சிக்கலான கேன்சர் கட்டியை சுலபமாக அகற்றும் ரோபோடிக் தொழில்நுட்பம்!
சிக்கலான கேன்சர் கட்டியை சுலபமாக அகற்றும் ரோபோடிக் தொழில்நுட்பம்!
PUBLISHED ON : மே 31, 2026

நாக்கின் பின்புறம் கேன்சர் பாதித்தால், அறுவை சிகிச்சை செய்து கேன்சர் கட்டியை அகற்றுவது என்பது, ஐந்து ஆண்டுகளுக்கு முன் சவாலான விஷயம். காரணம், தாடையை இரண்டாக பிளந்து, நாக்கின் பின்புறம் இருக்கும் கேன்சர் கட்டியை அகற்ற வேண்டும். பல நேரங்களில், கட்டியை அகற்ற சரியான கோணம் கிடைக்காது. கட்டியை அகற்றிய பின், தாடையை இணைத்து, பழைய நிலைக்கு கொண்டு வர மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு 10 மணி நேரத்திற்கு மேல் ஆகலாம்.
அறுவை சிகிச்சைக்குப் பின், காயம் ஆறுவதற்கே பல மாதங்கள் ஆகலாம். திறந்த நிலை அறுவை சிகிச்சையில், பேசுவதற்கு, உணவை விழுங்குவதற்கு சிரமமாக இருக்கும்.
எனவே, சிக்கலான இடத்தில் கேன்சர் பாதிப்பு உள்ளது; கதிரியக்க சிகிச்சை செய்து கொள்ளுங்கள், என்று சொல்லி அனுப்பி விடுவோம். கழுத்து, மார்பு பகுதிகளில் கேன்சர் பாதித்தாலும் இதே நிலை தான். நாக்கின் பின் பகுதியில் வரும் கேன்சர் கட்டியை அகற்ற, தீர்வாக அமைந்து உள்ளது, நவீன ரோபோடிக் அறுவை சிகிச்சையில் செய்யப்படும், 'டார்ஸ்' என்ற இரண்டு மணி நேரத்தில் துல்லியமாக கட்டியை அகற்றக் கூடிய, 'டிரான்ஸ் ஓரல் ரோபோடிக் சர்ஜரி'.
இதனால் அறுவை சிகிச்சை சுலபமானதுடன், அடுத்த நாளே வாய் வழியாக உணவு சாப்பிடலாம். இயல்பாக பேசவும் முடியும்.
ரோபோடிக் அறுவை சிகிச்சை வாயிலாக கழுத்து, வயிறு, மார்பு என்று சிக்கலான உடல் பகுதிகளில் வரக் கூடிய கேன்சருக்கு அறுவை சிகிச்சை செய்யலாம்.
குறிப்பாக, தைராய்டு ஹார்மோன் செயல்பாடு சீராக இல்லாவிட்டால், மருந்து, மாத்திரைகள் சாப்பிடலாம். ஆனால், தைராய்டு சுரப்பியில் கேன்சர் கட்டி வந்தால், அறுவை சிகிச்சை செய்து தான் அகற்ற வேண்டும். நாக்கைப் போன்றே, தைராய்டு சுரப்பி இருக்கும் கழுத்துப் பகுதியும் சிக்கலானது.
ஹார்மோன் கோளாறு, கேன்சர் கட்டி இரண்டும், பெண்களையே அதிகம் பாதிக்கிறது. கேன்சர் கட்டி என்று உறுதியாகி, திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், கழுத்தில் பெரிய துளை போடுவதால், தழும்பு தெரியுமே என்று, 15 முதல் 90 வயது வரை எல்லாப் பெண்களும் தயங்குவர்.
ரோபோடிக் அறுவை சிகிச்சையில் இந்த பிரச்னை இல்லை.
அக்குள் பகுதியி ல், 1 செ.மீ ., அளவில் துளை போட்டு சுலபமாக தைராய்டு கட்டியை அகற்றி விடலாம்.
போர்வெல் போடும் போது, சிறிய குழாய் போட்டு, அதன் வழியாக, கேமரா உதவியுடன், எவ்வளவு ஆழத்திலும் பார்க்க முடியும். அது போன்று கம்ப்யூட்டர் உதவியுடன் துல்லியமாக, இயல்பை விட 10 மடங்கு பெரிதுபடுத்தி, கேன்சர் பாதித்த பகுதியை மட்டும் அகற்ற முடிகிறது.
இதேபோன்று, தற்போது அதிகம் பாதிக்கும் மலக்குடல் கேன்சர் மற்றும் கேன்சருக்கு முந்திய, 'பாலிப்ஸ்' என்ற சிறிய கட்டிகள், நாக்கில் உருவாகும் கேன்சர் கழுத்தில் உருவாகும் நெறி கட்டிகளையும் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் சுலபமாக அகற்றி வி டலாம்.
டாக்டர் வெங்கட் பி, மூத்த மருத்துவ ஆலோசகர் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர், அப்பல்லோ புரோட்டான் கேன்சர் மையம், சென்னை 73389 92222apcc@apollohospitals.com
