PUBLISHED ON : செப் 06, 2026

உணவு, சில பயிற்சிகள், மருந்துகள் மூலம் இழந்த பார்வையை மீண்டும் பெற முடியுமா என, அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு இணை பேராசிரியர் டாக்டர் சரவணனிடம் கேட்டோம்.
நம்மிடம் அவர் பகிர்ந்தவை:
குழந்தைகள் கண்ணாடி அணிவது ஏன் அதிகரித்து வருகிறது? செல்போன் மட்டும்தான் காரணமா?: செல்போன் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. குழந்தைகளிடம் கிட்டப்பார்வை அதிகரிப்பதற்கு மரபியல் காரணங்களுடன் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் காரணம். பெற்றோருக்கு கிட்டப்பார்வை இருந்தால் குழந்தைக்கும் ஏற்படலாம்.
அதே நேரத்தில், குழந்தைகள் நீண்ட நேரம் மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் பார்ப்பது, தொடர்ந்து அருகில் வைத்து படிப்பது போன்ற நடவடிக்கைகள், வெளிப்புற விளையாட்டு நேரம் குறைவதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
குழந்தைகளின் கண்ணாடி பவர் அதிகரிப்பதைத் தடுக்க முடியுமா?: குழந்தை வளரும் போது, கண் வளர்ச்சிஅடைவதால், பவரிலும் மாற்றம் ஏற்படலாம்.
ஆனால், கிட்டப்பார்வை வேகமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த, தொடர்ந்து நீண்ட நேரம் அருகில் வைத்து பார்க்காமல் இடைவெளி விட வேண்டும்.
புத்தகம் அல்லது திரையை கண்களுக்கு மிக அருகில் வைத்துப் பார்க்கக்கூடாது.
ஏசி அறை: ஆம். இதை தவிர்க்க ஒரு நிமிடத்திற்கு 16 முறை கண் சிமிட்ட வேண்டும். இது குறையும் போது, கண்களின் மேற்பரப்பில் உள்ள கண்ணீர்ப்படலம் வேகமாக ஆவியாகி கண் வறட்சி, எரிச்சல், மணல் விழுந்தது போன்ற உணர்வுஏற்படலாம். ஏசி.,யின் கீழ் அமர்வதாலும் பேன் முன் நீண்ட நேரம் அமர்வதாலும், கண்களில் ஈரப்பதம் ஆவியாவது அதிகரிக்கலாம்.
சர்க்கரை நோய்க்கும் பார்வை இழப்புக்கும் என்ன தொடர்பு?: சர்க்கரை நோய் நீண்ட காலம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், கண்களின் பின்பகுதியில் உள்ள விழித்திரையின் சிறிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படலாம். இதை டயாபடிக் ரெட்டினோபதி என்கிறோம். ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமலேயே விழித்திரையில் பாதிப்பு ஏற்படலாம். எனவே பார்வை நன்றாக இருக்கிறது என்பதற்காக கண் பரிசோதனையைத் தவிர்க்கக்கூடாது.
கண் பயிற்சி அல்லது உணவு மூலம் மீண்டும்: இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல தவறான தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே ஏற்பட்ட பார்வை பாதிப்பை முழுமையாக சரிசெய்ய முடியும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. சத்தான உணவு கண் ஆரோக்கியத்திற்கு அவசியம். ஆனால், அது ஏற்கனவே ஏற்பட்ட பார்வை பாதிப்பில் இருந்து முற்றிலும் மீட்டு தரும் என கூற முடியாது.
