PUBLISHED ON : செப் 27, 2026

இளநரை என்பது வயதை மட்டும் பிரதிபலிப்பதல்ல. மரபியல், ஊட்டச்சத்து குறைபாடு, வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்களாலும் நரை ஏற்படலாம் என்கிறார் டாக்டர் மகாதேவன்.
தலைமுடிக்கு கருப்பு அல்லது பழுப்பு நிறத்தை வழங்குவது மெலனின் . இதை உற்பத்தி செய்யும் செல்கள் மெலனோசைட்கள் எனப்படுகின்றன. மெலனின் உற்பத்தி குறையும்போது தலைமுடி வெள்ளை நிறமாக மாறுகிறது.
புரோட்டின், வைட்டமின் பி12, வைட்டமின் டி,புரதம், பயோட்டின், கால்சியம், தாமிரம், செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடு தலைமுடியின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
துரித உணவு அதிகம் உட்கொள்வது, உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது போன்ற வாழ்க்கை முறைகளும் ஊட்டச்சத்து சமநிலையை பாதிக்கக்கூடும்.
உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தமும் மெலனோசைட் செல்களை பாதித்து நரை தோன்றுவதற்கு காரணமாக இருக்கலாம்.
அதேநேரத்தில், குடும்பத்தில் இளம் வயதிலேயே நரை இருந்தால், மரபியல் காரணமாகவும் இளநரை ஏற்படலாம்.
இளநரையுடன் முடி உதிர்தல் அல்லது முடி மெலிதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் முடியின் நிலையை அறிய, 'டிரைகோகிராம்' டெஸ்ட் செய்து பார்க்கலாம்.
சத்து குறைவினால் ஏற்பட்டால், சத்து மாத்திரைகள் அல்லது உணவு முறை மூலம் சரிசெய்யலாம். ஆனால் மரபணு மூலம் ஏற்படும் நரையை சிகிச்சை முலம் சரிசெய்ய முடியாது; இதற்கு ஹேர் டை பயன்படுத்தலாம்.
ஹேர்டை...ஜாக்கிரதை!
நரையை மறைக்க ஹேர் டை பயன்படுத்துபவர்கள் கவனம் தேவை. ஹேர் டையில் பயன்படுத்தும் சில ரசாயனங்கள் ஒத்துக்கொள்ளாமல் போகக்கூடும் என்பதால், பயன்படுத்துவதற்கு முன் டெஸ்ட் செய்வது அவசியம். இயற்கை சார்ந்த மருதாணி, நெல்லிக்காய் போன்ற பொருட்களும் பயன்படுத்தப்படுகின்றன.
