வெயிலே படாமல் வளரும் குழந்தைகள் எதிர்காலமே வீக் ஆகிவிடும், உஷார்!
வெயிலே படாமல் வளரும் குழந்தைகள் எதிர்காலமே வீக் ஆகிவிடும், உஷார்!
PUBLISHED ON : நவ 15, 2026

வெயில் படாமல் குழந்தைகளை வளர்ப்பதாக கருதி, வீடு, வகுப்பறை என அனைத்து இடங்களிலும் ஏசி இருப்பதால், இயற்கையாக உடலுக்கு கிடைக்க வேண்டிய விட்டமின் டி பற்றாக்குறை ஏற்படுகிறது.
பால், பழத்திலுள்ள கால்சியத்துக்கு, மாத்திரையை மாற்று பொருளாக தேடுகிறோம். இதன் விளைவு தான், இளம் வயதிலேயே எலும்பு அடர்த்தி குறைந்து, மென்மையாக மாறி, சிறிய அடி பட்டாலும் முறிவு ஏற்படுகிறது என்கிறார், மூத்த எலும்பியல் நிபுணர் டாக்டர் வெற்றிவேல் செழியன்.
இளம்வயதில் எலும்பு தேய என்ன காரணம் என அவரிடம் கேட்டோம். நம்மிடம் அவர் பகிர்ந்தவை:
உடலில் மிக உறுதியான உறுப்பு எலும்பு. அதற்கு போதுமான சத்து கிடைக்காமல், அதற்கு வேலை கொடுத்து உறுதிப்படுத்தாமல் விட்டதன் விளைவு தான், எலும்பு அடர்த்தி குறைவதும், எலும்பு புரை நோய் ஏற்பட முக்கிய காரணம்.
முன்னோர்களின் வாழ்வியலை மீண்டும் நம்மால் வாழ முடியாது. நகர வாழ்வியல் முறையில், சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அன்றாடம் 20 நிமிடம் வெயில் உடலில் படும் வரை நடப்பது, தரையில் உட்கார்ந்து எழுவது, சின்ன சின்ன வேலைகளை செய்வது என, உடல் இயங்க வேண்டும். இயக்கம் குறையும் போது தான், எலும்புகள், தசை வலுவிழக்கின்றன.
அதிக சத்தான உணவு சாப்பிட்டாலும், கால்சியம் நிறைந்த உணவை சேர்த்தாலும், விட்டமின் டி ஒத்துழைத்தால் தான், எலும்புக்கு அவை உணவாகும். இயற்கையில் கிடைக்கும் விட்டமின் டி யை விட்டுவிட்டு, மாத்திரைகளால் அவற்றை ஈடு செய்யவே முடியாது.
குழந்தைகள், இளம் வயதினருக்கு, சின்ன விபத்து ஏற்பட்டாலும், கீழே விழுந்தால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது. எலும்பை உறுதியாக்க, உணவு மட்டுமே போதாது. உடலுக்கு பயிற்சி வேண்டும். இதற்காக தான், அந்த காலத்தில் அம்மி, ஆட்டுக்கல், அரிவாள்மனை வீட்டில் இருந்தன.
இன்று எல்லா வேலைகளையும் மிஷின் செய்தாலும், காய்கறி வெட்ட அரிவாள்மனையை பயன்படுத்துவது நல்லது. காய் வெட்டும் போதாவது, தரையில் அமருவது, எழுவது என மூட்டுக்கு வேலை கொடுக்க முடியும்.
பள்ளிகளில் மாலை நேரத்தில் விளையாட்டுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். சொந்த வீடு வைத்திருப்போர், மாடித்தோட்டத்தில் இயற்கை முறையில் காய்கறி விளைவிக்க முயற்சிப்பது நல்லது. இப்படி சின்ன சின்ன விஷயங்களை மாற்றினாலே, எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வில் அதிர்ச்சி:
அரசு மருத்துவமனை எலும்பியல் மற்றும் விபத்து சிகிச்சை துறை சார்பில், எலும்பு புரை மற்றும் எலும்பு அடர்த்தி குறைபாடுக்கு, ஆய்வு நடத்தியதில் 308 பேருக்கு (35.6%) சாதாரண அளவை விட எலும்பு அடர்த்தி குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதில் 241 பேருக்கு (27.9%) எலும்பு அடர்த்தி நோய் மற்றும் 67 பேருக்கு (7.76%) எலும்பு புரை பாதிப்பு உள்ளது. இத்தரவுகள் மூலம், படித்தவர்களே எலும்புகளின் ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதை அறிய முடிகிறது.
