குழந்தைகள் தவறான வார்த்தைகளை கற்றுக்கொள்ளாமல் இருக்க பெற்றோர் என்ன செய்யலாம்...
குழந்தைகள் தவறான வார்த்தைகளை கற்றுக்கொள்ளாமல் இருக்க பெற்றோர் என்ன செய்யலாம்...
PUBLISHED ON : ஆக 31, 2025

உங்கள் குழந்தை பள்ளி, வீடு, விளையாட்டு மைதானம் அல்லது வேறு எந்த இடத்திலிருந்தும் கெட்ட வார்த்தைகளை எளிதாக கற்று கொள்வதற்கான சூழல் இன்று அதிகமாக உள்ளது.
நீங்கள் எப்பேர்ப்பட்ட நல்ல சூழலில் உங்கள் குழந்தையை வளர்த்தாலும் சரி, கெட்ட அல்லது மோசமான வார்த்தைகளை அவர்கள் கற்று கொள்வதை உங்களால் முற்றிலும் தடுக்க முடியாது என்பதே யதார்த்தம்.
ஆனால் அவர்கள் பேசுவது கெட்ட வார்த்தைகள் என்ற கருத்தை ஆரம்பத்திலேயே அவர்கள் மனதில் விதைத்து விட்டால் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்த கூடாது என்பதை உங்கள் குழந்தை புரிந்து கொள்ள அது உதவும்.
உங்கள் குழந்தை கெட்ட வார்த்தைகளைப் பேசுவதிலிருந்தும் தடுக்க உதவும் டிப்ஸ்கள் சில...
* உங்கள் குழந்தை முதல் முறையாக ஒரு மோசமான அல்லது புண்படுத்தும் வார்த்தையை சொல்லும்போது, நீங்கள் அதிர்ச்சி மற்றும் கோபமடையலாம். ஆனால் நீங்கள் அந்த வார்த்தைக்கு தீவிர எதிர்வினையாற்றுவது உங்கள் குழந்தையை குழப்பமடைய செய்யலாம். இதை செய்ய கூடாது என்பதைப் புரிந்து கொள்வதற்கு பதில், சில குழந்தைகள் எதிர்காலத்தில் உங்கள் கவனத்தை ஈர்க்க இந்த வார்த்தைகளை பயன்படுத்த நினைக்கலாம். எனவே உங்கள் குழந்தை மோசமான வார்த்தைகளை பேசும் சூழலில், அந்த நிலையை அமைதியாக கையாள்வதை உறுதிப்படுத்துங்கள்.
* பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு இதுபோன்ற வார்த்தைகளின் அர்த்தம் கூட தெரியாது, மேலும் அவர்கள் இன்னும் அந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மிகவும் சிறியவர்களாக இருக்கலாம். அவர்களின் வயதின் அடிப்படையில் அவர்கள் சொல்லிய அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியுமா என்று அவர்களிடம் கேளுங்கள், பெரும்பாலும் தெரியாதென்று தான் சொல்வார்கள். மேலும் அது ஏன் ஒரு மோசமான சொல் என்பதை அவர்களுக்கு விளக்கி புரிய வைக்க முடியுமா என்று பாருங்கள்.
* உங்கள் குழந்தை வேறொருவரிடம் ஒரு கெட்ட அல்லது ஆபாசமான வார்த்தைகளை பேசினால், அதன் அர்த்தம் அவர்களுக்கு தெரிந்தாலும், தெரியாவிட்டாலும், இது போன்ற நடத்தையை ஏற்று கொள்ள முடியாது என்பதை விளக்கி சொலுங்கள். ஒருவேளை அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த கெட்ட வார்த்தையை சொல்கிறார்கள் என்றால், அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த சரியான வழிகளைக் கண்டுபிடிக்க கற்றுக்கொடுங்கள். வன்முறை அல்லது ஆபாசமான வார்த்தைகள் பேசுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கறாராக சொல்லுங்கள்.
* சிறு வயதிலேயே குழந்தைகள் தங்கள் எல்லா உணர்ச்சிகளையும் சரியாக வெளிப்படுத்த முடியாது, அவர்கள் தவறுகளைச் செய்து அதன் பிறகு அதனை சரி செய்வதன் மூலம் அவர்களின் குணாதிசயம் மற்றும் ஆளுமை வளரும். இந்த சூழலில் உங்கள் குழந்தை தற்செயலாக மோசமான வார்த்தைகளை பேசும் நிலையில் நீங்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் நிராகரித்தால், அவர்கள் செய்வது தவறு என்பது அவர்களுக்கே தெரியாமல் இருக்கும், இது மேலும் மோசமான வார்த்தைகளை பேச அவர்களை ஊக்குவிக்கக்கூடும். எனவே உங்கள் குழந்தை பெரியவர்கள் அல்லது வேறு யாரிடமாவது கெட்ட வார்த்தைகளை பேசி இருந்தால் அவர்களிடம் உங்கள் குழந்தை மன்னிப்பு கேட்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
* உங்கள் குழந்தைக்கு திட்ட வேண்டாம் என்று கற்று கொடுத்துவிட்டு நீங்களோ அல்லது வீட்டில் இருக்கும் வேறு நபர்களோ மோசமான வார்த்தைகளை அவர்கள் முன் பேசுவது எப்படி சரியான விஷயமாக இருக்கும். மோசமான வார்த்தைகள் பேச தெரியாத குழந்தைகள் கூட உங்களிடமிருந்து கற்று கொள்ளக்கூடும். எனவே குறைந்தபட்சம் உங்கள் குழந்தையின் முன்னிலையில் கெட்ட வார்த்தைகளை நீங்களோ உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் பேசாமல் தவிர்த்தல் நலம்.