பற்களுக்கும், இதயத்திற்கும் இருக்கும் மறைமுக தொடர்பு!
பற்களுக்கும், இதயத்திற்கும் இருக்கும் மறைமுக தொடர்பு!
PUBLISHED ON : ஜூன் 28, 2026

வாய் ஆரோக்கியத்தையும், உடலின் ஓட்டு மொத்த ஆரோக்கியத்தையும் பெரும்பாலும் தனித்தனியாகப் பார்க்கிறோம்.
ஆனால், வாய் என்பது உடலின் மற்ற உறுப்புகளுடன் நெருக்கமாக இணைந்த ஒரு பகுதி. சில நேரங்களில், வாய், இதய நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை வெளிப்படுத்தும் விதமாக, உதடுகள் அல்லது நாக்கு நீல நிறமாக மாறலாம்; ஈறுகளில் அதிக ரத்தப் போக்கு, வாய் வறட்சி, வாய்ப்புண் போன்றவை ஏற்படலாம்.
ஈறு நோய்களும், இதய நோய்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்று குறிக்கும் வகையில், சர்வதேச இதய சங்கம் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டு உள்ளது. செல்களுக்கிடையே, நோய் எதிர்ப்பு சக்தி குறித்த தகவல்களை பரிமாறும் துாதுவர்களாக செயல்படுபவை, சைட்டோகைன் என்கிற புரதத் துகள்கள்.
ஈறு நோய் ஏற்படும் போது, பாக்டீரியாக்களை அழிக்க, இந்த துகள்கள், நோய் எதிர்ப்பு சக்தியை வழக்கத்திற்கு மாறாக, தீவிரமாகத் துாண்டுகிறது. இந்த செயல் ஈறுகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது.
ஈறுகளை பாதித்த பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, இதயம் மற்றும் ரத்தக் குழாய்களில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
இதய ரத்த நாளங்களில் உள்ள கொரோனரி செல்களுக்குள் ஊடுருவி, இதய நோயையும், பக்கவாதத்தையும் ஏற்படுத்தும்.
பல் இடுக்குகளில் தேங்கியிருக்கும், சுத்தம் செய்யாத உணவுத் துகள்களால் உருவாகும் 'பிளாக்' எனப்படும் பாக்டீரியாத் தொற்று, ரத்தக் குழாய்களில் அடைப்பை உருவாக்கி, இதயத்தில் இன்பெக்டிவ் எண்டோகார்டிடிஸ் எனப்படும் இதயத்தின் உள் உறைத்தொற்றிற்கும் வழி வகுக்கும்;
இதனால் எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
குறிப்பிட்ட இடைவெளியில் பல் பரிசோதனைகள் செய்வதால், இதய நோய்களைத் தடுக்கலாம்.
இது தவிர, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று, பற்களை சுத்தம் செய்வது, தினமும் இரு முறை பல் துலக்குவது, பல் இடுக்குகளில் சுத்தம் செய்வது, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், புகை, புகையிலை தவிர்ப்பது ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கடவாய் பல் உட்பட, சில பற்களை இழந்தவர்களுக்கு, சரியாக மென்று சாப்பிட முடியாததால், உணவு பழக்கங்கள் பாதிக்கப்பட்டு, உடல் நலம், இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே, செயற்கை பல் கட்டுவது மிகவும் அவசியம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தினால், ஈறு நோய் மற்றும் இதய நோயை தடுக்கலாம்.
இதய நோயாளிகளுக்கு...
இதய வால்வு பொருத்தப்பட்டவர்கள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், இதயத்தின் உள்புறம் உள்ள என்டோகார்டியம் அடுக்கில் பாக்டீரியாத் தொற்றால் அழற்சி ஏற்பட்டவர்கள், பிறவி இதயக் குறைபாடுகள் உள்ளவர்கள், பல் சிகிச்சைக்கு முன், மருத்துவரின் ஆலோசனைப்படி ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ஸ்டென்ட் பொருத்தப்பட்டவர்க ள், ரத்தம் உறையாமல் இருக்க மருந்துகள் எடுப்பர். இதய நிபுணரின் அனுமதி மற்றும் அறிவுறுத்தலின்படி மட்டுமே மருந்துகளில் மாற்றம் செய்து பல் சிகிச்சையை தொடர வேண்டும்.
டாக்டர் தி.ராகவி, பல் மருத்துவர், சுபம் பல் மற்றும் கிரேனி யோபேஷியல் சென்டர், சென்னை. 97892 56881/ 99411 97179subhamfoundations@gmail.com
