தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : செப் 13, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 13, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கமீனா, மதுரை: பற்களில் மஞ்சள் கறை படிவது ஏன்?

பற்களில் ஏற்படும் கறைகள் இரண்டு வகைப்படும். காபி, டீ, புகையிலை போன்றவற்றால் ஏற்படும் கறைகள் வெளிப்புறத்தில் மட்டும் இருக்கும். பல் டாக்டர் மேற்பார்வையில் 'பிளீச்சிங்' சிகிச்சை முறையில் பற்களை வெண்மையாக்கலாம். இம்முறையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பாதுகாப்பானவையே.

குடிதண்ணீர், வாழும் இடம் மற்றும் வேறு சில உடல் உபாதைகளில் பற்கள் உள்புறத்தில் இருந்து மஞ்சளாக இருக்கும். இதற்கு 'பிளீச்சிங்' சரியான பலன் தராது. இதற்கு பற்களின் மேல் 'வெனீயர்' அல்லது 'கேப்' அமைப்பது போன்றவற்றால் வெண்மை பற்களை பெறலாம்.

சிகிச்சைக்கு முன்னால் பற்களின் மஞ்சள் தன்மைக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கேற்றவாறு வெண்மையாக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை அனைத்து வயதினரும் செய்து கொள்ளலாம். சிகிச்சைக்கு பிறகு சரியான பராமரிப்பின் மூலம் நீண்ட காலம் வெண்மையான பற்களை பெறலாம்.

- டாக்டர் அனுஷா கண்ணபெருமான். பல் மருத்துவ நிபுணர், மதுரை

வேலுச்சாமி, செம்பட்டி: 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி சளி தொந்தரவு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உணவு பழக்கத்தில் மாற்றம் அவசியமா?

இதற்கு தடுப்பூசி செலுத்தாமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு என பல காரணங்களை பட்டியலிடலாம். உணவு பழக்கம் மாற்றத்தால் இதனை கட்டுப்படுத்த வழி உண்டு. பொதுவாக வைரஸ் தொற்றுகளால் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. சுவாச மண்டல பிரச்னைகள், ஆஸ்துமா, மூச்சு குழாய் வளர்ச்சி போன்றவற்றால் சளி உற்பத்தி அதிகரிக்கலாம். காற்று மாசு காரணமாகவும் சளி ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு போதுமான ஓய்வு அளிப்பது, பழங்கள், காய்கறிகள், புரத உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். தண்ணீர், திரவ உணவுகளை அதிகமாக கொடுப்பதால் சளியை தளர்த்தி உடலின் நீர் இழப்பை தடுக்கலாம்.

வரன்முறைப்படி குழந்தைகளுக்கு உரிய நேரங்களில் தடுப்பூசி செலுத்துவது, வீட்டை சுத்தமாக பராமரித்தல், கிருமிகள் பரவுவதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்துதல், சளி அறிகுறி உள்ளவர்களிடமிருந்து விலக்கி இருத்தல், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது சளி, இருமல் அறிகுறிகளை குறைக்க உதவும். பாலில் மஞ்சள் துாள் கலந்து கொடுப்பது நல்ல தீர்வாக இருக்கும். இவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழலில் டாக்டரிடம் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது.

- டாக்டர் சாந்தசொரூபா, மகப்பேறு மருத்துவ நிபுணர், சின்னாளபட்டி

கே.சந்தோஷ்குமார், போடி: முகப்பருக்கள் எதனால் வருகிறது. வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?



