PUBLISHED ON : செப் 29, 2026
குழந்தைகளுக்கு வயிற்றுவலி என்பது மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்னைகளில் ஒன்றாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வாயுத் தொல்லை, லேசான அஜீரணம் அல்லது உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்படும் இந்த வலி சில மணி நேரங்களில் அல்லது ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். இருப்பினும், சில குறிப்பிட்ட மற்றும் தீவிரமான அறிகுறிகளுடன் வயிற்றுவலி சேர்ந்தால், அதை சாதாரண விஷயமாக கடந்து சென்றுவிடக் கூடாது.
குழந்தைகளிடம் காணப்படும் இந்த அறிகுறிகள் தீவிர தொற்று, குடல் பிரச்னை, அப்பெண்டிக்ஸ் அழற்சி அல்லது வேறு மருத்துவ அவசரநிலைகளைக் குறிக்கக்கூடும். பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அறிகுறிகளை இங்கே பார்க்கலாம்.
வலி மிகவும் கடுமையாக இருந்தால்:
சாதாரண வயிற்றுவலி என்றால் குழந்தைகள் லேசாக வலிப்பதாகச் சொல்லிவிட்டு தங்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். ஆனால், வலி தாங்காமல் குழந்தை தொடர்ச்சியாக சத்தமாக அழுவது, வலியால் சுருண்டு படுப்பது அல்லது எந்த செயலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது போன்ற நிலை இருந்தால், அது சாதாரண வயிற்றுவலி அல்ல. இந்த கடுமையான வலிக்கு உடனடி மருத்துவ ஆலோசனை அவசியமாகும்.
மலத்தில் ரத்தம் காணப்படுவது:
வயிற்றுவலியுடன் சேர்ந்து குழந்தையின் மலத்தில் ரத்தம் காணப்படுவது மிகவும் ஆபத்தான அறிகுறியாகும். இது குடல் தொற்று, குடல் அழற்சி நோய் அல்லது வேறு செரிமான மண்டல பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறி தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.
வாந்தியில் ரத்தம் அல்லது பித்த நீர் வெளியேறுவது:
குழந்தை தொடர்ந்து வாந்தி எடுக்கும் போது சிறிதளவு ரத்தம் தோன்ற வாய்ப்புள்ளது. ஆனால், வயிற்றுவலியுடன் சேர்த்து ரத்த வாந்தி எடுத்தால், அது ஆபத்தான உடலின் உள் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், அடர் மஞ்சள் அல்லது பச்சை நிற வாந்தி எடுப்பது குடலில் கடுமையான அடைப்பு இருப்பதை காட்டுகிறது. இது ஒரு மருத்துவ அவசர நிலையாகும்.
முகம் வீங்குதல், தோலில் தடிப்பு அல்லது மயக்கம்:
காய்ச்சலுடன் கூடிய கடுமையான இருமல் சில குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று அல்லது நிமோனியா பாதிப்பு ஏற்படும் போது, அது நேரடியாக மார்பில் மட்டுமின்றி வயிற்றுவலியாகவும் வெளிப்படும். அதிக காய்ச்சலும் கடுமையான இருமலும் இருந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
காரணமின்றி உடல் எடை குறைவது:
வயிற்றுவலி அடிக்கடி ஏற்படுவதோடு, குழந்தையின் உடல் எடை குறைந்து கொண்டே செல்வது அல்லது வளர்ச்சி தடைபடுவதை சாதாரணமாக கருத முடியாது. இது குடல் அழற்சி நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு போன்ற நீண்டகால மருத்துவப் பிரச்சினைகளைக் குறிக்கலாம்.
குழந்தைகளின் வயிற்றுவலி எப்போது ஏற்படுகிறது, எதைச் சாப்பிட்ட பிறகு அதிகரிக்கிறது, மலம் மற்றும் சிறுநீரில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா என்பதைத் துல்லியமாகக் கவனித்து வைத்துக் கொள்வது, மருத்துவர் சரியான காரணத்தைக் கண்டறிய பெரிதும் உதவும்.
