செரிமான கோளாறு அறிகுறிகள் அல்சராகவும் இருக்கலாம்; கேன்சராகவும் மாறலாம்.
செரிமான கோளாறு அறிகுறிகள் அல்சராகவும் இருக்கலாம்; கேன்சராகவும் மாறலாம்.
PUBLISHED ON : நவ 16, 2025

இரண்டு விதமான நோயாளிகளை பார்க்கிறோம். அறிகுறிகளை மொத்தமாக அலட்சியம் செய்து விட்டு, தாமதமாக சிகிச்சைக்கு வருபவர்கள் ஒரு ரகம்.
ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு எல்லாம், 'எனக்கு ஏதோ ஆகிவிட்டது. இப்படி இருக்கிறது, அப்படி இருக்கிறது' என்று சாதாரண விஷயத்தை எல்லாம் பெரிதுபடுத்தி, டாக்டரை நச்சரிப்பவர்கள் இன்னொரு ரகம். இவர்களிடம் பிரச்னை எதுவும் இல்லை என்று நான் சொன்னாலும், எல்லா பரிசோதனைகளும் நார்மல் என்று வந்தாலும் நம்ப மாட்டார்கள்.
டாக்டரை மாற்றி மாற்றி ஆலோசனை பெறுவர். குறிப்பாக, ஐ.டி., துறையில் வேலை பார்ப்பவர்கள், தனியார் டாக்டரிடம் பார்த்து விட்டேன்; பிரச்னை எதுவும் இல்லை என்றே சொல்கின்றனர். இதை உறுதிப் படுத்த, 'உங்களிடம் பார்க்கலாம் என்று வந்தேன்' என அரசு மருத்துவமனைக்கு சிலர் வருவர்; பரிசோதித்து சொன்னாலும் நம்பிக்கை வராது.
'கூகுள், சாட் ஜிபிடி'யில் இல்லாத பிரச்னைக்கு தீர்வு கிடைக்காதா என்று தேடுவர்.
இதில், அரசு மருத்துவ மனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் முதல் ரகம்.
செரிமான கோளாறுகளுக்கு, கை வைத்தியம் என்ற பெயரில் அவர்களாகவே எதையாவது சாப்பிட்டு, பிரச்னை முற்றிய நிலையிலேயே வருகின்றனர்.
'ஹெச் பைலோரே அல்சர்' எனப்படும் குடல் புண் ஏற்பட பொதுவான காரணம், ஹெச் பைலோரே என்ற பாக்டீரியா.
இது அசுத்தமான உணவு, குடிநீர் வாயிலாக பரவக்கூடியது. இந்த தொற்று பாதிக்கப்பட்டதும் அறிகுறிகள் தெரியாது; உடலுக்குள் சென்று நிதானமாக வளர்ந்து, 5 - -10 ஆண்டுகள் கழித்தே அறி குறிகளை வெளிப்படுத்தும். முதலில் வாயு தொல்லையை ஏற்படுத்தும்; அதன்பின் குடல் புண் அல்சரை உண்டாக்கும்.
பாக்டீரியா தொற்றை ஆரம்பத்தில் கண்டறிந்தால், மருந்துகள் தந்து சரி செய்யலாம்.
அல்சர் பாதிக்கப்பட்ட இடத்தில் பயாப்சி -சிறிதளவு சதை எடுத்து, ஆர்யூடி ரேபிட் யூரியேசி டெஸ்டில் இதை உறுதி செய்யலாம். முறையாக சிகிச்சை செய்யாமல், 20 ஆண்டுகளுக்கு மேல் அப்படியே விட்டால், கேன்சராக மாற வாய்ப்பு உண்டு.
சிகரெட், மது, நீண்ட நாட்கள் வலி நிவாரணிகள் சாப்பிடுவது, அல்சர் அறிகுறிகளை அதிகப்படுத்தும்.
சுகாதாரமான உணவு, குடிநீர் மட்டுமே இத் தொற்று பாதிக்காமல் தடுக்கும்.
அறிகுறிகள்
பசியின்மை, வாந்தி, காரணம் இல்லாமல் உடல் எடை குறைவது, ரத்த சோகை போன்ற அறிகுறிகள், நாள்பட்ட அல்சருக்கு இரண்டு மாதம் பொது நல டாக்டரிடம் மாத்திரை சாப்பிட்டு, சரியாகாமல் இருந்தாலும், 50 வயதிற்கு மேல் முதல் முறையாக செரிமானம் தொடர்பான கோளாறுகள் வந்தால், 'எண்டோஸ்கோபி' செய்ய வேண்டியது அவசியம்.
மார்பக கேன்சர் உட்பட கேன்சர் பாதிப்பு வந்த, வரும் வாய்ப்புள்ள குடும்பத்தில், ஒருவருக்கு பசியின்மை, வாந்தி, வயிற்று வலி, மலம் கழிக்கும் தன்மையில் மாற்றம், மலத்தில் ரத்தம் போவது போன்ற செரிமான பிரச்னைகள் இருந்தால் அலட்சியம் செய்வது கூடாது. காரணம், கேன்சரை உண்டாக்கும் ஏதோ ஒரு வகை மரபணு அந்த குடும்பத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அனுபவம் மிக்க குடல், இரைப்பை டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. முழு பரிசோதனை செய்து, பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை டாக்டர் சொல்லட்டும்; நீங்களாகவே முடிவு செய்ய வேண்டாம்.
ஆன்டாசிட்
வாயு தொல்லை, வயிறு வலி என்றதும் ஆன்டாசிட் மாத்திரை, டானிக் உபயோகிக்கும் பழக்கம் பொதுவாக உள்ளது. இது அறிகுறிகளை குறைக்கும். ஆனால், பிரச்னைக்கான மூலக் காரணத்தை சரி செய்யாது. அல்சர் இருப்பவர்கள் கூட ஆன்டாசிட் எடுத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஆனால், அல்சர் குணமாகாது.
பிரச்னை வரும் சமயங்களில் எல்லாம் ஆன்டாசிட் எடுக்கும் போது, அல்சர் பெரிதாகி, ரத்த கசிவு, ரத்த வாந்தி, குடலில் ஓட்டை விழுவது போன்ற சிக்கல்கள் வரலாம். நாளடைவில் கேன்சராகவும் மாறலாம். சுலபமாக குணப்படுத்தக் கூடிய அல்சரை, பல சிக்கல் களுடன் நீண்ட நாட்களுக்கு சிகிச்சை தர வேண்டிய நிலைக்கு தள்ளி விடும்.
என் நோயாளிகளுக்கு ஆன்டாசிட் தரவே மாட்டேன்.
டாக்டர் எம்.மணிமாறன், உதவி பேராசிரியர், குடல், இரைப்பை மருத்துவ துறை, கலைஞர் நுாற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கிண்டி, சென்னை 99624 79918manimaranmurugesan845@gmail.com

