PUBLISHED ON : ஏப் 12, 2026

புரதச்சத்து குறைபாடு, பெண்களிடையே மிகவும் பொதுவான விஷயமாக உள்ளது. பல பெண்கள், தினசரி புரத தேவைக்கு ஏற்ற உணவை சாப்பிடுவதுஇல்லை. புரதச்சத்து குறைபாடு என்பது, வெளியில் தெரியாத பிரச்னையாக இருந்து வருகிறது.
ஒவ்வொருவரும் அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப, ஒரு கிலோவிற்கு ஒரு கிராம் புரதம் என்ற அளவில் சாப்பிட வேண்டியது அவசியம். கண்டிப்பாக தினசரி உணவில், குறைந்தபட்சம் 50 - -60 கிராம் புரதம் இடம் பெற வேண்டும்.
அறிகுறிகள்
முடி உதிர்தல், சோர்வு மற்றும் பலவீனம், அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்றுகள், தசை இழப்பு, பொலிவிழந்த வறண்ட சருமம் போன்றவை. இது போன்ற அறிகுறிகள் இருப்பதை பெரும்பாலும் அலட்சியம் செய்கிறோம். உண்மையில், தினசரி புரதச்சத்து தேவைக்கு ஏற்ற உணவு இல்லாதது தான் பிரதான காரணம்.
பெண்கள் ஏன் புரதச் சத்தை குறைவாக சாப்பிடுகின்றனர்?
நம் உணவுப் பழக்கம் மொத்தமும் இட்லி, தோசை, சோறு, உப்புமா, பூரி என்று கார்போஹைட்ரேட் நிறைந்ததாக உள்ளன.
ஒரு சில சமயங்களில் உணவைத் தவிர்ப்பது, அடிக்கடி விரதம் இருப்பது, புரதத்தின் தேவை பற்றிய புரிதல் இல்லாதது பிற காரணங்கள். நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள், சாப்பிட்டதும், வயிறு நிரம்பச் செய்தாலும், அவற்றில், ஊட்டச்சத்து சமநிலையுடன் இருப்பதில்லை.
புரதம் நிறைந்த உணவுகள்
பருப்பு, கொண்டைக் கடலை, ராஜ்மா, பனீர், உலர் கொட்டைகள், விதைகள், முட்டை, கோழி, மீன். ஒவ்வொரு வேளை உணவிலும், குறைந்தது ஒரு புரத உணவாவது இடம் பெறும்படி கவனமாக இருக்க வேண்டும்.
தினசரி உணவு
காலையில் இட்லி, சாம்பார், முட்டை; மதிய உணவில் சாதம், பருப்பு, காய்கறிகள், தயிர், முட்டை / கோழி; மாலை யில், உலர் கொட்டைகள் அல்லது சுண்டல்; இரவு உணவுக்கு, சப்பாத்தி, பனீர்/பருப்பு என்று சாப்பிடலாம்.
புரதத்தை ஒரே வேளை உணவில் உட்கொள்வதை விட, நாள் முழுதும் பிரித்து உட்கொள்வது அதிக நன்மை பயக்கும்.
ஒரு சில நாட்கள் மட்டும் இதை பின்பற்றி, அதன் பின் வழக்கமான கார்போஹைட்ரேட் உணவுகளையே சாப்பிட துவங்கி விடுகிறோம். இதற்கு காரணம், புரதத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்வதில்லை. வழக்கத்தில் இருந்து மாறும் போது, அதை முழுமையான மனதுடன் பின்பற்றுவதில்லை. இது தான் நல்லது என்று சொன்னால், உடனடியாக பலனை எதிர்பார்க்கிறோம்.
புரதம் சாப்பிட்டால் எடை குறையும் என்று சொன்னீர்களே... நான்கு வாரம் சாப்பிட்டேன். ஒன்றும் வேறுபாடு தெரியவில்லையே என்பார்கள். வழக்கமாக்கினால் தான் பலன் தெரியும்.
உடல் எடை குறைப்பு என்பது ஒரு படிப்படியான அணுகுமுறை. குறுக்குவழியில் சென்று அடைய முடியாது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் வரும் உணவு முறைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்றவே கூடாது. ஒரே உணவு முறை அனைவருக்கும் பொருந்தாது.
குறுகிய காலத்தில் எடை குறைப்பதால் ஏற்படும் விளைவுகள்:
* தசை இழப்பு
* சோர்வு
* முடி உதிர்தல்
* மெதுவான வளர்சிதை
* குறைத்த எடை மீண்டும் அதிகரிப் பதற்கான வாய்ப்பு.
சுபத்ரா சுந்தர், தலைமை உணவியல் நிபுணர், கொங்குநாடு மருத்துவமனை, கோவை.97862 45225subathraasundar@gmail.com

