PUBLISHED ON : செப் 20, 2026

இளம் வயதிலே சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை வருவோர் அதிகரித்துள்ளதாக, அரசு மருத்துவமனை சிறுநீரகவியல் பிரிவு துணை பேராசிரியர் டாக்டர் தினகர்பாபு தெரிவித்தார்.
அவருடன் ஒரு பேட்டி:
சிறுநீரகத்தில் கல் உருவாவதை உணர்த்தும் அறிகுறிகள் என்ன?
இடுப்பு பகுதியில் வலி ஏற்படலாம். இந்த வலி, முன்வயிற்று பகுதிக்கு பரவலாம். தொடர்ச்சியான வலியாக இல்லாமல் விட்டு விட்டு வலிக்கும். டாக்டரிடம் பரிசோதித்து, சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம்.
கல் உருவாக முக்கிய காரணம் என்ன?
ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் உள்ளிட்ட திரவங்கள் எடுத்து கொள்ள வேண்டும். இது பருவநிலைக்கு ஏற்ப மாறும். வெயில் காலங்களில் அதிகமாகவும், குளிர்காலங்களில் சற்று குறைவாகவும் எடுத்துக் கொள்ளலாம். மிகக்குறைவாக திரவங்கள் எடுக்கும் போது கல் உருவாகும். ஆனால் அது மட்டுமே காரணம் என்று கூற முடியாது.
அதிக உப்பு, கீரை, தக்காளி, ஆக்சலேட் உள்ள உணவு பொருட்கள், அசைவ உணவு எடுத்து கொள்ளும் போதும், கல் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
எத்தனை மி.மீ. அளவுள்ள கற்கள் தானாக வெளியேறும்?
பொதுவாக, 5-8 மி.மீ. அளவுள்ள சிறுநீரக கற்கள், உரிய மருந்துகள் மற்றும் அதிக தண்ணீர் குடிப்பதால், தானாகவே வெளியேற வாய்ப்பு அதிகம். மருத்துவ முறையில் சிறிய கற்கள் வெளியேற முயற்சி எடுத்தும், 14 நாட்களுக்கு மேல் வெளியேறாத பட்சத்தில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம். லேசர் சிகிச்சை முறை அதிநவீன, மிகவும் பாதுகாப்பான கல் அகற்றும் முறை. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால், அது அவசர மருத்துவ நிலையா?
கற்கள் சிறுநீரக பாதையை அடைத்து, சிறுநீர் வெளியே செல்லாமல் அடைக்கும் போது, அதில் கிருமி தொற்று ஏற்பட்டு, கடுமையான காய்ச்சலை உண்டாக்கும். சிறுநீர் நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில், அறுவை சிகிச்சை மூலம் கல் அகற்றி, நோய் தொற்றை குணப்படுத்துவது அவசியம்.
ஒருமுறை கல்லை அகற்றிய பிறகு, மீண்டும் உருவாகுமா?
அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிலருக்கு கல் உருவாகலாம். தடுக்க அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். ஒரே நேரத்தில் அதிகளவு குடிக்காமல், நாள் முழுவதும் சிறிது சிறிதாக குடிக்கலாம். கீரை, தக்காளி, முட்டைகோஸ், காலிபிளவர், அசைவ உணவுகள், காளான், சாக்லெட் தவிர்க்க வேண்டும். வாழைத்தண்டு, வாழைச்சாறு, வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை அதிகம் சாப்பிட்டால், புதிய கற்கள் உருவாகாது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, சூழலுக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். வலி நிவாரணி மாத்திரைகள் சிறுநீரகத்தை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். மருத்துவர் சொல்லாமல் மாத்திரை எடுக்கக்கூடாது. பரிந்துரைத்த நாட்களுக்கு மேல் மருந்து எடுப்பதும் தவறு. உடம்பில் உள்ள உப்பின் அளவை அறிய, யூரியா மற்றும் கிரியாட்டினின் ரத்த பரிசோதனை செய்யலாம். இதை அவ்வப்போது பரிசோதித்து, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை அறியலாம்.
