தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்க!

டாக்டரை கேளுங்க!

டாக்டரை கேளுங்க!


PUBLISHED ON : அக் 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கார்த்திகா, மதுரை: குழந்தைக்கு தூக்கத்தின் அவசியம் என்ன. அது வயதிற்கு ஏற்ப மாறுபடுவது எதனால். குறைவாக தூங்கும் குழந்தையை எப்படி கையாள்வது?



தூக்கம் ஒரு அத்தியாவசியமான உடலியல் செயல்முறை. இது குழந்தையின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியுடன் பகல்நேர சுறுசுறுப்புக்கு உறுதுணையாக உள்ளது.

குழந்தைப்பருவம் முதல் பள்ளிப்பருவம் வயது வரை தூக்கத்தின் நேரம் வேறுபடும். பிறந்தது முதல் மூன்று மாதங்கள் வரை 3 முறை வீதம் 14 முதல் 17 மணி நேரம் தூக்கம் இருக்கும். 4 முதல் 11 மாதங்கள் வரை 2 முறை வீதம் 2 முதல் 15 மணி நேரம் துாக்கம் இருக்கும். இரண்டு வயது வரை தினமும் 11 முதல் 14 மணி நேரமும், 3 முதல் 5 வயது வரை அதிகபட்சமாக 13 மணி நேர தூக்கம், 13 வயது வரை 11 மணி நேர தூக்கம், 17 வயது வரை 10 மணி நேரம் தூக்கம் இருக்கும்.

சரியாக தூங்காவிட்டால் பகல்நேர தூக்கம், எரிச்சல், படிப்பில் ஆர்வமின்மை ஏற்படும். உடல் கடிகாரத்திற்கு கீழ்ப்படிய வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழ வேண்டும். விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்க வேண்டும். அமைதியான சூழல், மங்கலான விளக்குகள், அறையின் வசதியான வெப்பநிலை ஆகியவை தூக்கத்தை மேம்படுத்தும். ஒரு வயது வரை கையில் ஏந்தியோ அல்லது தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடியோ தூங்க வைக்கலாம். 2 வயது வரை தூக்க நிலையில் உள்ள குழந்தையை தனியான அறையில் அமைதியான சூழலில் விட்டு பழக்கலாம். குழந்தை அழுதால் மட்டும் சமாதானம் செய்து மீண்டும் தனியே தூங்க பழக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளை அமைதியான சூழலில் கதை சொல்லி தூங்க வைக்கலாம். தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் குளிக்க செய்யலாம். படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன் அலைபேசி, 'டிவி' பார்ப்பதை நிறுத்த வேண்டும். காபி, சாக்லேட் பானங்கள் தரக்கூடாது.

- டாக்டர் முருகன் ஜெயராமன், குழந்தை மருத்துவ நிபுணர், மதுரை.

குப்புசாமி, ஒட்டன்சத்திரம்: மன ஆரோக்கியத்திற்கு நடைபயிற்சி உதவுமா. தினமும் மேற்கொள்ளும் நடைபயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

நடைபயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைவதுடன் பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடம் நடைபயிற்சி செய்தால் மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியத்தை கொடுக்கும்.

இதயம், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் மட்டுமின்றி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். கூர்மையான அறிவு, ஆரோக்கியமான இதயம், வலிமையான தசைகளை பெற உதவும். கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படும்.

நடைபயிற்சி மூளையை ஊக்கப்படுத்தும் 'என்டோர்பின்' ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால் மனம் மகிழ்ச்சியான உணர்வை பெறுகிறது. சூரிய ஒளி படும் வகையில் நடைபயிற்சி மேற்கொண்டால் உடம்பிற்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கிறது.

இவற்றுடன் சுறுசுறுப்பான உடல் இயக்கம் பெற இதயத்தை காக்க வேண்டும். எண்ணெய், கொழுப்புள்ள உணவை குறைக்க வேண்டும். புகை, மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். உடல் எடையை சரியாக வைத்திருக்க வேண்டும். உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். மன அழுத்தத்தை குறைத்து மனம் ஆரோக்கியமாக இருக்க யோகா, நடைபயிற்சி உதவும்.

- டாக்டர் ஆசைத்தம்பி, பொது மருத்துவம், ஒட்டன்சத்திரம்.

சன்னாசி, பெரியகுளம்: எனது அண்ணன் மகன் கட்டட தொழிலாளி. பல ஆண்டுகளாக வாயில் புகையிலை ஒதுக்கும் பழக்கமுடையவர். இதனால் சமீபகாலமாக அவரது தொண்டையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. நாக்கில் சுவையின்மை, பேச்சு தடுமாறுகிறது. டாக்டரிடம் காண்பிக்காமால், சமூக வலைதளங்களில் டாக்டர் என கூறும் ஒருவரின் பேச்சை நம்பி தன்னிச்சையாக சிகிச்சை எடுக்கிறார். இதனால் பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும், வீக்கம் குறையாமல் பெரிதாகிறது. புற்றுநோயாக இருக்குமோ? என ஐயம் ஏற்பட்டுள்ளது?

