குழந்தையின்மை ஏற்பட காரணம் என்ன? விரிவாக விளக்குகிறார் அரசு மருத்துவமனை மருத்துவர்
குழந்தையின்மை ஏற்பட காரணம் என்ன? விரிவாக விளக்குகிறார் அரசு மருத்துவமனை மருத்துவர்
PUBLISHED ON : பிப் 22, 2026

ஒரு குடும்பத்தின் ஆணிவேரே பெண்கள் தான். அவர்களின் ஆரோக்கியத்தில் தொடரும் அலட்சியம் பல குடும்பங்களின் அடித்தளத்தையே அசைத்து விடுகிறது. குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தங்கள் ஆரோக்கியத்துக்கும் பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார், கோவை அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் கீதா வீரமுத்து.
மாதவிடாய் முறைகேடு ஏன் ஏற்படுகிறது? எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?
ஹார்மோன் மாற்றங்கள், பி.சி.ஓ.எஸ். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால், வாழ்வியல் மாற்றம் சார்ந்த பழக்கங்கள், தைராய்டு பிரச்னை, அதிக உடல் எடை போன்றவை முக்கிய காரணங்கள்.
வழக்கமாக, 28 நாட்கள் என்பது சரியான சுழற்சி. இதில், ஐந்து நாட்கள் முன்னும், பின்னும் அதாவது, 23 நாட்கள் - 33 நாட்கள் சுழற்சி இருப்பது தவறில்லை.
மாதவிடாய் நாட்கள் 3 முதல் 7 நாட்கள் ரத்தப்போக்கு இயல்பானது. 50 -70 எம்.எல்., அளவு ரத்தப்போக்கு இருக்கலாம்.
இதில் மாற்றங்கள் இருந்தாலும், அதிக ரத்தப்போக்கு, வலி, கட்டியாக ரத்தம் வெளியேறுதல் இருப்பின் டாக்டரை அணுகவேண்டும்.
பி.சி.ஓ.எஸ். என்றால் என்ன? அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
நம் வாழ்வியல் மாற்றங்கள், பழக்கங்கள், விளையாட்டு, உடற்பயிற்சி இன்மை காரணமாக பி.சி.ஓ.எஸ்., 3ல் ஒருவருக்கு காணப்படுகிறது. ஹார்மோன் கோளாறு, கழுத்து பகுதியில் கருமை, உடல் எடை அதிகரிப்பு, முறையற்ற மாதவிடாய், முகப்பரு, தேவையற்ற முடி வளர்ச்சி, கருத்தரிப்பதில் சிரமம் போன்றவை இதன் அறிகுறி.
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு, பழக்கங்கள் என்ன?
காய்கறி, பழங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இட்லி, தோசை, சாதம் என மூன்று வேளையும் கார்போஹைட்ரேட் உணவு கூடாது. ஹோட்டல் உணவு தவிர்க்க வேண்டும். இனிப்பு, துரித உணவு முற்றிலும் வேண்டாம்.
கர்ப்ப காலங்களில் தாய் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் பழக்கங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்குமா?
கட்டாயம் பாதிக்கும். கர்ப்ப காலங்களில் தவறான உணவு முறை, வீடுகளில் பிரச்னை, மன அழுத்தம், அழுகை, கோபம், டாக்டர்கள் பரிந்துரையின்றி மருந்துகள் எடுப்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் என அனைத்தும் குழந்தைகளின் உடல், மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல இசை கேட்பது, உடற்பயிற்சி, புத்தக வாசிப்பு, அழகான மற்றும் அமைதியான சுழல் என நம்மை சுற்றி, நேர்மறையான விஷயங்கள் இருப்பது சிறப்பு. கொலை, வன்முறை படங்கள் காண்பதை தவிர்க்கலாம்.
வயிற்று வலி, வெள்ளைப்போக்கு எப்போது ஆபத்தானது?
வெள்ளைப்போக்கு மாதவிடாய் முன்பும், பின்பும் வருவது இயல்பு. திரித்த தயிர் போன்று வருவது, ரத்தம் கலந்த நிறத்தில் வருவது, துர்நாற்றம், அரிப்பு, எரிச்சல், கடுமையான வலி இருப்பின் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும்.
கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
கருத்தரிக்க முடியாமல் போக பெண்கள், ஆண்கள், சுற்றுச்சூழல் ஆகிய மூன்றுக்கும் சமபங்கு உள்ளது. வாழ்வியல் மாற்றம், உடல் பருமன், தரமில்லாத கரு முட்டை, தரமில்லாத விந்தணு, தவறான பழக்கங்கள், துாக்கமின்மை, அதிக மொபைல் பயன்பாடு, பருவநிலை மாற்றம் என சொல்லிக்கொண்டே போகலாம்.
மாதவிடாய் நிறுத்தம் (மெனோ: பாஸ்) காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்ன?
மன அழுத்தம், துாக்கமின்மை, கோபம், உடல் எடை அதிகரிப்பு, எலும்பு பலவீனம் போன்ற பல பிரச்னைகளை எதிர்கொள்வார்கள். இந்த காலத்தில் குடும்பத்தினரின் முழு ஆதரவு அவர்களுக்கு வேண்டும்.
கர்ப்பப்பை புற்றுநோயை எப்படி தடுப்பது?
பெண்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கூச்சம், சங்கடம், தயக்கம், அச்சம் தேவையில்லை. வலியில்லாத சிறிய பரிசோதனை செய்து கொண்டால் இந்நோய் வராமல் தடுக்கலாம். கர்ப்பப்பையில் சாதாரணமாக ஏற்படும் புண் பத்து ஆண்டுகள் கழித்து புற்றுநோயாக மாறுகிறது.
பெண்கள் எந்த வயதில் இருந்து தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்?
உடலில் ஏதேனும் பிரச்னைகள், மாற்றங்கள் இருந்தால் டாக்டரை உடனடியாக அணுக வேண்டும். பாதிப்பு இல்லை எனில், 21 வயதுக்கு மேல் அடிப்படை பரிசோதனைகள், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனைகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது செய்துகொள்ள வேண்டும்.
- டாக்டர் கீதா வீரமுத்துமகப்பேறு, மகளிர் நல சிறப்பு நிபுணர்,
98430 51001
geethaveeramuthu.me@gmail.com

