PUBLISHED ON : ஜூன் 14, 2026

உடலில் பூச்சி ஊர்வது போலவே இருக்கிறது. ஆனால் யாரிடம் கேட்டாலும் எதுவும் இல்லை என்கிறார்கள் என, கவலையுடன் சிகிச்சைக்கு வரும் முதியோர் அதிகரித்துள்ளனர். தோல் அரிப்பும், அதற்கான காரணங்களையும் விளக்குகிறார், அரசு மருத்துவமனை தோல் பிரிவு டாக்டர் மாதவன்.
அவர் கூறியவை:
வயது அதிகரிக்கும் போது, தோலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் சுரப்பிகள் குறைந்துவிடும். இதனால் தோல் வறண்டு இருப்பதால், அரிப்பு ஏற்படும். இது சாதாரண நிலை தான்.
ஆனால் அரிப்பு அதிகரித்து துாக்கமின்மை, தோலில் புண்கள் ஏற்படுவது போன்ற பாதிப்பு இருந்தால், சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம். ஏனெனில், உள்ளுறுப்புகளின் கவசமாக தோல் இருக்கிறது. சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டாலோ, தைராய்டு சுரப்பு அளவில் மாறுபாடுகள் இருந்தாலோ, புற்றுநோய் பாதிப்புகள் இருந்தாலும், தோலில் அரிப்பு ஏற்படும்.
அதிகமாக அரிக்கும் போது, அந்த இடத்தில் தண்ணீர் வடிதல் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். தீராத புண்களை ஏற்படுத்தி, புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இதேபோல வயதானவர்களுக்கு, 'டெலுாஷனல் பாராசிட்டோசிஸ்' என்ற மனநல பாதிப்பால் தோலில் பூச்சி, ஒட்டுண்ணி, புழுக்கள் ஊர்வது போல தோன்றும். ஆனால் உண்மையில் பூச்சி இருக்காது. தொடர்ந்து சொரிந்து தோல் பெயர்ந்து வரும் போது அதை எடுத்து வந்து காட்டுவர்.
இது மனநல பாதிப்பு என்பதால், உளவியல் மருந்துகளுடன், தோல் சிகிச்சை வழங்கப்படும். எனவே தோல் சார்ந்த பாதிப்புகளுக்கு அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