உங்கள் அண்ணன் மகன் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளார். அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் வீக்கத்திற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும். அதற்கு அவர் அறியாமையிலிருந்து விலகி முதலில் மருத்துவமனைக்கு வர வேண்டும். சமூக வலைதளத்தில் உலாவரும் போலியான டாக்டர் பேச்சைக் கேட்டு, வீக்கத்தை பெரிதாக்கி நோய் முற்றுவதற்கு வழி வகுக்க வேண்டாம். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் ரகசியம் காக்கப்படும். தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் குணமாவதற்கு வாய்ப்புகள் அதிகம். தாமதம் செய்தால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

- டாக்டர் பாரதி, புற்றுநோய் சிகிச்சை நிபுணர், மாவட்ட அரசு மருத்துவமனை, பெரியகுளம், தேனி

ஏ.வினோதினி, ராமநாதபுரம்: எனது மகனுக்கு 14 வயது ஆகிறது. சிறிய ஏமாற்றத்தைக் கூட அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனதளவில் பலவீனமாக உள்ளான். யாருடனும் பழகாமல் தனிமையில் இருக்கிறான். இதை எவ்வாறு சரி செய்வது?



வளரும் இளம் பருவமான டீன் ஏஜ் பருவத்தில் மனதளவில் பல்வேறு உணர்ச்சிகள் வெளிப்படும். அழுவதையும், கோபப்படுவதையும் வைத்து பலவீனம் என முடிவு செய்யக் கூடாது. அதே நேரத்தில் இன்றைய இளம் தலைமுறையினர் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் உணர்ச்சி வசப்படுகிறார்கள். வலிகளை தாங்கும் மனப்பக்குவம் சிறு வயது முதல் இருக்க வேண்டும்.

இதில் பெற்றோர் மட்டுமின்றி சமூகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுவர்களின் உணர்ச்சியை ஏற்றுக்கொள்வது என்பது கேட்டதை எல்லாம் கொடுப்பது இல்லை. எல்லா விஷயங்களையும் விரும்பிய படி செய்தால் ஏமாற்றத்தை தாங்கும் மனவலிமை இல்லாமல் போய்விடும். சிறிய அளவில் மறுப்பு தெரிவிப்பது, காலம் தாழ்த்துவது போன்ற அனுபவங்களை சிறு வயது முதல் கொடுக்க வேண்டும்.

கணவன், மனைவி இடையே உள்ள குடும்ப பிரச்னையை குழந்தைகள் முன் வெளிப்படுத்தக் கூடாது. சினிமாவின் தாக்கம் அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடல் செயல்பாடு மிகுந்த விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும். யாரிடமும் பழகாமல் நீண்ட நேரம் தனிமையில் இருக்கும் பட்சத்தில் மன நல மருத்துவரை நேரில் அணுக வேண்டும்.

- டாக்டர் ஜெ. பெரியார் லெனின், அரசு மனநல மருத்துவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்

சங்கமித்ரா, சிவகங்கை: கர்ப்ப காலத்தில் உடலை எவ்வாறு பராமரிப்பது?

வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். கருவின் வளர்ச்சி, அதன் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். கருவுற்றது உறுதியானதில் இருந்து பிரசவ காலம் முழுக்க கவனமாக இருந்து உடலை பராமரிக்க வேண்டும். கர்ப்பகாலம் முழுவதும் குழந்தையின் வளர்ச்சியை கண்காணிக்க, அனைத்து பரிசோதனையும் உரிய இடைவெளியில் செய்து கொள்ள வேண்டும்.

காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், உலர் பழங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சியில் ஆட்டு ஈரல், மீன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். திடீர் காய்ச்சல், தலைவலி வந்தால் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரசவ மாதத்தில் வாரம் தோறும் டாக்டரை சந்திப்பது நல்லது.

- டாக்டர் தென்றல், மகப்பேறு மருத்துவர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை

முனீஸ்வரன், விருதுநகர்: அடிக்கடி தாடை பிடிப்பு ஏற்படுகிறது. இதற்கான சிகிச்சைகள் என்ன?

தாடைப்பகுதியில் வாய் திறக்கவும், மூடவும் முடியாமல் இருப்பது தாடைபிடிப்பு ஆகும். நரம்பு தசை பாதிப்பு, விபத்து காயம், வாய் வழி தொற்றுகளால் இந்த தாடை பிடிப்பு ஏற்படுகிறது.

நரம்பு தசை, வாய் வழி தொற்றுகளால் தாடை பிடிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். இந்த தாடை பிடிப்பு சரிசெய்தவுடன் பார்ட்டன் பேண்டேஜ் 4 நாட்கள் வரை அணிந்து கொள்ள வேண்டும். 4 முதல் 6 வாரங்களுக்கு எளிதாக ஜீரணமாகும் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

- டாக்டர் பாலமுருகன், பல் மருத்துவ சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, விருதுநகர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us