ரிங்வார்ம் தொற்றை தீவிரமாக்கும் ஸ்டிராய்டு மருந்துகள்!
ரிங்வார்ம் தொற்றை தீவிரமாக்கும் ஸ்டிராய்டு மருந்துகள்!
PUBLISHED ON : மே 03, 2026

தோல் அரிப்பு என்று பொதுவாக அறியப் படும், 'ரிங்வார்ம்' எனப்படும் பூஞ்சை தொற்று பாதிப்புகள், வழக்கம் போல இந்தக் கோடையிலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இத்தொற்று, பொதுவாக அரிப்புடன் கூடிய, சற்று உயர்ந்த ஓரங்களை கொண்ட வட்ட வடிவ தடிப்பாக தோன்றும். இது, அனைத்து வயதினரையும் பாதிக்கும்.
எதனால் ஏற்படுகிறது?
ரிங்வார்ம் என்பது பல வகை பூஞ்சைகளின் கூட்டு பாதிப்பால் வரும் தொற்று நோய்.
இவ்வகை பூஞ்சைகள், வெப்பமான, ஈரப்பதமான சூழல்களில் வளரக்கூடியவை.
பாதிக்கப்பட்ட நபர், விலங்குடன் நேரடி தொடர்பு கொள்வதன் மூலமும், அசுத்தமான ஆடைகள், துண்டுகள், உடற்பயிற்சி கருவிகள், மேஜை, நாற்காலி, கதவு உட்பட, பாதிக்கப்பட்ட நபர் உபயோகித்த பொருளை தொடுவதன் மூலமாகவும் பரவலாம்.
யாருக்கு ஆபத்து உள்ளது?
அதிகமான வியர்வை, இறு க்கமான, காற்றோட் டமில்லாத ஆடைகளை அணிவது, அழுக்கான ஆடைகள், பல மணி நேரம் ஒரே உள்ளாடைகளை அணிவது, சுத்தம் செய்யாத உள்ளாடைகளை மீண்டும் பயன்படுத்துவது போன்ற பல காரணிகள், தொற்று அபாயத்தை அதிகரிக்கின்றன.
இது தவிர, கட்டுப் பாடற்ற சர்க்கரை நோய், ரத்தசோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, தொற்று அபாயம் அதிகம் உள்ளது.
அறிகுறிகள்
மார்பு, தொடைகள் போன்ற காற்றோட்டமில்லாத, அதிகம் வியர்க்கும் மடிப்புகள் உள்ள பகுதிகளில் பொதுவாக தோன்றும். முதலில் சிறிய அரிப்புள்ள திட்டாக தொடங்கி, படிப்படியாக விரிவடைந்து, ஒரு வளைய வடிவ சிவந்த திட்டாக மாறும்.
சில சமயங்களில், உச்சந் தலையைப் பாதிக்கலாம்; இதனால், முடி உதிரும் வாய்ப்பும் உள்ளது.
நகங்களை பாதித்து, சேதம், நிற மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
தவிர்க்க வேண்டியது
தோலில் அரிப்பு ஏற்பட்டவுடன் பலரும் செய்யும் தவறு, டாக்டரின் பரிந்துரை இல்லாமல், மருந்து கடைகளில் களிம்புகளை வாங்கி உபயோகிப்பது. இப்படி தரப்படும் மருந்துகள் பெரும் பாலும் நுண்ணுயிர், பூஞ்சை எதிர்ப்பு அடங்கிய ஸ்டிராய்டு மருந்துகள்.
இவை உடனடியாக நிவாரணம் தந்தாலும், மருந்தை நிறுத்தியவுடன் தொற்று மீண்டும் அதிகரித்து, மேலும் தீவிரமாக பரவக்கூடும். ஸ்டிராய்டு மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதோடு, நோயின் தன்மையை மோசமாக்கி விடும்.
தடுப்பு குறிப்புகள்
சுத்தமான, தளர்வான, துவைத்து, நன்கு உலர்த்திய பருத்தி ஆடைகளை அணிவது, சுகாதாரத்தை பேணுவது, அதிக வியர்வை வெளியேறும் போது, தோல் மடிப்புகள், விரல் இடுக்குகளில் சுத்தமாக கழுவி துடைப்பது, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதே, தொற்றிலிருந்து பாதுகாக்கும்.
எப்போது சிகிச்சை
தோலில் தடிப்புகள் இருப்பது தெரிந்தால், சுயமாக மருந்து பயன்படுத்தாமல், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
வாய் வழியாக தரப்படும் மருந்துகள், தோலில் தடவும் மருந்துகள் என்று இரண்டும் அவசியம்.
அறிகுறிகள் குறைய தொடங்கியதும், மருந்துகளை நிறுத்தக் கூடாது.
பூஞ்சை முழுமையாக அழிக்கப்படாவிட்டால், மீண்டும் தொற்று ஏற்பட வழிவகுக்கும்.
டாக்டர் எம்.ஷிரத்தாநிறுவனர் மற்றும் தலைமை தோல் மருத்துவர், ஹீலியோஸ் அட்வான்ஸ்டு ஸ்கின் ஹேர் லேசர் கிளினிக்ஸ் சென்னை 99400 58215heliosskinclinic.com

