PUBLISHED ON : அக் 19, 2025

இதயத்துடிப்பு சீரற்றதாகவோ, மிக மெதுவாகவோ, மிக வேகமாகவோ இருந்தால், படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம், சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதிகரித்து வரும் இப்பிரச்னைக்கு பெரும்பாலும் 'பேஸ்மேக்கர்' பொருத்துவது தான் தீர்வு.
இதயத் துடிப்பை இயல்பாக்கவும், சீரற்ற மின் அதிர்வுகளால் ஏற்படும் அறிகுறிகளைப் போக்கவும் பேஸ்மேக்கர் பயன்படுகிறது.
மின் சாதனமான இக் கருவி, இதய அறைகளுக்கு இடையே உள்ள மின் துாண்டுதல்களை ஒழுங்கு படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
தற்போது வழக்கத்தில் உள்ள பேஸ்மேக்கரில், துடிப்பைத் துாண்டும் பல்ஸ் ஜெனரேட்டர், இதயத்துடன் பேஸ்மேக்கரை பொருத்த வசதியாக மின் முனையுடன் இணைந்த தாமிரக் கம்பிகள் இருக்கும்.
கழுத்து எலும்பின் கீழ் பொருத்தப்பட்டு, இதயத்தின் மேல், கீழ் அறைகளுடன் தாமிர கம்பிகள் இணைக்கப் படும்.
அறுவை சிகிச்சை செய்து மேல் தோலுக்கு கீழ் பேஸ்மேக்கர் பொருத்த சில நாட்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்க வேண்டும்.
கருவி பொருத்தப்பட்ட பகுதியில் தோல் சற்று மேடாக தெரியும். இதயத் துடிப்பை சீராக்க செயற்கை கருவியை சார்ந்திருக்கிறோம் என்ற எண்ணம் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது தவிர, தொற்றுகள், கருவி பொருத்திய இடத்தில் வீக்கம், ரத்தக் கசிவு, ரத்தக் குழாயில் அடைப்பு, கம்பி முறிவு உட்பட பல பக்க விளைவுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
அறுவை சிகிச்சை செய் வதால் ஏற்பட்ட தழும்புகள், வீக்கம் அதிக நாட்கள் இருக்கும்.
இதற்கு மாற்றாக தற்போது ஒயர்லெஸ் பேஸ்மேக்கர் அறிமுகம் ஆகியுள்ளது.
தோலுக்கு கீழ் அறுவை சிகிச்சை செய்து, வழக்கமான பெரிய வைட்டமின் மாத்திரை அளவில் உள்ள பேஸ் மேக்கர் பொருத்து வதற்கு பதிலாக, இந்த ஒயர்லெஸ் பேஸ்மேக்கரை, இடுப்புப் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் வழியாக செலுத்தி, நேரடியாக இதயத்தின் கீழ் வலது அறைக்குள் பொருத்துவோம்.
பேஸ்மேக்கர், -இதய அறைகளை இணைக்கும் கம்பிகள் அவசியம் இல்லாததால் நோய்த்தொற்று அபாயம் குறையும்; தழும்பும் ஏற்படாது.
இதயத்தின் இயல்பான துடிப்பை அறிந்து செயல்படும் நுண்ணறிவு வழி முறைகள் உடையது இந்த புதிய கருவி.
இது இதயத்தின் கீழ் அறையில் பொருத்தப்பட்டு, மேல் அறையுடன் இயல்பான தொடர்பை ஏற்படுத்துகிறது. முழுமை யான இதய அடைப்பு உள்ளவர்களுக்கு, இது இதயத்தின் இரண்டு வலது அறைகளுக்கும் இடையே தடையற்ற ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, இயல்பான இதயத் துடிப்பை உறுதி செய்கிறது.
இந்த புதிய பேஸ்மேக்கர் வழக்கமான பேஸ்மேக்கர் களைப் போல, மார்புத் தோலின் கீழ் தழும்போ, இதயம் சீராக செயல்பட ஒரு கருவி பொருத்தப்பட்டு உள்ளது என்ற உணர்வையோ தராது.
இதனால் மன அழுத்தம் வெகுவாக குறைந்து, பாது காப்பு உணர்வு ஏற்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தால், அறுவை சிகிச்சை தொடர் பான சிக்கல்கள் 63 சதவீதம் குறைவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
எனினும், கம்பியில்லா பேஸ்மேக்கரைப் பொருத்த சிறப்புத் திறனும், நிபுணத்துவமும் தேவைப்படும்.
டாக்டர் ஏ.எம். கார்த்திகேசன், மூத்த இதய மின்னியல் நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை 99622 52500consult@drkarthigesanclinic.com