குழந்தையாக மாறும் வயதில் குழந்தைகளை பார்க்கும் சுமை
குழந்தையாக மாறும் வயதில் குழந்தைகளை பார்க்கும் சுமை
PUBLISHED ON : ஜன 18, 2026

இன்று தமிழகத்தின் பல நடுத்தரக் குடும்பங்களில், 'தாத்தா--பாட்டி' என்ற அழகான உறவு, 'சம்பளம் இல்லாத பணியாளர்கள்' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. இதை உளவியல் ரீதியாக, 'கிராண்ட்- நானி சிண்ட்ரோம்' என்று கூறுவோம் என்கிறார், உளவியல் நிபுணர் சுமித்தா ஷாலினி. அவர் பகிர்ந்து கொண்டதாவது...
தற்போது 30 வயது கடந்த பிள்ளைகள் தங்கள் வேலை, பொறுப்பு, கமிட்மென்ட் நடுவில் குழந்தை வளர்ப்புக்கு பெரும்பாலும் அவரவர் பெற்றோரையே சார்ந்திருக்கின்றனர்.
குழந்தை கருவுற்றது முதல் பள்ளி, கல்லுாரி செல்வது வரை தாத்தா-பாட்டிகளுக்கு பொறுப்பு கொடுக்கப்படுகிறது.
பல வீடுகளில் காலை சமையலில் துவங்கி , பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அழைத்து வருவது, பிற வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது, மீண்டும் சீராட்டி, பாராட்டி உறங்க வைப்பது வரை அவர்களே செய்ய வேண்டியுள்ளது.
தன் பிள்ளைகளுக்காக ஆனந்தமாகவே இதை செய்தாலும், அனைவருக்குள்ளும் ஒரு சலிப்பு வருகிறது. எனக்கான நேரம் கிடைக்காதா, கொஞ்ச நேரம் உட்கார முடியாதா, இப்போதாவது நான் விரும்பியதை செய்ய முடியாதா என்பது இருக்கத்தான் செய்கிறது.
இந்த ஏக்கம், பலருக்கு மறைமுக கோபமாக அவர்களுக்கே தெரியாமல் உருவாகி பின்னர், மன அழுத்தம், ரத்த அழுத்தம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
மருத்துவ ரீதியாக, 60 வயதுக்கு மேல் எலும்பு அடர்த்தி குறைதல் மற்றும் தசைச் சோர்வு ஏற்படுவது பொதுவானது. ஆனால், ஓடி விளையாடும் பேரக்குழந்தைகளைப் பராமரிக்கும் போது, நாள்பட்ட முதுகுவலி, மூட்டுத்தேய்மானம் விரைவாக ஏற்படுகிறது.
குழந்தைகளின் பள்ளி நேரம், உணவு நேரம் என ஓடிக்கொண்டிருப்பதால், முதியோர் மாத்திரைகளை உட்கொள்ளவும், மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யவும் தவறிவிடுகிறார்கள்.
இது சமூக பார்வையாக மாற வேண்டும். வேலைக்கு செல்லும் பிள்ளைகள் வார இறுதிநாட்கள், அவசர நேரங்களில் மட்டும் இந்த பொறுப்பை முதியோரிடம் ஒப்படைக்கலாம். மாற்றுவழியை காண வேண்டும்.
முதுமை என்பது மீண்டும் ஒரு குழந்தையாக வாழ வேண்டிய பருவம்; மற்றுமொரு குழந்தையை வளர்க்க வேண்டிய கட்டாயப் பருவம் அல்ல. முதியோரின் அன்பை நாம் 'வசதியாக' மாற்றிக்கொள்ளாமல், அவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்.
இவ்வாறு, சுமித்தா ஷாலினி கூறினார்.

