தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : செப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எஸ்.ராமலட்சுமி, மதுரை: எனது ஐந்து வயது குழந்தை அடிக்கடி காது வலிக்கிறது என்கிறாள். என்ன பிரச்னை என எப்படி கண்டுபிடிப்பது?



சிறு குழந்தைகளுக்கு காது வலி ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அடிக்கடி ஏற்படும் மேல் சுவாசக்குழாய் நோய்த்தொற்றுகள் அல்லது ஒவ்வாமையால் காதுவலி ஏற்படலாம். இதை மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். அடினாய்டு அல்லது டான்சில் எனப்படும் நிணநீர்ச் சுரப்பிகள் பெரிதாகி 'யூஸ்டேஷியன்' குழாயை அடைத்து திரவம் தேங்கி இருந்து அதனால் உண்டாகும் தொற்றினால் காதுவலி ஏற்படலாம். சில சமயங்களில் இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். காதிற்குள் திரவம் சேர்ந்தால் கூட சில நேரங்களில் வலி ஏற்படும். இது தீவிரமாகும் பட்சத்தில் தலைப்பகுதி எக்ஸ் ரே, 'இம்பிடன்ஸ் ஆடியோமெட்ரி' பரிசோதனைகள் மூலம் பிரச்னையை உறுதி செய்யலாம். இதே போன்று கேட்கும் திறன் குறைபாடு இருந்தால் 'அடினாய்டகடமி' செய்து சிறிய குழாய்கள் மூலம் காதில் இருக்கும் திரவத்தை வெளியேற்றி கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியும்.

- டாக்டர் பி மீனா பிரியதர்ஷினி, காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், மதுரை.

தர்மராஜன், திண்டுக்கல்: எனக்கு வயது 65. சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை எடுத்து வருகிறேன். இரவு துாங்கும்போது கெண்டைக்கால் தசைப்பகுதி நரம்பு, கால் பெருவிரல் நரம்பு இழுத்து பிடித்து வலி ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு இருக்கிறதா?



ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருந்தால் இம்மாதிரியான கெண்டைக்கால் தசைப்பகுதி நரம்புகள் இழுத்து பிடிக்கும் தொந்தரவு ஏற்படாது. இது கட்டுப்பாடற்ற சர்க்கரை பாதிப்பு உள்ளதை காட்டும் அறிகுறி. இந்த பாதிப்பு இருந்தால் உடலில் உள்ள நீர் மட்டும் இன்றி நீர்ச்சத்துக்களும் சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து விட்டமின் 'பி' சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மீன், இறைச்சி, பால், முட்டை, கீரை வகைகளை எடுத்துக் கொண்டால் இப்பாதிப்பில் இருந்து மீண்டுவிடலாம்.

இந்த உணவுகளை உட்கொள்ளாத நிலை இருந்தால் குறைந்தபட்சம் 'பி காம்ப்ளக்ஸ்' மாத்திரைகளை டாக்டர்களின் அறிவுரை படி எடுத்துக் கொள்ளலாம்.

- டாக்டர் திருலோக சந்திரன், இணைப்பேராசிரியர், பொது அறுவை சிகிச்சைத்துறை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திண்டுக்கல்.



சந்தோஷ், தேனி: எனக்கு 25 வயதாகிறது. கட்டுமான தொழிலாளியாக உள்ளேன். வலது காதில் இரைச்சல் சத்தம் கேட்டவாறு உள்ளது. சில சமயங்களில் அந்த காது கேட்காதது போன்று உணர்கிறேன். எதனால் இப்பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?



கட்டுமான தொழிலாளர் என்பதால் துாசி, அதிக சப்தம் கேட்பதால் இப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். அல்லது சளிப்பிரச்னையால் காதுகளுக்கு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு இரைச்சல் சத்தம் கேட்கலாம். இது தவிர காது குடைவதால் சவ்வு பகுதி சேதமடைந்திருந்தால் நரம்பியியல் பிரச்னையால் இரைச்சல் சத்தம் கேட்டவாறு இருக்கலாம். துாசி உள்ளே செல்வதை தவிர்க்கவும், அதிக சப்தம் கேட்பதை தவிர்க்க காதில் பஞ்சு வைத்துக்கொள்ளலாம்.

