PUBLISHED ON : டிச 21, 2025

மேக் அப் என்பதையும், சரும பராமரிப்பு என்பதையும் பல பெண்கள் குழப்பிக்கொள்கின்றனர். மேக் அப் என்பது கட்டாயமல்ல; ஆனால், சரும பராமரிப்பு, தோல் சார் ஆரோக்கியம் என்பது அவசியம்.
இதுகுறித்து, நம்மிடம் விளக்குகிறார் தோல் மற்றும் அழகுகலை நிபுணர் பவித்ரா...
தோல் பராமரிப்பு, அழகு கலை என்பது ஆடம்பர தேவையாகவே கருதப்படுகிறதே?
பொலிவான தோல், அழகான தோற்றம் என்பது வெறும் அழகு சார்ந்த விஷயம் அல்ல. தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், தைரியத்தை கொடுக்கும் மிக முக்கியமான ஒன்று. தோற்றம் குறித்த பாதுகாப்பற்ற உணர்வால் பலர் உளவியல் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். தோல் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு சிகிச்சை என்பது, மன ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், இது ஆடம்பரமானது அல்ல.
தோல் பராமரிப்பில் பொதுவாக நடைபெறும் தவறுகள் என்னென்ன?
தோல் சிகிச்சையில் சிலருக்கு மாத்திரை போதுமானதாக இருக்கும். சிலருக்கு லேசர் சிகிச்சை தேவைப்படும். சிலருக்கு ஹார்மோன் சிகிச்சை தேவைப்படும். ஒவ்வொருவரின் பிரச்னை, காரணிகளை பொறுத்து சிகிச்சையிலும் மாற்றங்கள் இருக்கும். அதை தவிர்த்து, பார்ப்பதையும், கேட்பதையும் வைத்து, கிரீம்களை வாங்கி பூசுதல் கூடாது.
நவீனதோல் சிகிச்சைகளில் லேசர் தொழில்நுட்பத்தின் பங்கு என்ன?
லேசர் சிகிச்சை பாதுகாப்பானது. ஊடுருவல் இல்லாதது. குறிப்பாக, லேசர் கதிர்கள் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியைத் துாண்டி, தோல் சுருக்கங்களை நீக்குகிறது. சருமத்திற்கு இளமைத் தோற்றத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது.
பிக்கோ செகண்ட் லேசர் என்று பரவலாக சிகிச்சை முறை கூறப்படுகிறதே?
பிக்கோ செகண்ட் நவீனமான மற்றும் பாதுகாப்பான லேசர் முறையாகும். இது தோலில் மிகக் குறைந்த நேரமேசெயல்படுவதால், தோல் சூடாவதோ அல்லது தீப்புண்கள் ஏற்படுவதோ இல்லை. குறிப்பாக, டாட்டூ எனப்படும் பச்சை குத்திய தழும்புகளை, அதன் நிறங்களைப் பொருட்படுத்தாமல் முழுமையாக அகற்ற இது உதவுகிறது.
தோல் சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை அவசியமா?
நவீன மருத்துவத்தில், பெரும்பாலான தோல் பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. லேசர், கெமிக்கல் பீல்ஸ் மற்றும் மைக்ரோ நீட்லிங் போன்ற முறைகள் மூலம், மிக குறைந்த நேரத்தில் சிகிச்சை பெற்று, உடனடியாக அன்றாட வேலைகளுக்குத் திரும்ப முடியும்.
தோல் பராமரிப்பில் மிக முக்கியமாக மக்கள் கவனிக்கவேண்டியது என்ன?
சருமத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால், சுயமாக மருந்துக்கடைகளில் கிரீம்களை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தகுதிவாய்ந்த தோல் சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது அவசியம். பிற நோய்களை போன்று, சுய மருத்துவம் என்பது சரும பிரச்னைகளுக்கும் செய்யக்கூடாது. சிலநேரங்களில் நம் உடலில் உள்ள பெரிய நோய்களின் அறிகுறிகள், தோலில் வெளிப்படும். இதனை டாக்டர்கள் எளிதில் கண்டறிந்து விடுவார்கள்.

