தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...

டாக்டரை கேளுங்கள்...


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணேசன், மதுரை: எனக்கு அடிக்கடி உடலில் அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜியை எதிர்கொள்வது எப்படி?

அல்ர்ஜி பாதிப்பு பலகோணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.மூக்கினை பாதித்து தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், கண்களில் நீர்வடிதல், அரிப்பு போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படுவர். இருமல், சளி, மூச்சுத்திணறல், இளைப்பு (சுவாசிக்கும் போது விசில் சத்தம்), நெஞ்சு இறுக்கம், மழைக்காலங்களில் சளி, இருமலால் பாதிக்கப்படுவர்.

சிலநேரங்களில் தோலில் அரிப்பு, தடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். அலர்ஜி பாதிப்பை ஐ.ஜி.இ., ஈசினோபில் எண்ணிக்கை போன்ற ரத்தப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம்.

எந்தெந்த பொருட்களால் உங்களுக்கு அலர்ஜி உண்டாகிறது என்பதை ரத்தப்பரிசோதனை அல்லது 'ஸ்கின் ப்ரிக்' பரிசோதனை மூலம் அறியலாம்.

அலர்ஜி உண்டாக்கும் பொருளை கண்டறிந்து அதை தவிர்த்தால் அலர்ஜியின் பாதிப்பை குறைக்கலாம். துாசி, மகரந்தத் துகள்கள், அழகு சாதன பொருட்கள், நறுமணங்கள், ஹேர்டை, வாசனை திரவியங்கள், கொசுவர்த்தி, வீட்டில் கரப்பான் பூச்சி, நாய், பூனையின் முடி, தோலில் உள்ள 'அலர்ஜன்' போன்றவை அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்கள். பலருக்கு பழங்கள், இறைச்சி, கடல் உணவுகள், காய்கறிகளும் அலர்ஜியின் காரணங்களாக இருக்கும்.

- டாக்டர் பி.பிரேம் ஆனந்த், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணர், மதுரை.

கவுண்டப்பன், நரிக்கல்பட்டி: தற்போதைய சூழலில் காய்ச்சல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

காய்ச்சல் பல வகையாக ஏற்படுகின்றன. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வரும் காய்ச்சல், இரவு நேரத்தில் வருவது, தலைவலி, உடல் வலி, மூட்டு வலியுடன் வரும் காய்ச்சல், படிப்படியாக அதிகரிப்பது, மிக அதிகமான காய்ச்சல் என வேறுபாடுகள் உள்ளன. எனவே காய்ச்சலுக்கான காரணத்தை கண்டறியாமல் நேரடியாக கடைகளில் இருந்து மருந்துகளை வாங்கி சாப்பிடக் கூடாது.

கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உள்ளது. ரசாயன கொசு விரட்டிகளை பயன்படுத்தாமல் கொசு வலை, கொசு பேட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். தண்ணீர் இருக்கும் பாத்திரங்களை காற்று போகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீரை காய்ச்சி ஆற வைத்து பருக வேண்டும். சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்படாத நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல் வந்தால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தற்போது காய்ச்சல் பரவும் சூழல் உள்ளதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

- டாக்டர் வருண்பிரகாஷ். வட்டார மருத்துவ அலுவலர், பழநி.

எஸ்.கவிதா, தேனி: எனது தாயாருக்கு காலையில் எழுந்தவுடன் கண்ணில் இருந்து நீர் வடிகிறது. அடிக்கடி கண்கள் சிவப்பாகின்றன. மருந்தகத்தில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார். இப்பிரச்னைக்கு தீர்வு கூறுங்கள்?



கண்களில் உள்ள நீர் இருப்பு குறைந்தால் இதுபோன்ற கண் பிரச்னை ஏற்படலாம். வறண்ட கண்கள் என இதை கூறுவோம். உறங்கும்போது கண்களுக்கு போதிய ஈரப்பதம் கிடைக்காமல் இருந்தால், கண்ணீர் சுரப்பி முறையாக வேலை செய்யவில்லை என்றால் இதுபோன்ற பிரச்னை ஏற்படும். உடல் சூடு காரணமாகவும் இப்பிரச்னை சிலருக்கு ஏற்படலாம். வெயிலில் வேலை செய்பவர்கள், நீண்ட நேரம் வாகனங்களில் செல்பவர்களுக்கு கண்களில் துாசி விழுந்து சிவக்கும். இமைகளின் ஓரங்களில் அலர்ஜி ஏற்பட்டு கண்கள் சிவக்கும் வாய்ப்பு உள்ளது. கண்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். உடல் சூட்டை குறைக்க நீண்ட நேரம் குளிப்பது, நீர் உணவு பொருட்கள் சாப்பிட்டால் கண்கள் பாதிப்பை குறைக்கலாம்.

