இன்றைய குழந்தைகளுக்கு தேவை மீண்டெழுந்து நிற்கும் மனவலிமை!
இன்றைய குழந்தைகளுக்கு தேவை மீண்டெழுந்து நிற்கும் மனவலிமை!
PUBLISHED ON : செப் 20, 2026

பெரியவர்களை விடுங்கள்...இன்று குழந்தைகளையும் பாதிக்கிறது மனஅழுத்தம்!
தேர்வில் குறைந்த மதிப்பெண், நண்பனிடம் இருப்பது தன்னிடம் இல்லாத ஏக்கம், பெற்றோரின் சிறிய கண்டிப்பு, நினைத்தது உடனடியாக நடக்காத ஏமாற்றம் போன்றவை காரணமாக இருக்கின்றன.
சமீபத்தில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய சிறுவனிடம் இருந்து அவரது தாய் அதை பறித்துள்ளார். அதை ஏற்க முடியாத சிறுவன் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளான்.
''சிறிய ஏமாற்றங்கள் கூட, குழந்தைகளுக்கு மிகப்பெரிய தோல்வியாகத் தோன்றலாம். அவர்களின் திறமையை மதிப்பெண்களால் மட்டுமே தீர்மானிக்கக் கூடாது'' என்கிறார், மனநல மருத்துவர் பவித்ரா மோனி.
அவர் கூறியதாவது:
ஒரு குழந்தை படிப்பில் சராசரியாக இருந்தாலும், பிற துறைகளில் பட்டய கிளப்பலாம். மதிப்பெண் குறைந்தவுடன் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது தன்னம்பிக்கையைப் பாதிக்கும்.
“நீ தேர்வில் தோல்வியடையலாம்; ஆனால் நீயே ஒரு தோல்வி அல்ல” என்ற புரிதலை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்.
குழந்தைகள் தங்கள் பிரச்னைகளைப் பகிரும்போது, “உனக்கு என்ன தெரியும்?” என்று நிராகரிக்காமல், அவர்களின் பேச்சை பொறுமையாகக் கேட்க வேண்டும்.
தவறு செய்தால், “என்ன நடந்தது?”, “உனக்கு எப்படி இருந்தது?”, “இதிலிருந்து எப்படி வெளியே வரலாம்?” என்று அவர்களுடன் இணைந்து பேச வேண்டும்.
பெற்றோரிடம் எதையும் தயக்கமின்றிப் பகிரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த இந்த அணுகுமுறை உதவும்.
ஆசிரியர்களிடமும் பிரச்னைகளை பகிரக்கூடும். அவர்கள் அவற்றை பாதுகாப்பது அவசியம். அதேநேரம், மாணவரின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிந்தால், உரிய மனநல நிபுணரின் உதவியைப் பெற வேண்டும்.
குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, அவர்களின் பேச்சைக் கேட்பது, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது முக்கியம். போதிய தூக்கம், விளையாட்டு, பொழுதுபோக்கு, அளவான திரை நேரம் மற்றும் குடும்பத்துடன் பேசும் நேரத்தையும் வழங்க வேண்டும்.
தோல்வியடைந்தாலும் மீண்டும் எழுந்து நிற்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
மனதில் இருப்பதைப் பகிர்வதற்கான பாதுகாப்பான சூழலை பெற்றோரும் ஆசிரியர்களும் உருவாக்க வேண்டும்.
குழந்தைகள் தங்கள் பிரச்னைகளைப் பகிரும்போது, “உனக்கு என்ன தெரியும்?” என்று நிராகரிக்காமல், அவர்களின் பேச்சை பொறுமையாகக் கேட்க வேண்டும். தவறு செய்தால், “என்ன நடந்தது?”, “இதிலிருந்து எப்படி வெளியே வரலாம்?” என்று அவர்களுடன் இணைந்து பேச வேண்டும். பெற்றோரிடம் எதையும் தயக்கமின்றிப் பகிரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த இந்த அணுகுமுறை உதவும்.
அலட்சியப்படுத்தாதீர்!
''குழந்தை நெருங்கியவர்களிடம் இருந்து விலகுவது, படிப்பில் ஆர்வம் குறைவது, அடிக்கடி கோபப்படுவது, அழுவது, வெளியே செல்ல மறுப்பது போன்ற மாற்றங்களை அலட்சியப்படுத்தக் கூடாது. “வாழவே பிடிக்கவில்லை” போன்ற வார்த்தைகளை குழந்தை கூறினால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக கவனித்து, தேவையானால் மனநல நிபுணரின் உதவியை நாட வேண்டும்'' என்கிறார் டாக்டர் பவித்ரா மோனி.
