PUBLISHED ON : அக் 18, 2026

மாதவன், மதுரை: சிறுநீரக நோயாளிகளுக்கு 'பன்' என்ற பரிசோதனை எதற்காகச் செய்யப்படுகிறது?
'பிளட் யூரியா நைட்ரஜன்' என்பதன் சுருக்கமே 'பன்' பரிசோதனை. இதில் நைட்ரஜன் என்ற கழிவுப்பொருள் உடலில் எப்படி வெளியேறுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதன் மூலம் சிறுநீரகத்தின் பாதிப்பை மட்டுமல்லாமல் கல்லீரல் செயல்பாட்டினையும் சேர்த்துத் தெரிந்துகொள்ளலாம். இதன் இயல்பு அளவு 10 லிருந்து 20 மி.கி./டெ.லி.வரை. இதற்கு மேல் அளவுஅதிகரித்தால், சிறுநீரகப் பிரச்னை என்றும், அளவு குறைந்தால் கல்லீரலில் பிரச்னை என்றும் பொருள். சிறுநீரகப் பிரச்னைக்காக சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு அந்த சிகிச்சை பலன் தருகிறதா என்பதையும் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். சிறுநீரகப் பிரச்னைக்கு நீர் வறட்சி, இதயச் செயலிழப்பு போன்ற வேறு காரணங்கள் இருக்கக்கூடுமா என்பதையும் இது தெரிவிக்கிறது.
- டாக்டர் கு. கணேசன், பொது மருத்துவ நிபுணர், ராஜபாளையம்
ரமேஷ், வடமதுரை: எனக்கு 36 வயது ஆகிறது. சமீபத்தில் பரிசோதித்த போது ரத்த அழுத்தம் சிறிது கூடுதலாக உள்ளது. உடலும் பருமனாக இருப்பதால் ரத்த அழுத்தம், இதய நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள டாக்டர் அறிவுறுத்தினார். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
உலகெங்கிலும் மன அழுத்தம், தவறான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் ரத்த அழுத்தத்தினால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் 2020 ல் தந்த புள்ளி விவரப்படி இந்தியாவில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களில் மூவரில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் உள்ளது.
ரத்த அழுத்த பாதிப்பின் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. சற்று கவனம் செலுத்தினால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், அதன் பாதிப்புகளை வெகுவாக தவிர்க்கலாம். உடல் எடையை (பி.எம்.ஐ.,) சரியான அளவில் வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் 45 நிமிடங்கள் சீரான உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும். உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் உப்பு அதிகமாக உள்ளது என்பதை நினைவு கொள்ளவும். இனிப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பூட்டப்பட்ட குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை வெகுவாக குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அதிக அளவில் பழங்கள், காய்கறிகளை பச்சையாகவோ, மிதமாக வேக வைத்தோ சாப்பிட வேண்டும்.
புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த வேண்டும். அது ரத்தக் குழாய்களின் அடைப்புக்கும், பல வகையான நோய்களுக்கும் வழி வகுக்கும். மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். அதிகமாக டீ, காபி குடிப்பது, வெகுநேரம் டி.வி., பார்ப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
- டாக்டர் சேகர், பொது மருத்துவம், வடமதுரை.
ப.முருகேசன், ராமநாதபுரம்: நடக்கும் போது பெருவிரல் மூட்டில் அதிக வலி உள்ளது. ரத்தம் கட்டியது போல் வீக்கம் இருக்கிறது. இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது?
ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பதன் காரணமாக அதன் படிகங்கள் மூட்டுகளில் படியும். இதனால் 'கவுட் ஆர்த்ரைட்டிஸ்' எனும் ஒரு வகையான மூட்டு அலர்ஜி நோய் ஏற்படும். இதன் அறிகுறியாக பெருவிரல் மூட்டில் வலி, வீக்கம், ரத்தக்கட்டு போன்றவை தென்படும். சிலருக்கு கணுக்கால், முழங்கால் உள்ளிட்ட மற்ற மூட்டுகளிலும் பாதிப்பு ஏற்படுத்தலாம். விரைவில் எலும்பு தேய்மானம் அடையும். இதனால் தாங்க முடியாத அளவுக்கு வலி இருக்கலாம். இரவு நேரங்களில் வலி அதிகரிக்கும். யூரிக் அமிலம் அளவு அதிகமாக இருக்கும். அனைவருக்கும் இந்த நோய் ஏற்படாது. உணவுப் பழக்கத்தில் போதிய கவனம் செலுத்தாததால் இந்த நோய் வரும். உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு எளிதாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
மதுபானங்கள், கடல் உணவுகளை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம்.
- டாக்டர் ஆர்.கண்ணன், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
வள்ளிநாயகம், நரிக்குடி: என் பையனுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி, இருமல் ஏற்படுகிறது. என்ன காரணம், தீர்வு என்ன?
குளிர்காலம், பருவமழை மாற்றக் காலங்களில் குளிர் காற்றுடன் வைரஸ் கிருமிகள் எளிதில் பரவும். பெரியவர்களுக்கு வரும் தொற்றுகள் மூலமும் எளிதில் பரவலாம். பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டி சுகாதாரம் இல்லாமல் இருந்தால் அதன்மூலம் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.
காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பாராசிட்டமால் மருந்தை மருத்துவரின் ஆலோசனையின்படி கொடுக்க வேண்டும். 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல், சளி, இருமல் இருந்தால், டெங்கு பரிசோதனை உட்பட முறையான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 3 நாட்களுக்கு உடம்பு வலி இருக்கும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் காலத்தில் உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க அதிகளவில் தண்ணீர், சுடுநீர், ஓ.ஆர்.எஸ்., கரைசல், இளநீர், சூடான கஞ்சிகளை வழங்கலாம்.
குளிர்கால உணவுகளைத் தவிர்த்து, பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொண்டால் உடல் நலம் விரைவாகத் தேறும்.
டாக்டர். சுரேஷ் கார்த்திக், குழந்தைகள் நல மருத்துவர், காரியாபட்டி
