PUBLISHED ON : பிப் 15, 2026

பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்து பேசும் போது, பெரும்பாலும் பேசப் படாமல் விடப்படும் ஒரு முக்கியமான பகுதி, வல்வா எனப்படும் பிறப்புறுப்பின் வெளிப்பகுதி.
அப்பகுதியில் ஏற்படும் நீடித்த தோல் பிரச்னைகளான அரிப்பு, எரிச்சல், வலி, சிவத்தல், தோல் நிற மாற்றம், புண்கள், தோல் தடிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் தோன்றும் தொகுப்பே வல்வோடெர்மடோசிஸ்.
சில பெண்களுக்கு இவை லேசாக இருக்கலாம்; சிலருக்கு தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு தீவிரமாக இருக்கலாம்.
தோல் அழற்சி, பூஞ்சை, பாக்டீரியா தொற் றுகள், சோப்பு, திரவ சோப்புகள், சானிட்டரி நாப்கின்கள் போன்றவற்றால் ஏற்படும் எரிச்சல், ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம் போன்றவை, இப் பிரச்னைக்கு காரணிகளாக இருக்கலாம்.
அரிதான சில சந்தர்ப்பங்களில் கேன்சரின் அறி குறியாகவும் இது இருக்கலாம்.
பல பெண்கள் இந்த அறிகுறிகளை, 'சாதாரண அரிப்பு' என்று நினைக்கலாம்; கூச்சம் காரணமாக, மருத்துவரை அணுகுவதில் தாமதம் செய்யலாம்.
சிகிச்சை தாமதமானால், நீடித்த வலி, தாம்பத்திய உறவில் சிக்கல், மன அழுத்தம், அன்றாட செயல்பாடுகளில் அசவு கரியம் ஏற்படலாம்.
ஆரம்ப அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல், முறையான மருத்துவ ஆலோசனை பெற்றால், வல்வோ டெர்மடோசிஸ் பாதிப்பை பெரும்பாலும் முழுமையாக குணப் படுத்தலாம்.
இதற்கு, சரியான மருந்துகள், தோல் பாது காப்பு வழிமுறைகளை பின்பற்று வதும், அறிகுறிகளை அதிகப்படுத்தும் காரணிகளை கண்டறிந்து தவிர்ப் பதும், முறையான மனநல ஆலோசனைகள் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதும் அவசியம்.
வல்வா ஆரோக்கியம் என்பது பெண்களின் முழுமையான ஆரோக்கியத்தின் ஒரு அங்கம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவான சுகாதாரம்
* சோப்பு உபயோகிப்பதை தவிர்க்கலாம். சுத்தமான நீரால் கழுவினாலே போதும்.
* நம் வாயின் உட்பகுதி மற்றும் வல்வா பகுதியும் ஒரே மாதிரியான மென்மையான தோல் தன்மை கொண்டவை.எனவே, முடிந்தவரை ஹேர் ரிமூவர் பயன்படுத்தக் கூடாது. கட்டாயம் என்றால், அலர்ஜி பரிசோதனை செய்து, எத்ந பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே உபயோகிக்க வேண்டும்.
* எல்லா அரிப்புக்கும் ஒரே கிரீம் உபயோகிக்கக் கூடாது. அவரவரின் தோல் தன்மை, பிரச்னைக்கு ஏற்ப, டாக்டர் பரிந்துரைத்த கிரீம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* மன அழுத்தம் இதற்கு மிக முக்கியமான காரணம்.
* எந்த வயதிலும் இப்பிரச்னை வரலாம்.
* தோலை சுகாதாரமாக பராமரிப்பது முக்கியம்.
டாக்டர் அப்தாப் மதீன், தோல் மருத்துவர், அப்பல்லோ மருத்துவ மையம், சென்னை. 044 2620 6666, 98411 64895annanagar@apolloclinics.in