15 வயதுக்கு மேற்பட்டோருக்கு இயற்கையாகவே பருக்கள் வரும். இதனை நோயாக கருத வேண்டியதில்லை. அளவுக்கு அதிகமாக வரும் போது கவனம் செலுத்த வேண்டும். முகத்தில் அடையாளமாகவோ, தழும்பாகவோ மாறாத வகையில் இருந்தால் தோல் மருத்துவரின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். பருக்களை கிள்ளி விடவோ, அழகு சாதனங்கள் பயன்படுத்தவோ கூடாது. இதனை பயன்படுத்தினால் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. மாதவிடாய், நீர்க்கட்டிகள் உள்ள பெண்களுக்கு பருக்கள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. பருக்கள் வருவதை தவிர்க்க ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

வெயிலில் அதிகமாக சுற்றுவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்கவும், பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். ஐஸ்கிரீம், சாக்லேட், கொழுப்பு உள்ள உணவுப் பொருட்களை தவிர்ப்பது அவசியம்.

- டாக்டர் ஜெ. ஜெயானந்த்,,தோல் சிகிச்சை நிபுணர். அரசு மருத்துவமனை, போடி

கார்த்திக்கேயன், சிவகங்கை: இளம் பருவத்தினருக்கு தற்கொலை எண்ணம் எதனால் தோன்றுகிறது?

இளம் பருவத்தினருக்கு தற்கொலை எண்ணம் தோன்றுவதற்கு பல்வேறு சமூக, கலாசார மற்றும் குடும்பக் காரணிகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கின்றன. பொதுவாக குடும்பச் சூழல் மிகவும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், பெற்றோரின் கடுமையான விமர்சனங்கள், ஆதரவின்மை மற்றும் பலவீனமான உணர்வு தற்கொலைக்கு துாண்டுகிறது.

மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் நடக்கும் பிரச்னைகள், நண்பர்களுடனான உறவில் சிக்கல் மற்றும் சமூகத் தனிமை காரணமாக அமைகிறது. இந்த எண்ணம் உள்ளவர்களை தனிமைப்படுத்தாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் அவர்களிடம் நெருக்கமாக பழக வேண்டும். அவர்களின் மனதில் இருக்கும் விஷயங்களை கேட்டு அவர்களுக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்ள வேண்டும்.

அவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களுடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும். வீட்டிலும் கல்வி நிறுவனங்களிலும் பாதுகாப்பான அன்பான சூழலை உருவாக்க வேண்டும். தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்ளக் கூடிய ஆபத்தான பொருட்களை அணுக முடியாதவாறு அவர்களை பாதுகாக்க வேண்டும். தொடர்ந்து அவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதை உணர்ந்தால் தாமதிக்காமல் மனநல ஆலோசகர் அல்லது மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

- டாக்டர் வெங்கடேஷ், உதவிப் பேராசிரியர், மனநலத் துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

கே. அருளழகன், சாத்துார்: எனது தாயாருக்கு 48 வயது ஆகிறது. அடிக்கடி கை,கால் மூட்டுகள் வீங்கி அவதிப்படுகிறார். மூட்டுகள் வீக்கத்துடன் சூடாக இருக்கிறது. ஊசி போட்டு மாத்திரை சாப்பிட்டால் சரியாகிறது. டாக்டர்கள் கீல்வாதம் என்கிறார்கள்; இது எதனால் ஏற்படுகிறது. சிகிச்சை முறை என்ன?

பெரும்பான்மையாக 40 முதல் 50 வயதை தொடும் ஆண், பெண்களுக்கு கீல்வாதம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பாலும் மூட்டுகளில் ஒருவகையான உப்பு படிமானம் ஏற்பட்டு மூட்டுகள் வீங்கி வலி ஏற்படும். மனக்கவலை, மன அழுத்தம் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பாலும் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். ரத்த அழுத்திற்கான மாத்திரை எடுத்துக் கொள்வதோடு அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சீரகம் தண்ணீர் காய்ச்சி நாள்தோறும் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேறும்.

மூட்டுகளில் படியும் யூரிக் உப்பு மூட்டு தேய்மானத்தை ஏற்படுத்தி விடும். பின்னர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். ஆட்டிறைச்சி, மீன், கடல்பாசி உண்பதை

தவிர்க்க வேண்டும். மன அழுத்தமும் மூட்டு நோய்களுக்கு காரணம்; எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- டாக்டர் சுந்தர் கொண்டல் சாமி, சாத்துார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us