தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்

டாக்டரைக் கேளுங்கள்


PUBLISHED ON : நவ 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கஸ்துாரி, மதுரை: ஆணிக்கால், மூலம், தோல் நோய்கள், மற்ற நாள்பட்ட நோய்களுக்கு ஹோமியோபதி சிறந்ததா?

ஆணிக்கால், மூல நோய்களை ஆங்கில மருத்துவத்தில் அறுவை சிகிச்சை மூலமே அகற்ற முடியும். அறுவை சிகிச்சைக்கு பின்னும் சிலருக்கு மீண்டும் இந்நோய் திரும்புவதாக கூறுகின்றனர். ஹோமியோபதி சிகிச்சை மூலம் இந்நோய்களை வேரோடு களைய முடியும்.

தோல் நோய்கள், நாள்பட்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் நிவாரணம் கிடைத்தாலும் முழு குணம் கிடைப்பதில்லை. ஹோமியோபதியில் இக்சீமா, பூஞ்சைக் காளான் தொற்று, லிக்கன் பிளானஸ், அலோபேசியா, படர் தாமரை போன்ற பல தோல் நோய்கள், வயிற்றுப்புண், எலும்பு மூட்டு பிரச்னை, முடக்குவாதம், சைனஸ், நாள்பட்ட இருமல், ஆறாத புண்கள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கும் விரைவில் நிவாரணமும் முழு குணமும் கிடைக்கும். அவரவர் நோயின் தன்மையைப் பொறுத்து 6 முதல் 8 மாதங்கள் வரை சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமடையலாம்.

- டாக்டர் என்.ஆர்.ஏ.மதுமிதா, ஹோமியோபதி மருத்துவ நிபுணர், மதுரை.

ராஜேஷ்வரி, அல்லிநகரம்: எனது 3 வயது பெண் குழந்தைக்கு கண்கள் அடிக்கடி சிவந்து நீர்வடிகிறது. இது எதனால் ஏற்படுகிறது. இதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்?



வீட்டில் இரவில் கொசுவர்த்தி சுருள், மின்சாரத்தில் பயன்படுத்தக்கூடிய கொசுவிரட்டிகள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அதில் இருந்து வெளிவரும் புகையால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படலாம். இதனாலும் கண்கள் சிவந்து, கண்ணீர் வரலாம் அல்லது பருவநிலை காலத்தில் வைரஸ் தொற்றால் பரவக்கூடிய 'மெட்ராஸ் ஐ' ஆக இருக்கலாம்.

முடிந்த வரை கொசுவலை பயன்படுத்துங்கள். குழந்தைகள் பள்ளி செல்ல துவங்கியதும் 6 மாதங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

- டாக்டர் சிவகுமரன், நிலைய மருத்துவ அதிகாரி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, தேனி

கருணாகரன்,சிவகங்கை: பக்கவாதம் எந்த வயதினருக்கு வரும்?

பக்கவாதம் இளைஞர்கள் முதல் பெரியோர் வரை வரக்கூடும். பொதுவாக மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதாலோ அல்லது ரத்த உறைவு காரணமாகவோ அடைப்பு ஏற்படுவதால் அல்லது மூளையில் ரத்தக் குழாய் திடீரென வெடித்து ரத்தக் கசிவு ஏற்படுவதால் பக்கவாதம் வரும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், புகைபிடித்தல் மற்றும் மதுப்பழக்கம், உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக பக்கவாதம் வரும்.

இவற்றை தடுக்க ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க வேண்டும். உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பழங்கள் , காய்கறி, கீரை, முழு தானியங்கள், கொழுப்பு குறைந்த புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி நடைபயிற்சி, எளிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். புகை, மதுவை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவையும், கொலஸ்ட்ரால் அளவையும் சரியாக பராமரிக்க வேண்டும். பொதுவாக திடீரென தலைச்சுற்றல், பார்வைக் குறைபாடு, முகத்தின் ஒரு பகுதி கோணலாக மாறுதல் அல்லது சிரிக்கும் போது வாய் ஒருபுறம் இழுத்தல், கை, காலைத் துாக்க முடியாமல் பலவீனமடைதல், பேசும்போது நாக்கு குளறுதல் உள்ளிட்ட அறிகுறி தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

- டாக்டர் ரமணன், நரம்பியல் நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.

செல்வராஜ், சாத்துார்: எனது சகோதரிக்கு 45 வயது ஆகிறது. அவருக்கு மார்பகத்தில் புற்றுநோய் இருப்பதாக கூறி ஆபரேஷன் செய்துள்ளனர். மார்பக புற்று நோய் ஏன் ஏற்படுகிறது? அறிகுறிகள் என்ன?

மார்பக புற்றுநோய் பரம்பரை ஜீன்கள் காரணமாகவும்,மரபணு மாற்றம் காரணமாகவும்,பழைய டைப் கருத்தடை மாத்திரைகளை உண்டதாலும் ஏற்பட வாய்ப்பு உண்டு. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அரசு மருத்துவமனையை நாடினால் அவர்களுக்கு சுயமாக மார்பக பரிசோதனை செய்து கொள்ள கற்றுத் தரப்படும். வாரம் ஒரு முறை மாதம் ஒருமுறை இந்த சுய பரிசோதனையை அவர்களே செய்து தங்களை பரிசோதித்து கொள்ளலாம். ஆரம்பத்தில் பெண்களின் அக்குள் பகுதியில் நெறி கட்டிகள் தோன்றும். உடனடியாக கண்டறிந்தால் 90 சதவீதம் ஆபரேஷன் மூலம் குணப்படுத்தி விடலாம். மார்பகம் சுருங்குவது,காம்பில் சீழ், ரத்தம், வருவது, மார்பகம் வற்றி போவது போன்றவை இதன் அறிகுறிகள்.

டாக்டர்.முனி சாயி கேசவன், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை சாத்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us