PUBLISHED ON : ஜூலை 19, 2026

நவீன புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து, கே.எம்.சி.எச். மருத்துவமனையின் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்ரமணியம், மருந்தியல் சிகிச்சை நிபுணர் ராம்அபினவ், அறுவை சிகிச்சை நிபுணர் எழிற்செல்வன் ஆகியோர் நலம் பேசுவோம் நிகழ்ச்சி மூலம் பகிர்ந்த முக்கியமான தகவல்கள் இவை:
இம்யூனோ தெரபி எப்படி கேன்சர் செல்களை அழிக்கிறது?
புற்றுநோய் செல்கள் தந்திரமானவை. நோய் எதிர்ப்பு உயிரணுக்களான 'டி-செல்'களிடம் சிக்காமல் தப்பித்து மறைந்து கொள்ளும் அல்லது தவறான தகவல்களை அனுப்பும். இம்யூனோதெரபியில் செலுத்தப்படும் மருந்துகள், புற்றுநோய் செல்களை நேரடியாக அழிக்காமல், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை துாண்டி புற்றுநோய் செல்களை கண்டறிந்து அழிக்க செய்யும். அறுவை சிகிச்சை, கீமோதெரபி மூலம் அழிக்க முடியாத புற்றுநோய் செல்களை இம்முறையில் அழிக்கலாம்.
கார்டிசெல் தெரபி உடலுக்குள் எப்படி வேலை செய்கிறது?
இது ஒரு மேம்பட்ட மரபணு மாற்ற சிகிச்சை. நோயாளியின் உடலில் இருந்து டி செல்களை தனியாக பிரித்து ஆய்வகத்திற்கு அனுப்பப்படும். எந்த செல்களை குறி வைக்க வேண்டுமோ அதற்கான ஆன்டிஜென் பொருத்தி, சூப்பர் டி-செல்களாக மாற்றப்படும். இதை மீண்டும் நோயாளி உடலுக்குள் செலுத்தும் போது, துல்லியமாக புற்றுநோய் செல்களை கண்டறிந்து அழிக்கிறது. இது தனிநபர் சார்ந்த சிகிச்சை முறை. சூப்பர் டி-செல்கள் நிரந்தரமாக உடலில் இருப்பதால் மீண்டும் புற்றுநோய் செல்கள் உருவானாலும் அழித்துவிடும். இச்சிகிச்சைக்கு செலவு அதிகம் ஆகும்.
இந்த சிகிச்சையில் ஜெனடிக் டெஸ்ட் அவசியமா?
அவசியம். அதில் 2 வகை டெஸ்ட் உள்ளது. ஒன்று, புற்றுநோய் கட்டிக்கு எந்த மருந்து சிறந்தது என அறிவதற்கு. மற்றொன்று பரம்பரையாக வந்த நோயா என அறிவதற்கு. முடிவுகளை பொறுத்து, குடும்ப உறுப்பினர்களும் பரிசோதித்து தற்காத்து கொள்ள முடியும்.
கதிர்வீச்சு சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம் பற்றி?
தொண்டை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை சிறந் தது. இதில் புரோட்டான் தெரபி அதிநவீன, துல்லிய சிகிச்சையை உறுதி செய்கிறது. கதிர்வீச்சு தேவைப்படாத பகுதிக்கு இது செல்லாது. இதனால் ஆரோக்கியமான திசுக்கள் காக்கப்படுவதோடு பக்கவிளைவு மிக மிக குறைவு. இச்சிகிச்சை மும்பையின் டாடா மெமோரியல் மருத்துவமனை, சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றில் மட்டுமே கிடைக்கும்.
மார்பக புற்றுநோய் சிகிச்சையின் அடுத்தநிலை?
சிலருக்கு மார்பகங்களை எடுக்கும் அளவுக்கு புற்றுநோய் கட்டிகள் இருக்கும். ரோபோட்டிக் சர்ஜரியில், நீக்கப்பட்ட மார்பகத்தின் அளவுக்கேற்ப, வேறு இடத்தில் தசை எடுத்து, பொருத்திவிடலாம். இதனால், தோற்றத்தில் மாற்றம் தெரியாது. மேலும், வயிறு, வயிற்றுக்கு கீழ் கதிர்வீச்சு சிகிச்சை செய்யும் போது, கருமுட்டை வளர்ச்சி பாதிக்கப்படும் சூழல் இருந்தது.
இன்று கருமுட்டைகளை பாதுகாக்கும் தொழில் நுட்பமும் வந்துவிட்டது. இதனால் சிகிச்சைக்கு பிறகு தாய்மையை உறுதி செய்ய முடியும்.
