அமைதியான கொலையாளியை அடக்கி வைக்காவிட்டால் ஆபத்து!
அமைதியான கொலையாளியை அடக்கி வைக்காவிட்டால் ஆபத்து!
PUBLISHED ON : ஜூலை 12, 2026

''ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் உடலுக்குள் பாதிப்புகளை ஏற்படுத்துவதால், ரத்த அழுத்தத்தை அமைதியான கொலையாளி(சைலன்ட் கில்லர்) என அழைக்கிறோம். இதனை கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் ஆபத்து,'' என்கிறார், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, பொது மருத்துவத்துறை இணை பேராசிரியர் டாக்டர் எஸ்.பாலாஜி.
ரத்த அழுத்தம் ஏன் முக்கிய உடல் நல பாதிப்பாக கருதப்படுகிறது?
பொதுவாக உடலில் ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருக்க வேண்டும். இதில் மாற்றம் இருந்தால், உடனே பதற்றமடைய தேவையில்லை. ஓரிரு வாரங்களில் 2,3 முறை பரிசோதித்து பிறகு, மருந்து எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து அளவு அதிகரிக்கும் போது, உரிய சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம்.
உயர் ரத்த அழுத்தத்தின் போது உடல் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. உரிய சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்துவதால், உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும்.
குறிப்பாக தலைவலி, தலைசுற்றல், பிடறி வலித்தல், நெஞ்சுவலி போன்ற அறிகுறிகள். இவை இருந்தால், உயர் ரத்த அழுத்தத்தால் அதுசார்ந்த உறுப்பு பாதிக்கப்பட்டதை உறுதி செய்து கொள்ளலாம். இதனால்தான் ரத்த அழுத்தம் முக்கிய உடல் நல பாதிப்பாக கருதப்படுகிறது.
இளைஞர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?
மாறிவரும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், துாக்கமின்மை, போதை, புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாதல் ஆகியவையே காரணம். கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் மாறுபடலாம். மருந்துகள் எடுத்து கொள்ளாவிடில், வலிப்பு, இதய பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு குழந்தை பிறந்ததும், ரத்த அழுத்தம் சீராக இருக்காது. உரிய சிகிச்சை பெறுவதே தீர்வு.
தொடர் உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
ரத்த அழுத்தம் சீராக இருந்தால் தான் இதயம் சீராக இயங்கும். அழுத்தம் அதிகரித்தால், இதயத்திற்கு வேலைப் பளு அதிகம்.
தொடர்ந்து அதிக அழுத்தத்துடன் இதயம் செயல்பட்டால், மாரடைப்பு ஏற்படலாம்.
ரத்த குழாய்களில் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து பக்க வாதம், மூளை பாதிப்பு ஏற்படலாம். சிறுநீரகம் செயலிழக்கலாம். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு, தைராய்டு, உடல் பருமன் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இதில் ஏதேனும் ஒரு பாதிப்பு இருந்தால், மற்றவையும் வரலாம் என்பதால்பரிசோதிப்பது அவசியம்.
உயர் ரத்த அழுத்த பாதிப்பை இயல்புக்கு கொண்டு வரலாம்
உயர் ரத்த அழுத்த பாதிப்பை நிச்சயமாக இயல்புக்கு கொண்டு வர முடியும். உணவில் உப்பை குறைக்க வேண்டும். சிலர் இந்துப்பு பயன்படுத்துகின்றனர். இதில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், சிறுநீரகம், இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். உயரத்திற்கு ஏற்ற உடல் எடை பராமரிப்பது, மன அழுத்தத்தை குறைப்பது, மது, புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது, துாக்க நேரம் மாறுபடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களால் ரத்த அழுத்த அளவை இயல்பாக்க முடியும்.
- டாக்டர் எஸ்.பாலாஜி
75984 86945
vsbalajidr@gmail.com
