தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/திடீரென வேலையை காட்டுவான் இந்த அமைதியான கொலையாளி

திடீரென வேலையை காட்டுவான் இந்த அமைதியான கொலையாளி

திடீரென வேலையை காட்டுவான் இந்த அமைதியான கொலையாளி


PUBLISHED ON : அக் 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: எலும்புகளின் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, திடீரென ஒரு நாள் முறிவை உண்டாக்கும் ஆபத்தான நோய்தான், 'ஆஸ்டியோபொராசிஸ்' எனும் எலும்புப்புரை நோய்.

உலகளவில் பல கோடி பேரின் இயல்பு வாழ்க்கையை இது முடக்குகிறது. அது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அக். 20 உலக எலும்புப்புரை தினமாக அனுசரிக்கப்படுகிறது என்கிறார், கே.எம்.சி.எச். மருத்துவமனையின் சர்க்கரை நோய் மற்றும் ஹார்மோன் சிகிச்சை நிபுணர் டாக்டர் வித்யா ராஜீவ் ஜஹாகிர்தார்.

எலும்புப்புரை என்றால் என்ன? இதை ஏன் 'அமைதியான கொலையாளி' என்கின்றனர்?

எலும்புகளை படிப்படியாக பலவீனமாக்கி, எளிதில் உடையும் நிலைக்கு கொண்டு செல்வது தான் ஆஸ்டியோபொராசிஸ். இதன் ஆரம்ப கட்டத்தில் வலியோ, அறிகுறியோ தெரியாது. திடீரென ஒரு நாள் ஏதோ நடந்து எலும்பு முறியும் போதுதான், நோய் இருப்பதே தெரிகிறது. அதனால் இதை 'அமைதியான கொலையாளி' என்கிறோம்.

இது எவ்வாறு ஏற்படுகிறது?

எலும்புகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வரும். பழைய எலும்பு செல்கள் அழிந்து, புதிய செல்கள் உருவாவது ஒரு தொடர் சுழற்சி. 35 வயதுக்கு பிறகு, புதிய எலும்புகள் உருவாகும் வேகத்தை விட, பழைய எலும்புகள் தேயும் வேகம் அதிகரித்து விடுகிறது. இதனால் எலும்புகளின் அடர்த்தி குறைந்து, அவை பஞ்சு போல ஓட்டைகளுடன் வலுவிழந்து விடுகின்றன. இதையே எலும்புப்புரை என்கிறோம்.

யாரை அதிகம் தாக்கும்? முக்கிய காரணங்கள் என்னென்ன?

பொதுவாக முதியவர்களுக்கு ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் எலும்புப்புரை வர வாய்ப்புகள் அதிகம். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

* ஊட்டச்சத்து குறைபாடு: உணவில் போதிய கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' சத்து இல்லாமல் போவது.

* உடற்பயிற்சியின்மை: உடல் உழைப்பும் இன்றி, எப்போதும் அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை.

* பரம்பரை: பெற்றோருக்கு இந்நோய் இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்புண்டு.

* பழக்கவழக்கம்: புகை பிடிப்பது, மது அருந்துவது, அடிக்கடி காபி குடிப்பது.

* மருந்துகள்: சில ஸ்டீராய்டு மருந்துகளை நீண்ட காலம் உட்கொள்வது.

இதை முன்கூட்டியே கண்டறிய என்ன பரிசோதனைகள் உள்ளன?

ஆரம்பத்திலேயே கண்டறிய 'டெக்சா ஸ்கேன்' என்ற பரிசோதனை உள்ளது. எலும்புகள் எந்த அளவுக்கு பலமாக அல்லது பலவீனமாக உள்ளன என்பதை அறிய முடியும். ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' அளவை கண்டறியும் எளிய ரத்த பரிசோதனைகளும் உள்ளன.

இது எவ்வளவு ஆபத்தானது?

நோய் முற்றி விட்டால், தடுமாறி விழுந்தாலோ, பலமாக இருமினாலோ கூட இடுப்பு, மணிக்கட்டு, முதுகு எலும்புகள் முறிந்துவிடும். முதியவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிந்தால், நடமாட்டம் முடங்கி, உயிருக்கே ஆபத்தாகலாம்.

இது வராமல் தடுக்க வழி உண்டா?

முன்கூட்டியே பரிசோதனை செய்து எலும்பு முறிவு ஏற்படாமல் தடுத்து, எலும்புகளை பலப்படுத்த முடியும். 50 வயதை கடந்த ஆண்களும், மாதவிடாய் நின்ற பெண்களும் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தேய்மானத்தை தடுப்பதற்கும், புதிய எலும்பு செல்களை உருவாக்குவதற்கும் சிறந்த மருந்துகள் உள்ளன.

எலும்பு புரையை தடுக்க என்ன செய்யலாம்?

உணவே சிறந்த மருந்து. பாலாடை கட்டி, பால், தயிர், கீரை, கேழ்வரகு, மீன் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள். தாராளமாக சாப்பிடலாம். காலை இளம் வெயிலில் தினமும் 20 நிமிடங்கள் நின்றாலே உடலுக்கு தேவையான வைட்டமின் 'டி' கிடைத்துவிடும். நடை பயிற்சி, எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்ய வேண்டும்.



டாக்டர் வித்யா


drvidhya@kmchhospitals.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us