டெங்கு பாதிப்பு தடுக்க வழி மருத்துவர்கள் கூறுவது என்ன?
டெங்கு பாதிப்பு தடுக்க வழி மருத்துவர்கள் கூறுவது என்ன?
PUBLISHED ON : செப் 20, 2026

நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை எட்டு மாதங்களில் 12 ஆயிரத்து 543 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஏடிஸ்' வகை கொசு கடிப்பதன் மூலம் டெங்கு பரவுகிறது. தொடர்ந்து குறையாமல் இருக்கும் காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களில் வலி, மூட்டு வலி, சளி, இருமல், கடுமையான வயிற்று வலி, தொடர்ந்து வாந்தி எடுத்தல் போன்றவை டெங்குவின் முக்கிய அறிகுறிகளாகும்.
தடுப்பது எப்படி? டெங்கு குறித்து விழிப்புணர்வுடன் இருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதன் பரவலை தடுக்க முடியும். காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனைப்படி ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ரத்த தட்டையணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்து, அதற்கேற்ப சிகிச்சையை உடனடியாக துவங்க வேண்டும்.
வீடுகளில் தரமான கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம். மழைநீர் மற்றும் தேங்கி நிற்கும் சுத்தமான நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. எனவே, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும். எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குடங்கள், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் உள்ளிட்டவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் வைக்கும் பாத்திரங்களை திறந்த நிலையில் வைக்காமல் மூடி வைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் தொட்டிகள் உள்ளிட்டவற்றில்தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
வீட்டு ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு வலைகளை பொருத்திக் கொள்ளலாம். டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய மருத்துவ வசதிகள் உள்ளன.
