PUBLISHED ON : நவ 16, 2025

வலிப்பு நோய் என்றாலே பலருக்கு பயமும், தவிப்பும் ஏற்படுகிறது. தனியாக
பயணம் செய்வது, விளையாட்டு, வேலை, திருமணம் என அனைத்துக்கும் ஓர் தடையாக
இந்நோய் மாறிவிடுகிறது. நாளை உலக வலிப்பு நோய் தினம்
அனுசரிக்கப்படுவதையொட்டி, இந்நோய் குறித்து நரம்பியல் மற்றும் வலிப்பு நோய்
நிபுணர் டாக்டர் ராஜேஷ் சங்கரை சந்தித்து பேசினோம்.
வலிப்பு நோய் ஏன் ஏற்படுகிறது: மூளையில் ஏற்படும் நரம்பு கோளாறினால், சில
அசாதாரண மின்னழுத்த செயல்படுகள் ஏற்படுகின்றன. இதுவே வலிப்பு. பிரசவத்தின்
போது ஏற்படும் சிக்கல்கள், பிறக்கும் போது மூளையில் ஏற்படும்
கட்டிகள்,பரம்பரை பாதிப்பு, பக்கவாதம், புற்றுநோய் கட்டிகள், விபத்து
மற்றும் தலையில் ஏற்படும் காயங்கள், போதுமான துாக்கமின்மை ஆகியவை பொதுவான
காரணங்கள்.
இப்பாதிப்புக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரை
எடுத்துக்கொள்ள வேண்டுமா?: வலிப்பு ஏற்படுவதற்கான காரணம் மற்றும் அதன்
தன்மையை பொறுத்து மருந்து குறித்து தீர்மானிக்க இயலும். மாத்திரை
சாப்பிடுவது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.
வலிப்பு
நோய் உள்ள குழந் தைகளுக்கு படிப்பு பாதிக்குமா: சில குழந்தைகளுக்கு
படிப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதற்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகளால்
கவனச்சிதறல் ஏற்படும். இதனை, வேறு மருந்துகள் கொடுத்து சரிசெய்யலாம்.
விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம்.
தொடர்ச்சியாக ஆறு மாதம்
வலிப்பு வரவில்லை என்றால் வாகனங்கள் ஓட்டலாம். பெற்றோர், பயிற்சியாளர்கள்
கண்காணிப்பில் மட்டுமே நீச்சல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி
வலிப்பு வருபவர்கள் தனியாக பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகி விடுமா?: பலருக்கு மருந்து
எடுத்தவுடன் வலிப்பு குறையும். சிலருக்கு, மருந்து எடுத்துக்கொண்டாலும்
அடிக்கடி ஏற்படும். இத்தகைய நிலை இருந்தால், வலிப்பு நோய் சிறப்பு
நிபுணர்களை அணுகுவதே சரி. மூளையில் பாதிக்கப்பட்ட இடத்தை அறிந்து,
துல்லியமான முறையில் அறுவைசிகிச்சை செய்து சரிசெய்ய முடியும். இதனால்,
பக்கவிளைவுகள் குறைந்து, வாழ்க்கை தரம் மேம்படும்.
வலிப்பு நோய்
உள்ள பெண்கள்: நோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாக தெரிவித்துவிட்டு,
திருமணம் செய்துகொள்ள வேண்டும். சில விஷயங்களில் கவனமாக இருந்து, இல்லற
வாழ்க்கையில் ஈடுபடலாம்; குழந்தை பெற்றுக்கொள்ளலாம். திருமணத்திற்கு முன்
மருத்துவர் ஆலோசனை பெற்று, உரிய மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வலிப்பு நோய்க்கான பரிசோதனைகள் என்னென்ன?: சி.டி., ஸ்கேன், இ.இ.ஜி.,
பரிசோதனை செய்யப்பட்டு வந்தன. தற்போது, எம்.ஆர்.ஐ., ஸ்கேன்
செய்யப்படுகிறது. இதற்கான பிரத்யேக கருவியான 3டி எம்.ஆர்.ஐ., ஸ்கேன்
வாயிலாக பாதிப்பை துல்லியமாக அறியலாம். மருந்துகளால் கட்டுப்படாத பாதிப்பு
உள்ளவர்கள் ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி, செயற்கையாக வலிப்பு உருவாக்கி
பாதிப்பின் தன்மை அறிய, வீடியோ இ.இ.ஜி. கருவியும் பயன்படுத்தப்படுகிறது.
எந்த வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?: வலிப்பு நோயால் 70-80
சதவீதம் பாதிக்கப்படுவார்கள் குழந்தைகள் தான். எந்த வகை வலிப்பு நோய்
என்பதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், முழுமையான தீர்வு காணமுடியும்.
குடும்பத்தில் யாருக்காவது அறிகுறிகள் தென்பட்டால், அலட்சியம்
காண்பிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
டாக்டர் ராஜேஷ் சங்கர்நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் நிபுணர்
87544 89941

