குழந்தைகளில் புற்றுநோய் வருவதை தடுக்க சரியான வயதில் தடுப்பூசி போட வேண்டும்
குழந்தைகளில் புற்றுநோய் வருவதை தடுக்க சரியான வயதில் தடுப்பூசி போட வேண்டும்
PUBLISHED ON : ஜன 11, 2026

'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், 'நலம் பேசுவோம்- நலமுடன் வாழ்வோம்' என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு, மாதந்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, 'என்ன செய்யலாம்... புற்றுநோய் வரும் முன்..வந்தபின் ' என்ற தலைப்பில் ஜன., மாத நிகழ்வில்,பொதுமக்கள் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும், டாக்டர்களின் விளக்கங்களும்!
டாக்டர் ரூமேஷ் சந்தர், குழந்தைகள் ரத்தம் மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்
குழந்தைகளுக்கு புற்றுநோய் வருமா?
குழந்தைகளுக்கும் புற்றுநோய் தலை முதல் கால் வரை எங்கு வேண்டுமானாலும் வரலாம். இந்தியாவில்ஆண்டுதோறும், 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பேருக்கு புதிதாக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. பொதுவாக, ரத்த புற்றுநோய், இரண்டாவதாக எலும்பு சார்ந்த புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது.
குழந்தைகளுக்கு புற்றுநோய் அறிகுறி எவ்வாறு அறிவது?
குழந்தைகளுக்கு அதிகமாக ரத்த புற்றுநோய் தான் காணப்படுகிறது. சாதாரண வைரஸ் காய்ச்சல் போன்று தான் துவங்கும். காய்ச்சல் ஒரு வாரத்திற்கு மேல் அடிக்கும். அதிக சோர்வாக இருக்கும், மூக்கு, ஈறுகளில் ரத்தம் வரலாம். கழுத்தில் நெறிக்கட்டி வீக்கம், வயிற்றில் வீக்கம், எலும்பு வலி இதற்கான அறிகுறி. இரண்டாவதாக மூளை புற்றுநோய் இருக்கலாம். விடாத தலைவலி, எழுந்தவுடன் தொடர்ந்து வாந்தி, வாந்தி எடுத்தவுடன் தலைவலி சரியாவது, எழுதுவதில், நடப்பதில் தடுமாற்றம், வலிப்பு, கண் பார்வை குறைபாடு இதன் அறிகுறிகள்.
டாக்டர் ரமாபிரபாஹரி, ரத்தம் மற்றும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்
ரத்த புற்றுநோய் என்பது என்ன?
ரத்தத்திலோ, எலும்பு மஜ்ஜை அல்லது நெறிக்கட்டி உறுப்புகளிலோ உள்ள அணுக்கள் அதிக வளர்ச்சியடைந்து, கட்டுப்பாடு இல்லாமல் போகும் போது வருவது தான் ரத்த புற்றுநோய். முக்கியமாக லுக்கீமீயா, லிம்போமா, மல்டிபிள் மைலோமா ஆகிய மூன்று வகை அதிகமாக காண்கிறோம்.
கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்து தெளிவாக கூறவும்
இப்புற்றுநோய்க்கு, 99 சதவீதம் ஹெச்.பி.வி., எனும் வைரஸ் முதன்மையான காரணமாகவுள்ளது. இந்த வைரஸ், உடல் உறவு வாயிலாக பாட்னர்களுக்கு பரவுகிறது. பெண்கள் மக்கள் தொகையில், 80 முதல் 90 சதவீதம் பேருக்கு தானாகவோ, உடல் உறவு வாயிலாகவோ வருகிறது.
90 சதவீத பெண்களின் உடலில் இருந்து, நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக தானாக வெளியேறிவிடும். 10 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவால், கர்ப்பப்பை வாய் பகுதியிலேயே தங்கிவிடுகிறது.
இந்த வைரஸ் 10-15 ஆண்டுகள் கழித்து நிதானமாக புற்றுநோய் செல்களாக மாறிவிடும். ஹெச்.பி.வி.,பரிசோதனை செய்தால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து, வராமல் தடுக்க முடியும்.
தடுப்பூசி உள்ளதால், 99 சதவீதம் வராமல் தடுக்க முடியும். 9 முதல் 15 வயதுக்குள் உள்ள இருபாலர் குழந்தைகளுக்கு செலுத்திக்கொள்வது சிறந்த பலனை தரும். 15 வயதுக்கு மேலும் செலுத்த முடியும், ஆனால், வயது அதிகரிக்கும் போது அதன் தன்மை குறையலாம். உலக சுகாதார மைய அறிவுறுத்தலின் படி, 45 வயது வரை பெண்களும், 26 வயது வரை ஆண்களும் இத்தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம்.
டாக்டர் அன்புக்கனி, மகளிர் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர்
பெண்களுக்கு பொதுவாக வரும் புற்றுநோய் எவை?
பெண்களில், 50 சதவீத பேருக்கு மார்பகம், கர்ப்பப்பை புற்றுநோய் தான் அதிகம் காணப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீதத்தில், வாய் புற்றுநோய், நுரையீரல், சினைப்பை புற்றுநோய், பெருங்குடல் என தலை முதல் கால் வரை எங்கு வேண்டுமானலும் வரலாம்.
பெண்களுக்கு எதுபோன்ற ஸ்கிரீனிங், டெஸ்ட் தேவைப்படும்?
நாம் முதலில் ஸ்கிரீனிங் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். பலர் உடலில் ஏதேனும் தொந்தரவு வந்தபின் பரிசோதனைக்கு செல்வார்கள். ஸ்கிரீனிங் என்பது எந்த அறிகுறியும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் செய்வது. இதில், பெண்கள் மார்பகத்திற்கு மேமோகிராம் பரிசோதனை செய்துகொள்ளலாம்; ஐந்து நிமிடத்தில் முடிந்துவிடும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு ஹெச்.பி.வி., மற்றும் பாஸ்மியர் டெஸ்ட் எடுத்துகொள்ள வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருந்தாலும் இதை செய்துகொள்வது புற்றுநோய் வராமல் தடுக்கவும், வந்தால் முன்கூட்டி அறிந்து சிகிச்சை பெறவும் உதவும்.
பெண்களுக்கு வரும் புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறி?
பொதுவான அறிகுறிகள் ரத்தப்போக்கு. அதிகப்படியான ரத்தப்போக்கு, மாதவிடாய் அல்லாத நாட்களில் ரத்தபோக்கு, மெனோபாஸ்க்கு பின் ரத்தப்போக்கு ஏற்படுவது கர்ப்பப்பை சார்ந்த புற்றுநோயாக இருக்கலாம். புற்றுநோய் பரவிய பின்னர் அதிக எடை இழப்பு, அதிக சோர்வு, அடிவயிற்று பகுதியில் வலியும் அறிகுறிகளே. கர்ப்பப்பை வாய் புற்றுநோயை பொறுத்தவரையில் மூன்றாம் நிலை வரை கூட, எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்கலாம். ஆரோக்கியமாக இருக்கும் போதே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

