PUBLISHED ON : மார் 08, 2026

கர்ப்பப்பை வாய் புற்று நோய் என்பது உலகளவில் அதிகமாக பரவி வருகிறது. ஒரு தடுப்பூசியால் இதைத் தடுக்க முடியும். பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போட வேண்டும் என்று சொன்னால், இதனால் மாதவிடாய் வருவதில் சிக்கல் வருமோ, உடல் ரீதியில் பிரச்னை ஏற்பட்டு, திருமணம் ஆன பின் குழந்தை பிறக்காமல் போய் விடுமா, என்று பலவித சந்தேகங்கள் பெற்றோர் மனதில் உள்ளது. ஆனால், இது எதுவும் உண்மையில்லை என்று பலவித ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.
இது ஒரு வைரஸ். இந்த வைரஸ் பாதித்தால், அடுத்த 20 ஆண்டுகளில், கர்ப்பப்பை வாய் கேன்சர் வரலாம். இந்த வைரஸ் தாக்காமல் பாதுகாக்கவே ஹெச்.பி.வி., தடுப்பூசி.
இது, தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டு இருப்பது நல்ல முன்னெடுப்பு. அரசே இதை செய்யும் போது, எல்லா மக்களையும் எளிதாக சென்றடையும்.
அரசு திட்டத்தில் இல்லாத போது, டாக்டர்கள் அவர்களிடம் வரும் பெற்றோரிடம் மட்டுமே இது பற்றி பேச முடிந்தது.
போலியோ உட்பட மற்ற தடுப்பூசிகளை எப்படி சந்தேகத்திற்கு இடமில்லாமல், அனைத்து குழந்தை களுக்கும் போடு கிறோமோ, அது போன்று ஹெச்.பி.வி., வைரஸ் தடுப்பூசி போடுவதும் வரும் காலங்களில் மாறும்.
எதிர்காலத்தில், கர்ப்பப்பை வாய் கேன்சர் என்பதே நம் நாட்டில் இருக்காது. இதைத் தாண்டி, 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, கர்ப்பப்பை வாய் கேன்சர் அறிகுறிகள் உள்ளதா என்பதை அறிய, பேப்ஸ்மியர் என்ற ஸ்கிரீனிங் -பரிசோதனை உள்ளது.
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இந்த ஸ்கிரீனிங் செய்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
35 வயதிற்கு மேல் மேமோகிராம் செய்யலாம் என்று நினைப்பவர்கள் கூட, பேப்ஸ்மியர் செய்து கொள்ளலாம் என்று நினைப்பதில்லை.
டாக்டர் கீர்த்தனா ராஜசேகரன், மகப்பேறு மருத்துவர், எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை, சென்னை 044 - 35453545info@srmhospitals.com