காது அடைத்தது போன்று உணர்ந்தால் ஆவி பிடித்தல், சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏ.சி., மின் விசிறி காற்று நேராக காது, மூக்கு பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

- டாக்டர் கார்த்திக், நிலைய மருத்துவ அலுவலர், அரசு தலைமை மருத்துவமனை, பெரியகுளம்.

கே.சரவணக்குமார், ராமநாதபுரம்: எனக்கு 45 வயதாகிறது. டிரைவர் வேலை செய்கிறேன். சமீப காலமாக கண்களில் இருந்து அதிகளவில் நீர் வருகிறது. இதற்கு தீர்வு என்ன?



கண்ணீர் அதிகமாக வருவதற்கு கண் உலர்வு, ஒவ்வாமை, கண் இமை தொடர்பான பிரச்னைகள், கண்ணீர் பாதையில் அடைப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

வாகனம் ஓட்டும் போது காற்றில் உள்ள துாசி, சிறிய துகள்கள் கண்களில் படுவதால் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வரலாம். நீண்ட நேரம் சாலையை உற்றுப் பார்த்தப்படி வாகனம் ஓட்டும் போது கண்கள் உலர்வதும், கண்களுக்கு ஏற்படும் களைப்பும் கண்ணீர் அதிகம் வருவதற்கு காரணமாக இருக்கலாம். அதே போல் கண்ணாடி தேவைப்படும் பார்வைக் குறைபாடு இருந்தாலும் கண்களில் நீர் வடியலாம்.

இரவு நேரத்தில் வாகனம் ஓட்டும் போது எதிரே வரும் வாகனத்தின் ஒளி நேரடியாக கண்களில் படுவதை தவிர்க்கவும். துாசியில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிய வேண்டும். கண்ணீர் வருவதற்கான மூலக்காரணங்களை முதலில் சரிசெய்ய வேண்டும். அதன் பிறகும் கண்ணீர் வரும் பட்சத்தில் கண் மருந்து பரிந்துரைக்கப்படும். மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பார்வைக் குறைபாடு இருந்தால் கண்ணாடி கட்டாயம் அணிய வேண்டும்.

-டாக்டர் எஸ்.ஆனந்தன், துணை பேராசிரியர், கண் மருத்துவப் பிரிவு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்.

கருப்புச்சாமி,சிவகங்கை: மன பதற்றம் எதனால் ஏற்படுகிறது. தடுக்க என்ன செய்ய வேண்டும்?

வேலைச் சுமை, மரபணு காரணங்கள், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், வாழ்வியல் சூழல் மாற்றங்களால் மன பதற்றம் ஏற்படுகிறது. தவறான வாழ்க்கை முறையை கைவிட வேண்டும். துாக்கமின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அச்சம், எதிர்மறை எண்ணங்கள், எதிர்காலம் பற்றிய அதிகப்படியான கவலையினாலும் பதற்றம் ஏற்படும். இவற்றை தடுக்க மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும். இது நரம்புகளை அமைதிப்படுத்த உதவும். தினமும் உடற்பயிற்சி செய்தால் உடலின் மன அழுத்த ஹார்மோன் குறையும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த துாக்கம் அவசியம். துரித உணவுகளை குறைத்து சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- டாக்டர் முகமதுரபி, மனநல மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.

செந்தில்குமார், சிவகாசி: எனது குழந்தைக்கு 7 வயது. சிறிய கால நிலை மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக சளி பிடித்து விடுகிறது. இதனை தடுப்பதற்கு என்ன செய்யலாம்?

காலநிலை மாற்றம் எப்போது ஏற்பட்டாலும் சளி பிடிப்பது இயல்புதான். கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து அடிக்கடி குடிக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் ஆடாதொடை டானிக், இருமல், சளிக்கும் பால சஞ்சீவி மாத்திரை குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும். வீட்டிலேயே இதற்கான தடுப்பு மருந்தாக கிராம்பு, சித்தரத்தை, ஏலக்காய், கற்பூரவல்லி இலை, துளசி, துாதுவளை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிய பின்னர் குடிக்க வேண்டும். இது சளி பிடிக்காமல் தடுப்பதற்கு உதவும்.

- டாக்டர் மணிமேகலை, சித்த மருத்துவர், அரசு மருத்துவமனை, சிவகாசி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us