அதிக நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதும் முதுகு தண்டுவட பிரச்னைக்கு காரணம்
அதிக நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதும் முதுகு தண்டுவட பிரச்னைக்கு காரணம்
PUBLISHED ON : செப் 27, 2026

வாழ்வியல் முறைகளால் ஏற்படும் நரம்பியல் பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருவதாக கூறுகிறார் அரசு மருத்துவமனை மூளை, தண்டுவட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.வெங்கடேஷ். அவர் நம்மிடம் பகிர்ந்தவை:
பக்கவாதம் ஏற்பட காரணம் என்ன?
மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு, மூளையின் சில பகுதிகளில் ரத்த கசிவு ஆகியவற்றால் பக்கவாதம் ஏற்படலாம். எந்த பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் தென்படும்.
அறிகுறிகள் என்னென்ன?
கை, கால் பலமின்மை, பேச்சு குளறுதல், நடையில் தடுமாற்றம் போன்றவை பக்கவாதத்தின் பொதுவான அறிகுறிகள். முன்னெச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமலும் பக்கவாதம் ஏற்படலாம்.
ஏன் ஏற்படுகிறது பக்கவாதம்?
பக்கவாதம் ஏற்பட சில ஆபத்து காரணிகள் உண்டு. மது அருந்துதல், புகைபிடித்தல், சர்க்கரை, ரத்த அழுத்தம் அதிகமாக இருத்தல், தொடர்ந்து மன அழுத்தம், உடல் பருமன் முக்கிய காரணங்கள். நடைபயிற்சி செய்வது, உடல் எடை குறைப்பது, சர்க்கரை, ரத்த கொதிப்பு அளவை கட்டுக்குள் வைத்தால், பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கலாம்.
பக்கவாத சிகிச்சையில் அதென்ன கோல்டன் ஹவர்?
பக்கவாத அறிகுறிகள் தோன்றிய முதல் ஆறு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெற்றால், முழுமையாக சரி செய்ய வாய்ப்பு உள்ளது. மருந்துகள் செலுத்தியோ, எண்டோ வாஸ்குலர் சிகிச்சை மூலமோ சிறு துளை வழியாக ரத்த அடைப்பை முழுமையாக நீக்க முடியும். இதற்கு பிறகு, முழுமையாக அடைப்பை சரி செய்வது கடினம்.
வலிப்பு இருப்பவர்களால் இயல்பு வாழ்க்கை நடத்த முடியுமா?
சில வலிப்பு நோய்களை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். ஏற்கனவே வலிப்பு நோய் இருப்பதற்கும், குழந்தைபேறின் போது திடீர் வலிப்பு ஏற்படுவதற்கும் வெவ்வேறு காரணங்கள் உள்ளன. இதனால் கர்ப்பம் தரிக்கும் போதே, வலிப்பு நோய் இருப்பவர்கள் தெரிவிப்பது அவசியம்.
அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வது முதுகுதண்டுவடத்தை பாதிக்குமா?
வாழ்வியல் சூழல், உடல் பருமனால் முதுகு தண்டுவடத்தில் அதிக பிரச்னைகள் ஏற்படுகின்றன. சரியான பொசிஷன் இல்லாமல், நீண்டநேரம் அமர்ந்து வேலை பார்ப்பது, செல்போனை நீண்ட நேரம் குனிந்து, படுத்த நிலையில் பார்ப்பது போன்றவை முதுகு தண்டுவட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
முதுகு தண்டுவட எலும்புகளின் நடுவில் உள்ள சவ்வு விலகி நரம்புகளையோ, தண்டுவடத்தையோ அழுத்தும். அப்போது நடக்க முடியாமை, கை, கால், இடுப்பு வலி ஏற்படலாம். பாதிப்பு குறைவாக இருக்கும் போது மருந்துகள், வாழ்வியல் முறைகளால் குணப்படுத்தலாம்.
தொடர்புக்கு: tharunvenkatesh@gmail.com
