில் மார்பகத்தில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கட்டியை மட்டும் அகற்றிவிட்டு, கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். உங்களது கேள்வியில் குடும்ப உறவுகள் ஆறுதல் என குறிப்பிட்டது, புற்றுநோய் பாதித்தவர்களுக்கு நம்பிக்கையான மனதளவிலான நம்பிக்கை தரும் முதல் மருந்து. தொடர் சிகிச்சையினால் புற்றுநோயை குணப்படுத்தலாம்.

- டாக்டர் பாரதி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம்.

எஸ். முருகன், சாயல்குடி: தொடர்ந்து ஏற்படும் தும்மலை கட்டுப்படுத்துவது எப்படி?

அடிக்கடி குளிர்பானங்களை குடிப்பதும், ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பாட்டில் குடிநீரை குடிப்பதும் தும்மலுக்கு வழிவகுக்கும். துாசி உள்ள இடங்களில் இருக்கும் போது 'டஸ்ட் அலர்ஜியாக' மாறும். இதனால் கண்களில் நீர் வடிதல் மற்றும் தொடர் தும்மல் உள்ளிட்டப் பாதிப்புகள் ஏற்படும்.

இவற்றை தடுக்க குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். சத்துமிக்க பழங்களை சாப்பிட வேண்டும். துாசி இல்லாத இடங்களில் பணிபுரிவதற்கு ஏற்ப மாஸ்க் அணிய வேண்டும்.

- டாக்டர் எம்.ராமச்சந்திரன், பொதுநல மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சாயல்குடி.



முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை: எனது குழந்தை எப்போதும் போனில் மூழ்கியுள்ளான். அதிலிருந்து மீட்பது எப்படி?


போன் பயன்பாட்டில் மூழ்கியிருக்கும் குழந்தைகளை அதிலிருந்து மீட்க முறையான திட்டமிடலும் பொறுமையும் அவசியம். அவர்களைக் திட்டுவதோ அல்லது திடீரென போனைப் பறிப்பதோ எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். பெற்றோர்கள் குழந்தைகளுடன் இருக்கும்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுங்கள். குழந்தைகளை மாலை நேரத்தில் வெளியில் விளையாடவோ, சைக்கிள் ஓட்டவோ அல்லது பூங்காவிற்கு அழைத்துச் செல்லவோ பழக்குங்கள். ஓவியம் வரைதல், புத்தகம் வாசித்தல், இசை, புதிர் கணக்கு, அல்லது கைவினைப் பொருட்கள் செய்வதில் அவர்களின் கவனத்தைத் திருப்புங்கள்

- டாக்டர் முகமது ரபி, மனநல மருத்துவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிவகங்கை.



வள்ளிநாயகம், காரியாபட்டி: அல்சரால் அவதிப்படுகிறேன். எப்படி வருகிறது, எவ்வாறு குணப்படுத்துவது?


சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, அதிகமாக மது அருந்துவது, புகைப்பிடித்தல், வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடுவது, எச்.பைலோரி தொற்று ஆகியவற்றால் அல்சர் நோய் உண்டாகிறது. சரியாக கவனிக்காமல் விட்டால் ரத்த வாந்தி, கருப்பாக மலம் வருவது, அதிக வயிற்று வலி ஆகியவற்றால் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஒருமுறை வந்துவிட்டால் உணவு பழக்க வழக்கங்கள் மூலம் தான் இதனை குறைக்க முடியும்.

- டாக்டர் ஜெப்ரி, அரசு மருத்துவர், கல்குறிச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us