தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ஊகிக்க முடியாத நோய் தொற்றுகள்!

ஊகிக்க முடியாத நோய் தொற்றுகள்!

ஊகிக்க முடியாத நோய் தொற்றுகள்!

1


PUBLISHED ON : செப் 06, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல தலைமுறைகளாக பருவகால மாற்றங்களைக் கவனித்து, ஏற்படக்கூடிய நோய்த்தொற்றுகளை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நம் வழக்கம்.

குளிர்காலம் வந்தால், சளி, இருமல் பாதிப்பு ஏற்படும். கோடைக் காலத்தில், தோல் நோய்கள், ஒவ்வாமை பாதிப்பு வரலாம். பருவமழை காலத்தில், பெரும்பாலும் வைரஸ் காய்ச்சல்கள் வரும்.

ஆனால் இன்று, நமக்கு பழக்கமான இந்த பருவநிலை மாற்றங்கள் மாறி வருகின்றன. அதீத வெப்பம், எதிர்பாராத நேரத்தில் மழை, ஏற்ற இறக்கமான குளிர், காற்று என்று நம்மால் ஊகிக்க முடியாதபடி வானிலை மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த மாற்றங்களால், எத்தனை முறை வைரஸ் தொற்று ஏற்படும், சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதையும் நம்மால் கணிக்க முடிவதில்லை.

பலருக்கும் குளிரால் ஏற்படும் சளி, அதீத வெப்பத்தால் ஏற்படும் தோல் வறட்சி போன்றவை புளூ தொற்றா என்று தெரியாமல் குழம்பிய அனுபவம் நிச்சயம் இருக்கும்.

எதிர்பாராத பருவநிலை மாற்றங்கள், வைரஸ் கிருமிகள், வழக்கத்திற்கு மாறாக பரவுவதற்கு ஏதுவாக உள்ளது.

அதே நேரத்தில், பல நகரங்களில் தொடர்ந்து காற்று மாசடைந்து வருவது, நுரையீரலுக்கு கூடுதல் அழுத்தத்தை தருகிறது. கணிக்க முடியாத வானிலை, காற்று மாசு ஆகிய இரண்டு காரணிகளும் சேர்ந்து, சுவாச மண்டலத்தை பலவீனமாக்கி, எளிதாக தொற்று நோய்கள் ஏற்பட வழி செய்கின்றன.

பலருக்கும், தும்மல், இருமல், காய்ச்சல், சோர்வு, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிவது, தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. சிலருக்கு, ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகள் வரலாம்.

இவை, ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்பதால், சளி, ஒவ்வாமை, புளூ காய்ச்சல் என்பதைக் கண்டறிவது கடினம்.

ஆனாலும், இவற்றுக்கிடையிலான வேறுபாட்டை அறிந்து கொள்வது முக்கியம்; குறிப்பாக புளூ தொற்றுக்கு, சரியான நேரத்தில் சிகிச்சை செய்யாவிட்டால், தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சளி, புளூ காய்ச்சல் இரண்டுமே எதிர்பாராமல் வருவது தான் என்றாலும், புளூ காய்ச்சல் பாதித்தால் காய்ச்சல், கடுமையான உடல் வலி, தலைவலி, அதீத சோர்வு, வறட்டு இருமல் என்று அறிகுறிகள் தீவிரமாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பரில், தடுப்பூசி போட்டுக் கொண்டால், புளூ காய்ச்சலின் தீவிர பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, ஆழ்ந்த துாக்கம் ஆகியவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். வைட்டமின் சி, டி, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்திக்கு இயற்கையான பாதுகாப்பை தரும்.

டாக்டர் ஆர்.நரசிம்மன், சுவாசக் கோளாறு சிறப்பு மருத்துவர், சென்னை 94449 52803

drrnarasimhan@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us