புற்றுநோய் வராமல் தடுக்கலாம்! உணவில் இருக்கிறது ரகசியம்
புற்றுநோய் வராமல் தடுக்கலாம்! உணவில் இருக்கிறது ரகசியம்
PUBLISHED ON : ஆக 02, 2026

உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, உடல் பருமன் உள்ளிட்ட பல காரணிகளால் தற்போது இளம் வயதினருக்கும் புற்றுநோய் வருவது அதிகரிக்கிறது என்கிறார், அரசு மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் டாக்டர் செல்வராஜ்.
இளம் வயதினருக்கும் புற்றுநோய் வருவது ஏன்?
முக்கிய காரணம் நமது உணவுப் பழக்கமும், உணவு தயாரிப்பு மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுமே.
பூச்சிக்கொல்லி மருந்துகள், பதப்படுத்தும் ரசாயனங்கள், செயற்கை நிறமிகள், சுவையூட்டிகள் உடலுக்குள் சேரும்போது புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது. தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதால், இந்த ரசாயனங்களின் தாக்கமும் அதிகமாகிறது. அதேபோல், உடலில் தேவை யை விட அதிகமாகச் சேரும் கொழுப்பிலிருந்து உருவாகும் நச்சு வேதிப்பொருட்களும், இளம் வயதிலேயே புற்றுநோய் உருவாக முக்கிய காரணமாக உள்ளன.
புற்றுநோயை தடுக்கவும் மரணங்களைக் குறைக்கவும் என்ன செய்ய வேணடும்?
இயற்கையான, ரசாயனங்கள் கலக்கப்படாத, பாக்கெட்டுகளில் அடைக்காத உணவை சாப்பிட வேண்டும். அளவாக சாப்பிட்டு, தினமும் உடற்பயிற்சி செய்து, உடல் எடையைச் சரியான அளவில் பராமரிப்பது அவசியம். குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்ல உணவுப் பழக்கத்தை சொல்லித்தர வேண்டும்.
அறிகுறிகளே இல்லாமல் புற்றுநோய் வருமா?
ஆரம்ப நிலையில் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் தெரியாது. குறிப்பாக, மார்பகத்திலோ அல்லது உடலின் வேறு பகுதிகளிலோ வலியில்லாத கட்டி இருந்தால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இதனால் நோய் முற்றிய நிலைக்குச் சென்று விடுகிறது.
சிகிச்சை முடிந்த பிறகு பாலோ-அப் அவசியமா?
நிச்சயமாக அவசியம். சிகிச்சை முடிந்த பிறகு அடுத்த ஐந்து ஆண்டுகள் வரை மருத்துவர் கூறும் கால அட்டவணைப்படி தவறாமல் பரிசோதனை செய்ய வேண்டும். புற்றுநோய் மரபணு மாற்றங்களுடன் தொடர்புடைய நோய் என்பதால், சிலருக்கு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. நோய் முற்றிய நிலையில் இருந்தால் அதே உறுப்பில் மீண்டும் வரலாம். சிலருக்கு உடலின் வேறு உறுப்பிலும் இரண்டாவது புற்றுநோய் ஏற்படலாம்.
புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன?
புற்றுநோய் கட்டியை 99 சதவீதம் வரை அகற்ற அறுவை சிகிச்சையே சிறந்த வழி. கட்டி பெரியதாக இருந்தால் முதலில் கீமோதெரபி அளித்து, கட்டியை சுருக்கி, அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம். தற்போது இம்யூனோதெரபி, டார்கெட்டட் தெரபி போன்ற சிகிச்சை முறைகளும் கிடைக்கின்றன. இவை ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல், புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்து அழிப்பதால், கீமோதெரபியுடன் ஒப்பிடும்போது பக்கவிளைவுகள் குறைவு.
ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிவது எப்படி?
வாய் அல்லது தொண்டையில் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆறாத புண் இருந்தாலோ, உணவு விழுங்குவதில் சிரமம் நீடித்தாலோ உடனடியாக எண்டோஸ்கோபி பரிசோதனை செய்ய வேண்டும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை 'மேமோகிராம்' பரிசோதனை செய்வது அவசியம். உடலின் எந்தப் பகுதியிலும் கட்டி தெரிந்தால், அதை பயாப்ஸி அல்லது எப்.என்.ஏ.சி. (FNAC) போன்ற பரிசோதனைகள் மூலம், அது புற்றுநோயல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும். சின்ன கட்டி ஆனாலும் அலட்சியம் வேண்டாம்.
டாக்டர் செல்வராஜ்
98406 26838.
drsels06@gmail.com