- டாக்டர் கணபதி, கண் பிரிவு தலைவர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேனி.

எஸ்.முனியசாமி, திருப்புல்லாணி: ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு எதனால் ஏற்படுகிறது?

ஒன்றரை மாதம் முதல் 4 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த சொட்டு மருந்து கொடுப்பதனால் குழந்தைகளுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. அசுத்தமான தண்ணீரை பருகுவதால் டயேரியா வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவை உடனடியாக சூடுபடுத்தி சாப்பிடும் பொழுது புட் பாய்சன் ஏற்பட்டு உடலுக்கு ஒவ்வாமை உள்ளிட்ட உடல் நலக்குறைபாடுகள் ஏற்படுகிறது. எனவே அன்றே சமைத்து அன்றே சாப்பிடுவது சாலச்சிறந்தது.

குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். குளோரினேசன் செய்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தற்போது மழைக் காலம் துவங்க உள்ளதால் தண்ணீரின் மூலமாக வரக்கூடிய நோய்களை கட்டுப்படுத்துவது அவசியம். குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீரை வழங்குவதன் மூலம் வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுக்க முடியும்.

- டாக்டர் பிரதீப், வட்டார மருத்துவ அலுவலர், திருப்புல்லாணி.

கார்த்திக், சிவகங்கை: வாய் துர்நாற்றத்தை எவ்வாறு சரிசெய்வது?

உணவுத் துகள் வாயில் தங்கிவிட்டால் அவை பாக்டீரியாக்களைச் சேகரித்து வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். தொடர்ச்சியான வாய் துர்நாற்றம் அல்லது வாயில் கெட்ட சுவை இருந்தால் அது ஈறு நோயின் எச்சரிக்கைக்கான அறிகுறியாக இருக்கலாம். நமது உடலில் உமிழ்நீர் இயற்கையாகவே உணவைச் சிதைக்கிறது. வாயில் போதுமான அளவு உமிழ்நீர் இல்லாதபோது உணவுத் துகள் தேங்கி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சைனஸ் மற்றும் நுரையீரல் தொற்று, சிறுநீரக, கல்லீரல் நோய் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். வாய் கொப்பளிக்கும் திரவமும் சூயிங்கமும் வாய் துர்நாற்றத்திற்கு குறுகிய காலத் தீர்வுகளாக இருந்தாலும், வாய் துர்நாற்றத்தைத் தொடர்ந்து தவிர்ப்பதற்கான வழி ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். வருடத்திற்கு ஒரு முறையாவது பல் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

- டாக்டர் விஜய்பாரத், அரசு மருத்துவமனை, காளையார்கோவில்.

பாலகிருஷ்ணன், அருப்புக்கோட்டை: எனக்கு 60 வயது ஆகிறது. 2 ஆண்டுகளாக காது அடைப்பது போல் உள்ளது. மூக்கை பிடித்துக் கொண்டு மூச்சை காது வழியாக விட்டால் சரியாவது போல் உள்ளது. இது சரியா? இதற்கு சிகிச்சை ஏதாவது உண்டா?

காது, மூக்கு, தொண்டை ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. கிருமி தொற்றுகளினால் ஏற்படும் அடைப்புக்கு தக்கபடி ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளை எடுப்பது நல்லது. இடையே இந்த மருந்துகளை டாக்டர்கள் ஆலோசனை இன்றி நிறுத்துவது நுண் கிருமிகளை வீரியம் பெறச்செய்து சைனஸ்சிடிஸ் பரவச் செய்யும். வயதானவர்களுக்கு காது அடைப்பது போல் இருப்பதும், மூக்கை பிடித்துக் கொண்டு காது வழியாக காற்றை வெளியேற்றும் போது தற்காலிகமாக அது சரியாவதும் உண்டு. இது யுஸ்டாசியன் குழாய் செயல் இழப்பு, காது, மெழுகு அடைப்பினால் ஏற்படும் பொதுவான அறிகுறி. சளி, அலர்ஜி ஆகியவற்றால் குழாயில் வீக்கம் ஏற்பட்டு அடைத்துக் கொள்ளலாம். வயதாகும்போது காது மெழுகு கடினமாகி காதை அடைக்க வாய்ப்பு உள்ளது. மூக்கை பிடித்துக் கொண்டு காது வழியாக காற்றை வெளியேற்ற முயற்சிக்கக்கூடாது. அதிக அழுத்தம் கொடுப்பது காது ஜவ்வை பாதிக்கலாம்.

- டாக்டர் ஹரிஹரசுப்ரமணியன், அருப்புக்கோட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us