தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இளம் வயதில் பக்கவாதம்; என்ன காரணம்?

இளம் வயதில் பக்கவாதம்; என்ன காரணம்?

இளம் வயதில் பக்கவாதம்; என்ன காரணம்?


PUBLISHED ON : ஜூலை 05, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''மாறிவரும் வாழ்க்கை முறையால் இளைஞர்கள் அதிகளவில் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். அறிகுறி தென்பட்டது முதல் நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை எடுத்தால், பழைய நிலைக்கு திரும்ப முடியும். ஆனால் இந்த 'கோல்டன் ஹவரை' தவற விடுவோரே அதிகம்,'' என்கிறார், இ.எஸ்.ஐ., மருத்துவமனை மூளை நரம்பியல் துறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் முருகேசன்.

உடலில் நரம்புகளின் பங்கு என்ன?

உடலின் அனைத்து முக்கிய உறுப்புகளையும் இணைக்கும் மின் கம்பிகள் போல செயல்பட்டு, தகவல்களை கடத்துவதே நரம்புகளின் முக்கிய வேலை. நரம்பு மண்டலம் நன்றாக இருந்தாலே, உடலின் இயக்கம் சீராக இருக்கும்.

பக்கவாதம் தீவிர பொது நோய் பிரச்னையாக உருவாக காரணம் என்ன?

மூளையில் ரத்தக்கசிவு, ரத்த ஓட்டம் குறைவு அல்லது ரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால் தான், ஒருபக்க கை, கால் செயலிழக்கிறது. இதில், மூளையில் ரத்தக்கசிவு இருந்தால், கடும் தலைவலி, வாந்தி ஏற்படும். இதை அறுவை சிகிச்சை மூலமாகவே சரிப்படுத்த முடியும்.

ஆனால் ரத்தக்குழாய் அடைப்பால் ஏற்பட்ட பக்கவாதமாக இருந்தால், மருந்துகள் மூலமாகவே குணப்படுத்த முடியும். ஆனால் இதற்கு அறிகுறி தென்பட்ட முதல் நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வர வேண்டும்.

வலிப்பு ஏற்படும் போது இரும்பாலான பொருட்கள் கொடுக்கலாமா?

இதனால் வலிப்பு குணமாகாது. மூளையில் உத்தரவு பிறப்பிக்கும் நரம்புகளுக்குள் 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்படும் போது, குறிப்பிட்ட உத்தரவு தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் தான், ஒரு பக்க கை, கால் அதிவேகமாக கட்டுப்பாட்டை இழக்கிறது. இதற்கு மருத்துவ சிகிச்சையின்றி, வேறு எதுவும் பலனளிக்காது.



நரம்பு பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோர் செய்ய கூடாதவை என்ன?


ஆங்கில மருந்துகள் பக்கவிளைவு ஏற்படுத்தும் என பலரும் நாட்டு மருத்துவத்திற்கு மாறுகின்றனர். இது, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். சில ஆங்கில மருந்துகள் பக்க விளைவு கொடுத்தாலும், அவற்றால் ஏற்படும் நன்மைகள் அதிகம். பக்கவிளைவுகளுக்கு பிரத்யேக சிகிச்சை எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு உடம்பும் வெவ்வேறு மாதிரியானது என்ற புரிதல் அவசியம்.

இதுவே அறிகுறிகள்

கண் நரம்பு பாதித்தால் பார்வை குறைதல், காது நரம்பு பாதித்தால் கேட்கும் திறன் குறைதல், சுவை நரம்பு பாதித்தால் சுவையறிய முடியாமையை உணரலாம். நடக்கும் போதே தலைசுற்றல், பலவீனமாக உணர்தல், உடலில் ஏதேனும் ஒரு பகுதி உணர்ச்சியின்றி மரத்துபோதல், வலிப்பு, கை, கால்களின் செயல்பாடுகளில் மாற்றம் இருந்தால் நரம்புகள் பாதிப்பு உறுதி. உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

இதுவே காரணங்கள்

புகைப்பிடித்தல், மதுப்பழக்கம், உடல்பருமன், ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு போன்றவை பக்கவாதத்திற்கு முக்கிய காரணிகள். இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்பட துரித உணவுகளை அதிகளவில் சாப்பிடுவது, கண்ட நேரத்தில் சாப்பிடுவது, பொரித்த உணவை சாப்பிடுவது, துாக்கமின்மை, உடற்பயிற்சி இன்மை போன்றவை தான் முக்கிய காரணிகள்.

- டாக்டர் ஜி.முருகேசன்

murugesanneuro@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us