துாக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் உடல் பருமன்!
துாக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் உடல் பருமன்!
PUBLISHED ON : ஆக 30, 2026

மாதவிடாய், கர்ப்பகாலம் மற்றும் 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்ற பின், பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகளால், துாக்கமின்மைக்கு பெண்கள் எளிதில் ஆளாகின்றனர்.
தைராய்டு பாதிப்பு, அதீத மன அழுத்தம் காரணமாக, கார்ட்டிசோல் ஹார்மோன் அதிகம் சுரப்பதால் ஏற்படும், தோல் வியாதிகள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய், தவறான துாக்கப் பழக்கம், மன அழுத்தம், குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்புகள், பணிச்சுமை ஆகியவையும் துாக்கமின்மைக்கு காரணங்கள்.
சீரான துாக்கத்திற்கும், ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், கார்டிசோல், இன்சுலின் மற்றும் மெலடோனின் ஆகிய ஹார்மோன்களுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது. இவை துாக்கத்தின் தன்மை, எவ்வளவு நேரம், எப்படி துாங்குகிறோம் என்பதில், தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
துாக்கம் வருவதிலும், தொடர்ந்து துாங்குவதிலும் சிரமம், நள்ளிரவில் விழிப்பு வருவது, அதிகாலையிலேயே விழிப்பது, பகல் நேரத்தில் துாக்கம், குறட்டை, பதற்றம், மனச்சோர்வு,
காலையில் எழும்போதே ஏற்படும் தலைவலி, போதிய அளவு துாங்கிய பிறகும் நீடிக்கும் நாள்பட்ட சோர்வு, ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆகியவை துாக்கமின்மைக்கான அறிகுறிகள்.
மாதவிடாய் நின்ற பின் , சுவாசத்தைத் துாண்டுவதிலும், கொழுப்பு பரவலை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுகிறது.
இதனால், சுவாசப்பாதையின் மேல் பகுதி, துாக்கத்தில் குறுகிவிடும், 'மேல் சுவாசப்பாதை எதிர்ப்பு நோய் -யூ.ஏ.ஆர்.எஸ்., என்ற நுட்பமான சுவாசக் கோளாறு பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. வழக்கமான, 'அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' எனப்படும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் போலல்லாமல், இதில் சுவாசம் தடைபடுவதற்கான அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது.
ஆனால், சுவாசப் பாதையில் ஏற்படும் தடை காரணமாக, துாக்கத்தில் அவ்வப்போது விழிப்பு ஏற்படும். இதனால் ஆழ்ந்த துாக்கம் இல்லாமல், சோர்வு, துாக்கமின்மை, மந்த நிலை, புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும்.
இந்த அறிகுறிகள் அனைத்தும் பொதுவானதாக இருப்பதால், துாக்கமின்மையால் ஏற்படும் பிரச்னை என்பதே பல சமயங்களில் புரியாது.
உடல் பருமன் உள்ள பெண்களிடம், துாக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படுவது அதிகம் உள்ளது.
'ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம்' எனப்படும் நரம்பியல் துாக்கக் கோளாறு இருந்தால், கால்களை நகர்த்த வேண்டும் என்ற கட்டுப்படுத்த முடியாத துாண்டுதலை ஏற்படுத்தும்; கால்களில் ஏதோ ஊர்வது, பிடித்து இழுப்பது போன்ற சிரமமான உணர்வை தரும். இரும்புச்சத்து குறைபாடு, ஹார்மோன் மாற்றங்களால் இது ஏற்படுகிறது. பொதுவாக துாக்கத்தில் தான் இப்பிரச்னை ஏற்படும் என்பதால், அவ்வப்போது விழிப்பு ஏற்படும்.
• தினமும் சரியான நேரத்திற்குத் துாங்கச் செல்வது, படுக்கை அறையில், நீல ஒளியை தவிர்ப்பது, தினசரி உடற்பயிற்சி செய்வது, சரியான உடல் எடையை பராமரிப்பது, ரத்த சர்க்கரை, கொழுப்பை கட்டுக்குள் வைப்பது, வளர்சிதை மாற்றத்தை சீராக வைக்க உதவும்.
டாக்டர் கார்த்திக் மாதேஷ் ரத்னவேலு
இயக்குநர் மற்றும் முதுநிலை நிபுணர்,காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, சிம்ஸ் மருத்துவமனை, சென்னை. 94009 33973karthikmadesh@hotmail.com
